உள்ளூர் செய்திகள்

திகைப்பில் ஆழ்த்திய விருந்தாளி

காஞ்சிபுரம் அருகே உள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில். இங்கு ஓர் அறையில், மகாபெரியவர் ஓராண்டு தங்கியிருந்தார். பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாட கடமைகளுக்காக மட்டும் அறையை விட்டு வெளியில் வருவார். மற்ற நேரத்தில் தியானத்தில் ஈடுபட்டிருப்பார். இப்போதும் இந்தக் கோயிலில் சுவாமிகள் தவமிருந்த அறை, பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.தர்ப்பைப் புல்லால் அறையை சுவாமிகளே அன்றாடம் பெருக்கிச் சுத்தம் செய்வார். சில நேரங்களில் சீடர்கள் அவர் நீராடும் போது, சுத்தம் செய்வதும் உண்டு. குசேலர் கண்ணனுக்குக் கொடுத்தது போல வெறும் அவல் மட்டுமே சுவாமிகளுக்கு அன்றாட சாப்பாடு. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி மட்டுமே. அறை உள்புறமாக பூட்டியிருப்பதால், ஜன்னல் வழியாக அவல் கொடுப்பார்கள். ஒருநாள் சீடர்கள் அவல் கொடுக்க முயன்ற போது, அங்கு நடப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். அசைவின்றி தியானத்தில் மகாபெரியவர் இருக்க, அவரது காலின் மீது பாம்பு ஒன்று உட்கார்ந்திருந்தது! பரமசிவன் கழுத்தில் கிடந்த பாம்பு மாதிரி அது காணக்கிடைக்காத காட்சி என்றாலும், சுவாமிகள் உடம்பை அசைக்கப் போய், அது சீறி எழுந்தால் என்னாகும்? செய்வதறியாமல் திகைத்தனர். அறையோ உள்ளே பூட்டி இருந்தது. எப்போது சுவாமிகள் கண் திறப்பார் என காத்திருந்தனர். சற்று நேரத்தில் சுவாமிகள் கண் திறந்ததும், சன்னக்குரலில் சீடர்கள் ஜன்னல் வழியே அழைக்க, என்னவென்று கேட்டார் சுவாமிகள். ''பாம்பு! பாம்பு'' என பதட்டமுடன் கூறினர். சுவாமிகள் மெல்ல ஆடையை உதற, பாம்பு அமைதியாக ஊர்ந்து வெளியே சென்றது. பிறகு ஜன்னல் பக்கம் திரும்பி சீடர்களிடம், 'அது நாலுநாளா இப்படித்தான்... விருந்தாளி மாதிரி வந்து, சவுகர்யமா என் மீது உட்கார்ந்து ஓய்வெடுத்துண்டு போறது. இதுக்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?'அதைக் கேட்ட சீடர்கள் வாயடைத்து நின்றனர்.