குருபக்தி
மனிதனுக்கு உண்மையான உறவும், அடைக்கலமும் குருநாதரும், அவரின் உபதேசமும் ஆகும். குருவானவர் இவ்வுலகில் நாம் நல்ல முறையில் வாழ வழி காட்டுவதுடன், வீடு பேறு என்னும் முக்தி நிலையை அடையவும் வழிகாட்டுகிறார். இத்தகைய உபகாரம் செய்யும் அந்த குருநாதரை நன்றியுடன் நினைக்க வேண்டும். எப்படி நினைக்க வேண்டும், எப்படி அவர் புகழை பரப்ப வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சி மஹாபெரியவர் செய்த ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் நன்கு உணரலாம். மகாகாவ் என்ற இடத்தில் பெரியவர் முகாமிட்டிருந்தார். ஒருநாள் அதிகாலை நாலரை மணிக்கு ஜபம் செய்து முடித்தவுடன் ஏகாம்பரம் என்ற தொண்டரை அழைத்து, ''நான் சில விஷயங்கள் சொல்றேன் கேட்டுக்கொண்டு பிறகு ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்'' என்று சொல்லி பேசத் தொடங்கினார். ''நான் இந்த மடத்திற்கு பட்டத்திற்கு வரும் போது பதிமூணு வயசு. எனக்கு எதுவும் அதிகம் தெரியாது. எல்லாம் புதுசு. மடத்தில் இருந்த பெரியவர்கள் எல்லாம் எனக்கு பல விஷயங்களை சொல்லித் தருவார்கள். மேலும் சின்ன வயசுலயே யாத்திரையும் கிளம்பினேன். அப்படி போகும் போது பண்ருட்டி என்ற ஊருக்கு வந்தேன். அந்த ஊர்ல ஒரு பெரிய மனிதர் ரெட்டியார். எனக்கு முன் இருந்த 66வது பட்டம் பரமகுரு சுவாமிகளிடம் ரெட்டியார் அளவுகடந்த பக்தி கொண்டவர். மடத்துக்கு வண்டி வண்டியா சாமான்கள், காய்கறிகள், பழம், இலைக்கட்டு, புஷ்பம்னு கொண்டு வந்து கொட்டுவாராம். நான் போன போதும் சாமான்கள் எல்லாம் ஆட்கள் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால் அவர் நேரில் வரவில்லை. என்னையும் பார்க்கவில்லை. நான் மடத்தைச் சேர்ந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி அழைத்து வரும்படி சொன்னேன். அதற்கு அவர், 'பரமகுரு சுவாமிகளின் பக்தன் நான். அவரது தேஜசும், ஞானமும் என்னை மிகவும் வசீகரித்தது. அவரை தரிசித்த நான் வேறு யாரையும் தரிசனம் செய்வதில்லை என சங்கல்பம் செய்துள்ளேன். அதனால் தரிசனத்திற்கு வரவில்லை. மடத்திற்கு செய்ய வேண்டிய சேவைகளைத் தவறாமல் செய்வேன் என்று சொல்லி அனுப்பி விட்டார். அவருடைய குருபக்தியைக் கேட்டு சந்தோஷப்பட்டேன். இவ்வளவு தீவிர குருபக்தி உள்ளவரை சந்திக்கப் போனேன். இதுமுதல் நிகழ்ச்சி. அடுத்து கலவையில் பீடத்திற்கு வந்தவுடன் மடத்து நிர்வாகிகள் என்னை ஒரு ஆசனத்தில் உட்கார வைத்து மடத்து சிப்பந்திகள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி அவர்கள் செய்துவரும் காரியம், பொறுப்பு முதலியவைகளைச் சொல்லி, அவர்களிடம் அந்த பணிகளை இனிமேல் எனக்குச் செய்ய வேண்டும் என்றார்கள். அப்படி சொல்லிக் கொண்டு வரும்போது அவர்களில் ஒருவர் ஆனைக்குப்பம் வைத்தா என்பவர். அவர்தான் அந்த பரமகுருநாதருக்கு ஆடைகள் துவைத்து காயவைத்து தருவது, ஜபத்திற்கு வேண்டிய சாமான்கள் வைப்பது போன்ற பிரத்யேக தொண்டு செய்து வந்தவர். அவரிடம் இனிமேல் அந்த காரியங்களை எனக்குச் செய்ய வேண்டும் என்றவுடன், அவர் அழுது கொண்டே ''நான் அந்த மகானுக்கு இது போன்ற கைங்கர்யம் செய்துவிட்டு வேறு யாருக்கும் செய்ய விருப்பமில்லை. என்னை மன்னித்து விடுங்கள். நான் என் ஊருக்கு போகிறேன் உத்தரவு தாருங்கள்'' என வேண்டினார். எனக்கு அவரோட குருபக்தியை பார்த்து ஆனந்தமா இருந்தது. இவாளோட பக்தியை பார்த்து பரமகுருவோட மகிமையும், தபசும், தேஜசும் எப்படிப்பட்டதுன்னு புரிஞ்சுது. அவர் எங்கும் போக வேண்டாம் மடத்துலேயே இருக்கட்டும் என்றேன்''. மற்றவர்கள் ''இதெல்லாம் கேட்கவே நன்னா இல்லைன்னா'' என்றனர். ஆனா நானோ ''ரொம்ப நன்னாயிருக்கு. அவாமாதிரி எனக்கும் குருபக்தி வரணும். ஆசார்யாள் அனுக்ரஹம் பண்ணனும்னு என் குருவை நினைத்து நமஸ்காரம் செய்தேன்'' என்று முடித்தார். ஏகாம்பரத்திடம் இதை எல்லாம் எழுதி எடுத்துண்டு சென்னைக்கு போய் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்'' என்றார். இதை கேட்ட தொண்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னை பார்க்க மாட்டேன், தனக்கு கைங்கர்யம் செய்ய மாட்டேன் என்று இருவர் சொன்னதை யாராவது பெருமையாக வெளியே சொல்லிக் கொள்வார்களா? அல்லது அதை ஊரறிய வானொலியில்தான் ஒலிபரப்புவார்களா? என்று ஆச்சர்யமாக இருந்ததுடன், மஹாபெரியவரின் குருபக்தி எத்தகையது என்று தோன்றியது. ஆனால் தொண்டர் தனக்கு ரேடியோவில் யாரையும் தெரியாது அதனால் இயலாது என்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே மகானின் அருள் விளையாட்டு வெளிப்பட்டது. பெரியவரை தரிசிக்க எட்டு பேர் வந்திருந்தனர். பெரியவா ஏகாம்பரத்திடம் அவர்கள் யார், எங்கிருந்து வரா, என்ன உத்யோகம் என்று விசாரிக்கச் சொல்ல அவர்கள் எட்டு பேரும் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் இயக்குனர்கள் என்றும், அருகில் நெய்சூரில் ஒரு மாநாடு நடப்பதால் அதற்கு வந்ததாகவும், இங்கு மஹாபெரியவா முகாமிட்டிருப்பதை கேள்விபட்டு தரிசிக்க வந்ததாகவும் சொல்ல கேட்ட தொண்டருக்கு வியப்பு தாங்கவில்லை. அழுகையே வந்தது. என்னே மகானின் தவவலிமை. தன் குருவின் மகிமையையும், குருபக்தியையும் உலகறிய வானொலியில் ஒலிபரப்ப விழைந்தால், வானொலி இயக்குனர்களே நேரில் வந்து கைங்கர்யம் செய்ய காத்திருப்பது. மறுநாளே அவர்கள் தக்க உபகரணங்களுடன் அங்கு வந்து ஒலிப்பதிவு செய்து மறுநாளே ஒலிபரப்பினார்கள். குருபக்தி என்றால் இப்படி இருக்க வேண்டும். குருவின் புகழை இப்படி பரப்ப வேண்டும். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மா