தெய்வ தரிசனம் (1)
இன்றைக்கு மக்கள் கூட்டம் எங்கே அதிகம் கூடுகிறது என்று கேட்டால், விதம் விதமான உணவுகளைத் தருகிற ஓட்டல்கள், மனசுக்கு உற்சாகம் தரும் கேளிக்கை மையங்கள், பிரமாண்டமாக அமைந்திருக்கிற ஷாப்பிங் மால்கள் இப்படிப் பட்டியல் இடலாம்.ஆனால், இவை அனைத்தையும் விட அதிக கூட்டம் கூடுகிற இடம் ஆலயம் தான் என்பதை மறுப்பதற்கில்லை.முதல் பாராவில் சொன்ன இடங்களில் பணத்தைச் செலவழித்தால் தான் எல்லாமே கிடைக்கும்.ஆலயம் சென்றால், நேரத்தையும் மனதையும் செலவிட்டாலே போதும்... எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆலயத்தினுள் சென்று இறைவனிடம் பிரார்த்தித்தால், 'கேட்டது கிடைக்கும்' என்கிற நம்பிக்கை. இறை பக்தி எல்லாவற்றையும் பெற்றுத் தரும்.எனவேதான் எல்லாரும் ஆலயங்கள் நோக்கிப் படை எடுக்கிறார்கள்.பிரதோஷமா? சங்கடஹர சதுர்த்தியா? கிருத்திகையா? இதுபோன்ற விசேஷ தினங்களில் கூடுகிற பக்தர்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆலயங்கள் திணறுகின்றன.பணத்தை விட ஞானத்தை வழங்குகின்ற மையங்களாக ஆலயங்களைப் பார்க்க வேண்டும். மகரிஷிகளும் மகான்களும் ஞானத்தைத் தேடித்தான் அலைந்தார்கள். அனைத்தும் ஒடுங்கும் இடம் ஆலயம்.ஆலயத்தினுள் புகுந்தால், புலன்கள் நம்மை அறியாமல் ஒடுங்குகின்றன. மனம் அமைதியுறுகிறது. ஆசை குறைகிறது. பொறாமை பொசுங்குகிறது. கோபம் காணாமல் போகிறது.இப்பேர்ப்பட்ட ஆலயங்களுக்குச் செல்வது மனதுக்கும், உடலுக்கும் முக்கிய பயிற்சி என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரேயே நம் முன்னோர்கள் கண்டு கொண்டிருந்தார்கள். எந்த வேஷம் போட்டாலும் பிறரை ஏமாற்றி விடலாம்.ஆனால் பக்தியில் வேஷம் போட்டால், வெகு நாட்கள் நீடிக்க முடியாது.இறைவன் என்கிற மிகப் பெரிய சக்தி, இந்தப் பிரபஞ்சத்தில் வசிக்கிற எல்லோரையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே தான், ஆலயங்களுக்குச் செல்கிறோம்.ஒரு சீடனுக்கு சந்தேகம். குருவிடம் கேட்டான்: “இறைவனைத் தேடி ஆலயங்களுக்குத்தான் செல்ல வேண்டுமா? வீட்டில் இருந்தபடி வழிபடலாமே?!”சீடனை அர்த்தபுஷ்டியுடன் பார்த்த குருநாதர் சொன்னார்:“பணம் நிறைந்தவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் தானம் பெற வேண்டும் என்றால், தர்ம குணம் நிறைந்த தனவந்தரைத்தான் தேடிச் செல்ல வேண்டும்.அதேபோல் இறைவன் எங்கும் நம்இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தர்ம குணம் எப்படி சில தனவந்தர்களிடம் இருந்து மட்டும் வெளிப்படுகிறதோ, அதேபோல் இறைவன் என்பவன் ஆலயங்கள் வழியாகவே வெளிப்பட்டு நம்மை ஆசிர்வதித்து வருகிறான். எதையும் உள்வாங்குகிற பள்ளத்தைத் தேடித்தான் தண்ணீரானது பயணிக்கும். அதுபோல் நம் கவலைகளை குறைகளை, ஏக்கங்களை உள்வாங்குகிற இடமாக ஆலயம் விளங்குகிறது.”சீடனுக்குத் தெளிவு பிறந்தது.பண்டைய மன்னர்கள் ஊருக்கு ஊர் ஆலயம் கட்டினார்கள். வழிபாடுகள் தொடர்ந்து நடக்க மானியம் அளித்தார்கள். திருவிழாக்கள் நடக்க சில கிராமங்களையே எழுதி வைத்தார்கள்.பக்குவப்படாத மனதைப் பக்குவப்படுத்துகிற ஆற்றல் ஆலயத்துக்கு மட்டுமே உண்டு. ஆதிசங்கரரும், ராமானுஜரும் அவதரித்து ஆன்மிகப் புரட்சிகள் நடத்தவில்லை என்றால், இந்து மதம் இத்தனை ஏற்றங்களைக் கண்டிருக்க முடியுமா? நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று அருளாளர்கள் பலரும் அவதரித்து, இறை நம்பிக்கை மேலும் பிரகாசிக்க தீபம் ஏற்றி இருக்கிறார்கள். ஆறு விதமான வழிபாடுகள் ஆரம்பித்து வைத்தார் ஆதிசங்கரர். இதை 'ஷண்மத ஸ்தாபனம்' என்பர். “விநாயகர், முருகன், சிவன், அம்பாள், மகாவிஷ்ணு, சூரிய பகவான் போன்ற தெய்வங்களுள் எவரை வழிபடுவது என்று நீயே தீர்மானித்துக் கொள்,” என்றார் ஆதி சங்கரர்.சைவமும், வைணவமும் பெரிய பிரிவுகளாக அதன் பின்தான் உருவாயிற்று!சிவனும் விஷ்ணுவும் மட்டும்தானா?இன்றைக்கு ஏராளமான சிறு சிறு தெய்வங்கள். ராமபிரானுக்கு உதவிய அனுமனுக்கு, ராமனை விட சிறப்பு. எண்ணற்ற தனி ஆலயங்கள் அனுமனுக்கு உண்டு.தந்தைக்கு உபதேசம் சொன்ன முருகப் பெருமானுக்கு ஏராளமான தனிக் கோவில்கள்.தெய்வங்கள் எல்லாமே ஒரே நிலை தான்.'இனிப்பு' என்கிற ஒரு சுவை தான் ஜாங்கிரி, அல்வா, மைசூர்பாகு, பர்பி என்று பல பதார்த்தங்களாக விரிந்து காணப்படுகிறது.அதுபோல் 'பக்தி' என்கிற ஒரு விஷயம்தான் இன்றைக்குப் பல கடவுளர்களாக விரிந்து பரந்து நமது தரிசனத்துக்குக் கிடைத்திருக்கிறது.ஆலயத்துக்குள் நுழைந்தால், கண்களையும் கவனத்தையும் கவரும் விதத்தில் எண்ணற்ற சந்நிதிகள். சிறு தேவதையாக இருந்தாலும், அதற்கும் ஒரு முக்கியத்துவம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு கடவுளரின் தனித்தன்மையையும், தனிச் சிறப்புகளையும் சுருக்கமாக அடுத்த இதழில் இருந்து பார்ப்போம்.மூல முதல்வனான விநாயகப் பெருமானில் இருந்து துவங்குவோமா?இன்னும் தரிசிப்போம்...பி. சுவாமிநாதன்