கடவுள் இப்படித்தான் இருப்பார்
மகாசுவாமிகளை நேரில் தரிசித்து, அதன் மூலம் தான் அடைந்த ஆன்மிக அனுபவத்தை 'சொர்க்கத்தில் ஒரு நாள்' என்னும் தலைப்பில் தொடராக எழுதினார் 'தாய்' வார இதழின் ஆசிரியர் வலம்புரிஜான். பின்னர் அதைப் புத்தகமாகவும் வெளியிட்டார். தங்கத்தை உரசி அதன் தரத்தை அறிவது போல, அறிவு என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்து 'பத்தரை மாற்றுத் தங்கம்' என மகாசுவாமிகளின் பெருமையை உணர்ந்து வியந்தார். சுவாமிகளை தரிசிக்கும் போது சம்பிரதாயப்படி சட்டையைக் கழற்றி விட்டு தரிசிப்பார் அவர். 'புழுக்கத்திற்காகச் சட்டையை கழற்றும் நாம், புண்ணிய ஆத்மாவான பெரியவரைத் தரிசிப்பதற்காக சட்டையை கழற்றுவதில் தவறில்லை. இப்போது நான் சட்டை இல்லாமலும் அதைப் பற்றிப் பிறர் சொல்வதைச் சட்டை செய்யாமலும் போகிறேன். நம் கல்லறைக்குப் பிறகும் நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களுக்காக எத்தனை சொட்டுக் கண்ணீர் வடித்து என்ன பயன்?'' என்றும் கேள்வி கேட்கிறார். ஒருமுறை சுவாமிகளைத் தரிசித்த அவர், ''நமக்குத் தெரியாதவை தெரியாதவையே; நமக்குத் தெரியாதவையே இல்லாதவை அல்ல!'' என்ற முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கிறார். ஒரு சமயத்தில் தமிழகத்தில் பஞ்சம் நிலவியது. மகாசுவாமிகள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் தான் (வடஇந்தியா யாத்திரை) மழை பெய்யவில்லை என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., கருதினார். மழை வரவேண்டும் என்றால் மகாசுவாமிகள் தமிழ்நாடு திரும்ப வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ராமருக்கு உதவிய அணில் போல தனக்கும் அதில் பங்குண்டு என்கிறார் வலம்புரிஜான்.அப்போது மகாசுவாமிகள் தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் பெருமழை கொட்டியது. இதற்கு இன்னமும் வாழும் சாட்சிகளாக பலர் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் வீரப்பன் என்றும் குறிப்பிடுகிறார். ஒருமுறை வலம்புரிஜான் மனைவியுடன் மகாசுவாமிகளை தரிசித்த போது, சொன்ன ஒரே வாக்கியம் 'கடவுள் இப்படித் தான் இருப்பார்' என்பது தான்!காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.பாகவதம் சொல்லும் நான்கு பாவங்கள்1. துாங்குபவரை அவசியமின்றி எழுப்புதல்.2. ஆன்மிகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல்.3. தாயிடம் இருந்து குழந்தையை பிரித்தல்.4. கணவன், மனைவியை வாழ விடாமல் தடுத்தல்.இவற்றைச் செய்தால் 'பிரம்மஹத்தி' என்னும் கொலைப்பாவம் உண்டாகும். இதற்கு பரிகாரமும் கிடையாது.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்