தாய் கொடுத்த தங்கக்காசு
UPDATED : ஆக 07, 2019 | ADDED : ஆக 07, 2019
வறுமையில் வாடிய புலவர் ஒருமுறை சிதம்பரம் கோயிலுக்குச் சென்றார். ''அம்பலத்தில் ஆடும் சிவனே! மூர்க்க குணம் கொண்டவர்களுக்கு நல்லதைச் சொன்னாலும் புத்தி வரவில்லையே. மெல்லிய ஆடை குளிரைத் தாங்குமோ? சந்தையில் செல்லாத காசும் செல்லுமோ? தில்லைவாழ் சிதம்பரனே!'' என மனக்குறையை வெளிப்படுத்தினார். அடுத்ததாக சிவகாமி அம்மனை தரிசித்தார். ''தாயே! உன் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தாய். மணநாளன்று அம்மி மிதிக்க உன் மணவாளருக்கு கால் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்தாய். உலகையே ஆட்டிப் படைக்கும் மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். இத்தனையும் கொடுத்த நீ எனக்கு ஏதும் தரவில்லையே!'' என வருந்தி பாடினார். உடனே அங்கிருந்த பஞ்சாட்சர படிகளில் ஐந்து பொன் நாணயங்களை வரவழைத்தாள் அம்பிகை. இதனால் அவர் 'படிக்காசு புலவர்' எனப் பெயர் பெற்றார்.