உள்ளூர் செய்திகள்

சேவை செய்ய மறக்காதே

 வேதம் படிக்கும் குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் காஞ்சிப்பெரியவர். பெற்றோரை பிரிந்து வேத பாடசாலையில் தங்கிப் படிக்கும் அவர்களுக்கு சத்தான உணவளிப்பதும், அவர்களின் உடல் நலம் காப்பதும் நம் கடமை என அடிக்கடி அவர் சொல்வார். கும்பகோணம் அருகிலுள்ள வேத பாடசாலை ஒன்றிற்கு முன்னறிவிப்பு இல்லாமல் புறப்பட்டார் காஞ்சிப்பெரியவர். அங்கு 15 சிறுவர்கள் கோஷ்டியாக வேதம் ஜபித்துக் கொண்டிருந்தனர். காஞ்சிப்பெரியவர் வந்ததே தெரியாமல் சீடர்களைக் கவனித்தபடி இருந்தார் குருநாதர்.திடீரென நிமிர்ந்த போது தான் காஞ்சிப்பெரியவர் அருகில் நிற்பது அவருக்குத் தெரிந்தது. திகைப்புடன், ''பூரணகும்ப மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்கவில்லையே...'' என பதறினார். காஞ்சிப்பெரியவரோ புன்னகையுடன், ''நான் வருவேன் என உங்களுக்கு எப்படி தெரியும்? சம்பிரதாய முறையில் என்னை வரவேற்காவிட்டால் தவறில்லை. வேதத்தை சிரத்தையுடன் கற்றுக் கொடுப்பதும், குழந்தைகள் கற்றுக் கொள்வதும் தான் முக்கியம்!''என அவரைச் சமாதானப்படுத்தினார். பின் அவராக சமையல் அறை இருக்குமிடம் நோக்கி நடந்தார். அன்றைய உணவாக சேவை (இடியாப்பம்) தயாரித்துக் கொண்டிருந்தார் சமையல்காரர். ''என்ன குழந்தைகளுக்கு சேவை பண்ணுகிறாயா?'' எனக் கேட்டார் காஞ்சிப் பெரியவர்.தலை அசைத்தார் சமையல்காரர்''தினமும் குழந்தைகளுக்குத் தவறாமல் சேவை பண்ணு! உனக்கு புண்ணியம் உண்டாகட்டும்''என அவரை வாழ்த்தினார் காஞ்சிப்பெரியவர். மாதத்தில் ஒருநாள் சேவை பிழிந்து தயாரிப்பதே சிரமம். இதில் தினமும் சேவை பண்ண சாத்தியம் இல்லையே...ஆனால் சுவாமிகளின் கட்டளையை மீற முடியாதே!'' என சற்று யோசித்தார். அதை புரிந்து கொண்ட காஞ்சிப்பெரியவர் கலகலவெனச் சிரித்தார். ''நான் சொன்னது சாப்பிடும் இந்த சேவையை அல்ல, சேவைக்கு 'தொண்டு' என்றும் பொருள் உண்டே? வேதம் கற்கும் இவர்களுக்கு தொண்டு செய் என்றே குறிப்பிட்டேன்'' என்றார். ''செய்வேன் சுவாமி'' என அவரும் உறுதியளித்தார். தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்