உள்ளூர் செய்திகள்

தெய்வ தரிசனம்! (5)

இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் என்று பல்வேறு தேசங்களில் தொழில் முறையில் பிரபலமாக இருப்பவர்களை அவ்வப்போது பட்டியலிட்டுக் காட்டுவார்கள். இதைப் படித்திருக்கிறோம்; பார்த்திருக்கிறோம்.ஆனால், பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய பணக்காரர் யார் தெரியுமா?குபேரன்!திருமணத்துக்கோ, அல்லது வீட்டு விசேஷத்துக்கோ பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் ஒருவரைப் பார்க்க நேர்ந்தால், 'அவனுக்கு மனசுல பெரிய குபேரன்னு நெனப்பு' என்று சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறோம்.யார் இந்த குபேரன்?பிரம்மாவின் பேரன் விஸ்ரவஸ் என்ற முனிவர். இவருக்கு இலவிதை மற்றும் ககேசி என்ற மனைவியர். விஸ்ரவஸ், இலவிதை தம்பதியரின் மகன் குபேரன். விஸ்ரவஸ், ககேசி தம்பதிக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் சூர்ப்பனகை ஆகியோர் வாரிசுகள்.ஆக, ராவணனுக்கு சகோதரன் முறை குபேரன். குபேரனின் திருவுருவத்தைப் பெரும்பாலும் பலரது இல்லத்து பூறையறைகளில் பார்த்திருப்பீர்கள். குள்ளமான உருவம். சிவந்த நிறம். தொப்பை போல் வயிறு. செல்வ வளத்துக்கு முற்றிலுமாக உரியவர் குபேரன். அஷ்ட ஐஸ்வர்யங்கள் நமக்கு வேண்டும் என்றால், மகாலட்சுமிதேவியோடு குபேரனையும் வணங்குகிற வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.'கலியுகத்தில் லட்சுமி குபேர பூஜையை சிரத்தையுடன் முறையாகச் செய்பவர்கள் பெரும் நிதியைப் பெற்று வாழ்வார்கள்' என்று சொல்லி இருக்கிறார் நாரதர். இது மட்டுமல்ல... 'பொருள் இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது. ஒருவனிடம் பொருள் இருந்தால் மட்டுமே, அதைக் கொண்டு புண்ணியத்தைத் தேட முடியும்' என்கிறார். சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டவர் குபேரன். தவிர, சிவபெருமானின் நெருங்கிய தோழனாகவும் விளங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன.சிவபெருமானைக் குறித்துப் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்தார் குபேரன். இந்த தவத்துக்கு மனமிரங்கிய ஈசன், உமையம்மையுடன் காட்சி தந்து ஆசிர்வதித்தார். பிறகு எட்டுத் திக்குகளில் (அஷ்டதிக்கு) வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். தவிர, குபேரனுக்கு அளவற்ற செல்வங்களைக் கொடுத்து அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை ஈசன் கொடுத்தார்.சங்க நிதி, பதும நிதி உள்ளிட்ட நவநிதிகளுக்கு அதிபதி குபேரன். பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்து கொள்வதற்கு திருப்பதி ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கி இருக்கிறார்.குபேரனிடம் பெருமாள் ஏன் கடன் வாங்க வேண்டும்?மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீநிவாஸன் (வேங்கடவன்) அந்த தேவியை மணம் முடிக்கத் தயாராகி, திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கலானார். அப்போது லட்சுமிதேவி ஸ்ரீநிவாஸனிடம் வாசம் செய்யாததால் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டார். தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும்போது, இந்தத் திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது என்று தவித்தார். எனவே, எப்போதும் தனக்கு உபகாரமாக இருந்து வரும் நாரதரிடம், 'என்ன செய்வீர்களோ தெரியாது... எப்படியாவது பெருமளவில் பணம் திரட்டி இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க உதவுங்கள்' என்று கேட்டுக் கொண்டார். 'பகவானே பணம் கேட்கின்றாரே' என்று நாரதர், தேவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்குத் தகவல் அனுப்பினார். நாரதர் சொன்ன தினத்தில் குபேரன் உட்பட அனைத்து திக்பாலகர்களும், நவக்கிரக அதிபதிகளும் சேஷாத்திரி மலைக்கு (திருப்பதி) வரவழைக்கப்பட்டனர். இந்தத் தெய்வத் திருமணம் இங்கு தானே நடக்கப் போகின்றது?! சேஷாத்திரிக்கு வந்திருப்பவர்களில் யாரிடம் கேட்டால் பணம் கிடைக்கும் என்பது தெரியாதவரா நாரதர்! திக்பாலகர்களையும் நவக்கிரகங்களையும் ஒரு முறை பார்த்த நாரதர் குபேரனைக் கண்டு அப்படியே பூரித்தார். ''குபேரனே... நீ தான் சரியான தேர்வு. இந்த உலகத்திலேயே அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற பெரிய செல்வந்தன் நீதான்... வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீநிவாஸனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது ஸ்ரீநிவாஸனுடன் லட்சுமிதேவி இல்லை. எனவே, பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். ஏழையாக இருக்கும் ஸ்ரீநிவாஸனின் திருமணச் செலவுக்கு உடனடியாக நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்குண்டான பணத்தைக் நீ கொடுத்து உதவ வேண்டும். அந்தப் பணத்தை ஸ்ரீநிவாஸன் வட்டியுடன் திருப்பித் தருவார்' என்றார்.குபேரனும் சந்தோஷத்துடன் சம்மதித்தான். எவ்வளவு தேவையோ அவ்வளவு பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டான். ஸ்ரீநிவாஸனுக்கு குபேரன் கொடுத்த தொகை ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் (இந்தத் தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன) என்று ஒரு தகவல். குபேரனிடம் கடன் வாங்கியதற்காக ஸ்ரீநிவாஸன் பத்திரம் எழுதிக் கொடுத்தார். இந்தப் பத்திரத்துக்கு முதல் சாட்சிக் கையெழுத்து பிரம்மாவும், இரண்டாவது சாட்சிக் கையெழுத்து சிவபெருமானும் போட்டார்களாம்.அதோடு குபேரனைப் பார்த்து, 'நீ கொடுத்த பணத்துக்குக் கலியுகத்தில் வட்டி செலுத்திக் கொண்டு கலியுகத்தின் கடைசியில் அசல், வட்டி எல்லாம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்' என்றாராம் ஸ்ரீநிவாஸன்.குபேரனிடம் ஸ்ரீநிவாஸன் வாங்கிய கடனைத்தான் இன்று பக்தர்கள் உண்டியலில் கொட்டோ கொட்டென்று கொட்டி அடைத்து வருகிறார்கள். 'பக்தர்களிடம் வசூலித்துத் தருவேன்' என்று குபேரனிடம் ஸ்ரீநிவாஸர் சொன்ன வார்த்தையையே திருமலையில் உண்டியல்களுக்கு அருகில் தேவஸ்தானம் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறது.'யார் யார் பாவம் செய்தார்களோ அவர்களின் பாவக் கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடம் இருந் பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்' என்று புராண காலத்திலேயே குபேரனுக்கு வாக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீநிவாஸன். அதன்படி அவர் நம்மிடம் இருந்து இன்றைக்கும் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்.தவிர, ஏழுமலையான் கோவிலில் 'குபேர காணிக்கை' எனும் பெயரில் குபேரனுக்குக் காணிக்கை வழங்கும் ஒரு சம்பிரதாயமும் இருந்து வருகிறது. நாமும் செல்வ வளம் பெற குபேர பகவானை தினமும் வணங்கலாம் என்றாலும், வியாழக்கிழமை மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை 'குபேர காலம்' என்று சொல்லப்படும் வேளையில் வணங்கினால் சிறப்பு. வடக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும் குபேரன் திருவுருவப் படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி வைத்து, பிரார்த்திக்க வேண்டும். பூஜையறையில் குபேர யந்திரம் வைக்கலாம். பொன், பொருள், வியாபாரம், உத்தியோகம் போன்றவை சிறப்பதற்கும், மேலும் பெருகுவதற்கும் குபேர வழிபாடு அவசியம். பாசிப்பயறு பாயாசம், சம்பா அரிசியில் தயாரான அவல் போன்றவற்றை நிவேதிக்கலாம்.குபேரனின் அருளைக் கூடுதலாகப் பெறுவதற்கு பணப்பெட்டி, லாக்கர் மற்றும் பீரோக்களை வடக்குத் திசையில் வைப்பது மரபு. இன்னும் தரிசிப்போம்...பி.சுவாமிநாதன்