உள்ளூர் செய்திகள்

உண்டியல் வசூலில் கோபுரப்பணி

கும்பகோணத்தில் சிவக்கொழுந்து என்னும் நாதஸ்வர வித்வான் இருந்தார். அவரது இளைய தம்பி சிவபக்தியில் ஈடுபாடு அதிகம் கொண்டவர். கும்பகோணம் சங்கர மடத்திற்குத் தென்புறத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. கோபுரம் இல்லாத இக்கோவிலுக்கு வித்வானின் தம்பி திருப்பணி செய்ய விரும்பினார்.ஒருநாள் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி, கோவிலுக்குக் கிளம்பினார். ஒரு பித்தளைச் செம்பை உண்டியல் போல தயார் செய்தார். கோவிலின் எதிரில் சாலையோரமாக நாற்காலியின் மீது உண்டியலை வைத்தார். அருகில் நின்றபடி, அனைவரிடமும், “சிவ தர்மம்... சிவ தர்மம்” என்றார். அவருடைய தோற்றமும், குரலும் பலரது மனதை ஈர்த்தது. உண்டியலில் பணம் போட ஆரம்பித்தனர்.இப்படியே தினமும் நன்கொடை சேகரிக்கும் பணி தொடர்ந்தது.அப்போது பெரியவர் கும்பகோணம் சங்கர மடத்தில் இருந்தார். தினமும் மடத்தின் வாசலில் நின்று, பெரியவரைத் தரிசிப்பதையும் தம்பி வழக்கமாகக் கொண்டிருந்தார். ஐந்தாறு ஆண்டுகள் கடந்தன. நன்கொடை மூலம் கிடைத்த பணத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் கோபுர பணியை அவர் ஆரம்பித்தார். மளமளவென திருப்பணி நிறைவேறியது.இவரைப் பற்றி காஞ்சிப்பெரியவர், “மனதில் நம்பிக்கை, விடாமுயற்சி, பக்தி இருந்து விட்டால், சிவக்கொழுந்து தம்பி போல யாரும் வாழ்வில் சாதனை படைக்கலாம்,” என்று காஞ்சிப்பெரியவர் பக்தர்களிடம் அடிக்கடி குறிப்பிடுவார்.