பாடகருக்கு பச்சைக்கல் மோதிரம்
சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் பலமுறை பாடும் வாய்ப்பை பெற்றவர். இவர் சங்கீதகலாநிதி ஆர்.வேதவல்லி அம்மாவின் குருநாதர். சங்கீத ஞானத்துடன் ஜோதிடத்திலும் தேர்ச்சி பெற்றவர். ஒருமுறை இவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்ததில், சனி தசை முடிந்து புதன் தசை வரவிருப்பதை அறிந்தார். புதனுக்குரிய ராசிக்கல்லான பச்சைக்கல் மோதிரம் அணிந்தால் நல்லது என்று தன் சிஷ்யை வேதவல்லியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் காஞ்சிமடத்தில் பாடுவதற்கான அழைப்பு ஐயருக்கு வந்தது. அதை விருப்பமுடன் ஏற்று பங்கேற்றார். அவரது இசைத் திறமையைப் பாராட்டிய பெரியவர் நினைவுப்பரிசாக பச்சைக்கல் மோதிரம் ஒன்றை வழங்கி கவுரவித்தார். சற்றும் எதிர்பாராத வெங்கட்ராம ஐயர் தன் சிஷ்யை வேதவல்லியிடம், ''வேதா! நான் என்ன வாங்க வேணும் என நினைச்சேனோ, அதை பெரியவா இதோ எனக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கார்'' என்று சொல்லி மோதிரத்தைக் காட்டி கண்ணீர் பெருக்கினார். பக்தனின் மனம் அறிந்து அருள்வதில் காஞ்சிப் பெரியவருக்கு நிகர் வேறு யாருமில்லை. - காரை சங்கரா