கங்கை குளியல்
தீபாவளிக்கு கங்கைக்கு போய் குளித்தால் தான் 'கங்கா ஸ்நானம்' என்பதில்லை. அவளை மனதார நினைத்தாலே போதும்! குளித்ததற்குரிய பலன் கிடைத்து விடும்.ஒரு அந்தணர் கங்கை நீராடலுக்கு சென்றார். செருப்பு அறுந்து விட்டதால், அங்கிருந்த ரைதாஸ் என்ற தொழிலாளியிடம் தைக்கக் கொடுத்தார். ''ஏனப்பா! இன்று கங்கையில் நீராடி விட்டாய் அல்லவா?'' என்றார்.''சாமி! அதுக்கெல்லாம் எனக்கேது நேரம்! ஏதோ பத்து பதினைஞ்சு செருப்பை தைச்சா தான், கால் வயித்து கஞ்சியாவது கிடைக்கும்,'' என்றார் ரைதாஸ்.''அடப்பாவி! காசியில் இருந்து கொண்டு, கங்கையில் குளித்ததில்லை என்கிறாயே! அது சரி...அதன் அருமை உனக்குப் புரியவில்லை!'' என்றவரிடம், சில பாக்குகளை கொடுத்த ரைதாஸ், ''சாமி! இதை கங்கையில் சேர்த்து விடுங்கள்,'' என்றார்.அந்தணர் பாக்குகளை கங்கையில் போட முயன்ற போது, உள்ளிருந்து அழகிய பெண்ணின் கைகள் வெளிப்பட்டன. அவரது கையில், ஒரு வளையலைக் கொடுத்து ரைதாசிடம் ஒப்படைக்கும்படி குரல் கேட்டது. அந்தணரும் அவ்வாறே செய்ய, ''இது கங்கா மாதா உங்களுக்கு தந்தது. எனக்கு தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார் ரைதாஸ்.அந்தணர் அது கேட்டு நெகிழ்ந்து போனார்.