உள்ளூர் செய்திகள்

தெய்வ தரிசனம் - 2 (26)

சிதம்பரம் நடராஜர்பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம் (நீர் - திருவானைக்காவல். நிலம் - காஞ்சிபுரம். அக்னி - திருவண்ணாமலை. காற்று - காளஹஸ்தி). சிதம்பரம் நடராஜரை தரிசித்தாலே முக்தி. இக்கோயிலின் நான்கு திசைகளிலும் பிரமாண்டமான ராஜகோபுரங்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பூலோக கைலாயம் என சிறப்பு பெயரும் உண்டு. 'மதுரை' என்றாலே மீனாட்சி நினைவுக்கு வருவது போல சிதம்பரம் என்றாலே நடராஜர் தான். இவரே பிரதான தெய்வம். சிதம்பரத்தில் பூஜை செய்பவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள் என்னும் தீட்சிதர்கள்.மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களை 'அதென்ன... சிதம்பர ரகசியமா?' என்று கேட்கும் வழக்கம் உண்டு.அதற்கான விளக்கம் இதோ!இங்கு நடராஜரின் வலது பக்கம் சிறு வாசல் காணப்படும். நீலநிற துணியால் திரையிட்டு மூடியிருப்பர். தினமும் இரவில் இங்கு சிறப்பு பூஜை நடக்கும். அறியாமையில் இருக்கும் நம்மை, ஞானத்திற்கு அழைக்கும் வழிபாடாக இது உள்ளது. பூஜையின் போது திரையை அகற்றி தீபாராதனை காட்டுவர். அதில் நவரத்தினம் பதித்த தங்கத்தால் ஆன, வில்வ மாலை சுவரில் தொங்கும்.எங்கும் நிறைந்த கடவுள் இங்கிருக்கிறார் எப்படி தெரியுமா? வெற்று வெளியாக அதாவது ஆகாய வடிவத்தில் இருக்கிறார். இந்த தரிசனமே 'சிதம்பர ரகசியம்' எனப்படுகிறது.சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை சிதம்பரம்.கடவுள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அகக் கண்களால் அவரைக் காண வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம். அகக்கண்ணில் கடவுள் தெரிந்தால் அறியாமை நீங்கும். மாயை மறையும். ஞானம் பிறக்கும். சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டு முழுவதும் விழா நடந்தாலும் முக்கியமானது ஆருத்ரா தரிசனம்.'ஆருத்ரா' என்பது திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று 'ஆருத்ரா விழா' கொண்டாடுவர். திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவர் சிவன். அவருக்கு 'ஆதிரையான்' என்றும் பெயருண்டு. திருவாதிரை விழாவில் 10ம் நாளில் ஆருத்ரா தரிசனம். அதற்காக தினமும் யாகசாலையில் காலையும், மாலையும் ஹோமம் நடக்கும். உற்ஸவர்களான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமண்யர், சண்டிகேஸ்வரர் பவனி வருவர். ஒன்பதாம் நாளில் தேர் திருவிழாவில் மூலவர் நடராஜரே எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் பின்புறத் தோற்றத்தை தரிசிக்கலாம். பக்தர்கள் முன்னும், பின்னுமாக சென்று தரிசிப்பது காண்போரை பரவசப்படுத்தும். வேத கோஷம் விண்ணைப் பிளக்கும். பன்னிரு திருமுறைகள் ஓதப்படும். நாதஸ்வரமும், தவில் ஓசையும் திமிலோகப்படும். சிவனடியார்கள் சிவ நாமங்களை சொல்லி வடம் பிடிக்க, தேர் புறப்பாடு நடக்கும். தேரின் நடுவில் ஊஞ்சலில் நடராஜர் இருப்பார். சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்கப்படும். இவரே நடராஜருக்கு திருவாதிரை களியை பிரசாதமாக படைத்தார். இதனால் வீடுகளில் சுவாமிக்கு களி படைத்து பிரசாதமாக சாப்பிடுவர். பெரியாழ்வார் மதுரையில் கூடலழகருக்கு பல்லாண்டு பாடியது போல சிதம்பரத்தில் சேந்தனார் திருப்பல்லாண்டு பாடல் பாடினார். இதைக் கேட்ட பின்னரே நடராஜரின் தேர் நகரும். ஒரு ஆண்டில் சிதம்பரம் நடராஜருக்கு ஆறு முறை அபிஷேகம். இதில் திதி அடிப்படையில் மூன்று; நட்சத்திர அடிப்படையில் மூன்று.* சித்திரை - திருவோணம்; ஆனி - உத்திரம்; மார்கழி - திருவாதிரை.* ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதி.தெய்வீகம், தேசியத்தை போற்றும் விதமாக சிதம்பரம் தீட்சிதர்கள் இந்திய குடியரசு, சுதந்திர தினத்தன்று 152 அடி உயர கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றி பாரத தாயை வணங்குவர். பாரத தேசம் நலம் பெற வேண்டி நடராஜரின் திருவடிகளைச் சரணடைவோம். 'கோயில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலையே குறிக்கும். சிவன் கோயில்களுக்கு எல்லாம் தலைமைக்கோயில் இது. இங்கிருந்தே அருட்சக்தி கிளம்பி, உலகிலுள்ள எல்லா கோயில்களையும் தினமும் சென்றடைகிறது. அந்த சக்தி அங்கங்கு வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிகிறது. இரவில் சிதம்பரம் நடராஜரை சன்னதியை மீண்டும் வந்தடைகிறது. (இதில் திருவாரூர் தியாகராஜர் கோயில் மட்டும் விதிவிலக்கு) இதனால் எல்லா கோயில்களிலும் இரவு பூஜை முடிந்த பின்னரே சிதம்பரத்தில் இரவு ௧௦:௦௦ மணிக்கு பூஜை நடக்கும். எல்லாசக்தியும் ஒரு சேர இங்கிருப்பதால் சிதம்பரத்தில் இரவு பூஜையை தரிசிப்பது விசேஷம்.தரிசனம் தொடரும்தொடர்புக்கு: swami1964@gmail.comபி. சுவாமிநாதன்