மனசில பட்டதை... (36)
எது வைகுண்டம்? எது ஏகாதசி? எது சொர்க்க வாசல்?பின்னிரவின் இருட்டும், விலகாத பனியின் குளிரும் பின்னிப் பிணைந்திருக்கும் பொழுது. உஷத் காலத்தின் புனிதமும், அதிகாலையின் பவித்ரமும் இணைந்திருக்கும் பொழுது. அந்தகார இருட்டினை விலக்க, ஒரு சிறிய அகல் விளக்கு ஏற்றினாலும் பூமியே வெளிச்சமாகும். இந்தப் பொழுதில் திறக்கப்படும் சொர்க்கவாசல், பிறப்பு இறப்பு சங்கிலித் தொடரிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பது யுகாந்திரமான பாரம்பரியம்... பண்பாடு... நம்பிக்கை...இப்போது மீண்டும் கேட்டுக் கொள்வோம் நம்மிடமே ஒரு கேள்வி. எது வைகுண்டம்? எது ஏகாதசி? எது சொர்க்கவாசல்? பத்மபுராணம் என்ன சொல்கிறது தெரியுமா? விஷ்ணுவின் பெண்சக்தி, முரன் என்னும் அரக்கனை அழித்துத் தேவர்களைக் காத்தருளியதால் பெண் சக்தியை 'ஏகாதசி' என்று விஷ்ணு அருளிச் செய்தார்.முரன் என்னும் அரக்கனை வென்ற ஏகாதசியை வணங்குபவர்கள் வைகுந்தம் செல்வார்கள்... விஷ்ணுவின் திருத்தலமான வைகுந்தப் பதவி செல்வார்கள்... வைகுந்த பாக்கியம் கிடைக்கும். சொர்க்க வாசல் திறந்து விஷ்ணுவோடு ஐக்கியமாகலாம்... சொர்க்கவாசல் கடந்து விஷ்ணுவோடு ஐக்கியமாகலாம்... பகல் பத்து, ராப்பத்து கடந்து, முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை சாத்தி, அன்றொரு நாள் விரதமிருந்து, அந்த வருஷத்தின் இருபத்திமூன்று ஏகாதசியிலும் விரதம் இருந்த பெரும்பலனை பெறுவது தான் வைகுண்ட ஏகாதசியின் தாத்பர்யம்.அன்றொருநாள் விரதம்... அன்றொருநாள் விஷ்ணு தரிசனம்... சொர்க்கவாசல் கடக்கும் பாக்கியத்தையும், வரத்தையும் நமக்குத் தருகிறது.துவாதசி அன்று துளசி தீர்த்தம், தொடரும் பத்திய உணவு, கருப்பு உளுந்து, அகத்திக்கீரை, நெல்லிக்கனி, தயிர் சேர்ந்ததாக அமைவது பாரம்பர்யம்.திருப்பதி, ஸ்ரீரங்கம், பத்ராசலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள்... இப்படி இங்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வைகுண்ட ஏகாதசி வைபவம் பெருமாளை நமக்கு உள்ளும், புறமும், உயிரும், உணர்வுமாக இருத்துகிறது.வைகுண்ட துவாரம் - சொர்க்க வாசல் திறக்கும் திருநாள் முதல்நாள் இரவு முழுக்க பூஜை புனஸ்காரம் செய்து, விரதம் மேற்கொண்டு, துளசி, வெற்றிலை, பழம், பூ, தேங்காயோடு இறைமையை தியானித்தால், சொர்க்க வாசல் திறக்கும் என்பது தான் காலகாலமான பாரம்பரியம்.இந்த கொண்டாட்டங்களும், பூஜை புனஸ்காரங்களும் வெறும் சடங்குகள் மட்டுமா என்றால் இல்லை. ஒளவையாரின் பாடல் ஒன்று, தண்டாமல் ஈவது பாடல் - தண்டி அடுதாதக்கால் ஈவது வண்மை அடுத்தடுத்துப் பின் சென்றால் ஈவது காற்கூலி...கேளாமல் தருவது கொடை. கேட்டுத் தருவது வள்ளல் தன்மை. நடையாய் நடக்க வைத்துத் தருவது கூலி.இறை நமக்கு பிரபஞ்சம் என்னும் சொர்க்கத்தில் வாழும் வரத்தினை, பாக்கியத்தினை அருளிச் செய்திருக்கிறது. கேளாமல் கொடுத்திருக்கும் அருள்கொடை போதாமல், நாமே பலவற்றை கேட்டுப் பெறுகிறோம். அதுவும் போதாமல் மறுபடி மறுபடி நச்சரித்து, இறைமையிடம் கையேந்திக் கையேந்தி கூலி பெறுவது போல, ஆசைகளை நிரப்பிக் கொள்கிறோம்.ஒவ்வொரு முறையும் கேட்டுக் கேட்டுப் பெறுகிறோம். சரி... ஒவ்வொரு முறையும் முந்தைய முறையை விடவும், ஒரு படி சிறந்து, ஓர் அங்குலம் உயர்ந்து, ஒரு கைப்பிடி அளவு சிறந்தவனாக உருமாறி, இறைமையின் வரம், அருள் சுழற்சிக்குத் தகுதியானவர்களாக நம்மை நாமே உருமாற்றியிருக்கிறோமா? நம்மை நாமே தகுதிப் படுத்தியிருக்கிறோமா? நம்மை மெருகேற்றிக் கொள்வது தான் சொர்க்கவாசல் திறப்பு.கதவு திறப்பது கோயிலில மட்டுமா? நமது மனக்கோயிலிலும் அல்லவா கதவு திறக்க வேண்டும். இறை தரிசனம் கிடைப்பது கோயிலில் மட்டுமா? அகக் கண்ணால் தரிசிக்க மனசில் கதவு திறக்க வேண்டும்.எத்தனை இடர் வந்தாலும் சான்றோர் மனத்திண்மையை இழப்பதில்லை. கற்பூரம், தான் எரிந்தாலும் நறுமணத்தைத் தருவது போல, நாமும் கற்பூரமாக இருத்தல் வேண்டும். நல் வாசனையோடு கூடிய ஜெகஜ்ஜோதியாக, நமது மனசைப் பக்குவப்படுத்த வேண்டியது நமது மானுடப் பொறுப்பு.கடந்த சொர்க்கவாசல் திறப்பு வைகுந்த ஏகாதசியை விட, இந்த ஆண்டு பொன்னாய்ப் பொலிகிறேனா? கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நட்பு வட்டத்தை விரிவு படுத்தியிருக்கிறேனா? எனது ஆணவத்தை, அகங்காரத்தை போக்கியிருக்கிறேனா? இத்தனை கேள்விகளும் நமக்குள் ஆலவட்டம் போடட்டும். பதில்களை தேடட்டும். அதற்காகத்தான் மீண்டும் மீண்டும் அதே விழாக்கள்... அதே பண்டிகைகள்... அதே கொண்டாட்டங்கள்... புரிதலே இல்லாமல் அந்தந்த நிமிடத்தையும், பொழுதையும் வெற்றுப்பார்வையோடு கடப்பதற்கல்ல.முரன் என்னும் அரக்கனை 'முரண்' என்பதாகக் கொண்டு, நமக்குள் விஸ்வரூபமாக நிலைத்திருக்கும் முரண்பாடுகளை இல்லாததாக்க வேண்டும். கோபம், தாபம், ஆணவம், அகங்காரம், கள்ளம், கபடம், வெறுப்பு, பொறாமை, தீய உணவுகளை, தீய உணர்வுகளைத் துறந்து, மென்வார்த்தை, மென்உணர்வுகளை மேற்கொள்ளும் பத்தியத்தை பின்பற்றுவோம்.நாம் எதையுமே செய்ய மாட்டோம், மேம்பட மாட்டோம், பொலிவுற மாட்டோம், பெருந்தன்மையாக மாட்டோம், அதே நரகல், அதே நரகம், அதே அழுக்கு, அதே சாக்கடை, அதே நாம். ஆனால் சொர்க்கவாசல் மட்டும் நமக்காக திறக்க வேண்டும் என்று இறைமையிடம் பேசும் பேரம் அநியாயமில்லையா?ஒவ்வொரு நொடியும் மனசில் வார்த்தையில், உணர்வில், ஞானத்தில் உயிரில் சொர்க்க வாசலைத் திறப்போம். வாழும் போதே இறைமையோடு ஐக்கியமாகலாம். வாழும் போதே வைகுந்தப்பதவி அடையலாம்.சொர்க்க வாசல் கதவு இருப்பது திருத்தலங்களில் மட்டுமல்ல, நம் மனசிலும் தான்.-இன்னும் சொல்வேன்அலைபேசி: 94440 17044ஆண்டாள் பிரியதர்ஷினி