உள்ளூர் செய்திகள்

பெரியவர் கொடுத்த பென்ஷன்

காஞ்சிப்பெரியவரின் பக்தரான சாம்பு சென்னையைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பிறந்த சில நாட்களிலேயே சாம்புவின் மனைவி இறந்து விட்டார். தனியாளாக சிரமப்பட்டு மகனை வளர்த்து ஆளாக்கினார். தஞ்சாவூரில் வேலை கிடைத்த மகன், திருமணமாகி அங்கேயே தங்கி விட்டார். குடும்பத்தை விட்டு பிரிந்த சாம்பு, காஞ்சிப்பெரியவரின் சீடராக இருந்து சேவை செய்தார். சில ஆண்டுகளில் உடல்நிலை தளர்ந்ததால் மகன் வீட்டிற்குச் சென்றார்.சாம்புவின் மகன் விளையாட்டாக, “நீங்க அரசாங்க வேலையில இருந்திருந்தா இப்போ பென்ஷனாவது கிடைச்சிருக்கும். மடத்தில் இருந்தா என்ன கிடைக்கும்?” என கேட்டு விட்டார். அதைக் கேட்டு மனம் பொறுக்காத சாம்பு, கண்ணீர் விட்டபடியே, “நாம இப்போ என்ன குறைஞ்சா போனோம்? பெரியவா புண்ணியத்தில நல்லாத் தானே இருக்கோம்” என்றார்.அவர் வடித்த கண்ணீர் மகனை உருக்கி விட்டது. ''அப்பா! அவசர புத்தியால தவறா பேசிட்டேன். பெரியமனசு பண்ணி மன்னிச்சிடுங்கோ” என்றார்.“உன்னை மன்னிக்கிறதுக்கு நான் யாரு! பெரியவரிடம் போய் மன்னிப்பு கேளு,” என்றார் சாம்பு.காஞ்சிபுரம் சென்ற அந்த இளைஞர் பெரியவரைத் தரிசிக்கச் சென்றார். அவரை உற்று நோக்கிய பெரியவர், “நீ சாம்புவின் பிள்ளை தானே... சின்ன வயசில மடத்துக்கு அப்பாவோட வருவே... இப்ப அப்பா எப்படி இருக்கார்? உன் அப்பா மாதிரி சிஷ்யன் (சீடன்) கிடைக்க பாக்கியம் செய்திருக்கணும். மடத்தில சேவை செய்த அவர் ஷேமமா (நலமுடன்) வாழ காமாட்சியை வேண்டிக்கிறேன். அவருக்கு ஏதாவது உதவி செய்ய எனக்கு ஆசை. ஒவ்வொரு மாசமும் பத்து கிலோ அரிசி மடத்து சார்பா தர ஏற்பாடு பண்றேன்” என்றார் பெரியவர்.“அப்பாவின் சேவைக்கு பெரியவர் கொடுத்த பென்ஷன் இது,” என்று மனதிற்குள் எண்ணிய இளைஞர் நன்றியுடன் வணங்கினார். பெரியவர் அவருக்கு ஆசியளித்தார்.