குருபக்தி
வைணவப் பெரியவரான ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் அவரது கொள்கைகளை 700 சந்நியாசிகளும் 12,000க்கும் மேற்பட்ட வைணவ அடியவர்களும் பின்பற்றினர். அவர்களில் 74 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து வைணவம் செழிக்கும் மடாதிபதிகளாக ஆக்கினார். அவர்களில் குருபக்தியில் சிறந்தவரான கூரத்தாழ்வாரும் ஒருவர். அப்போது ராமானுஜருக்கு வயது 118 இருக்கும். ஒருநாள் அவரிடம் தான் வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கூறினார் கூரத்தாழ்வார். இதைக்கேட்டதும் பதறி, ''ஆழ்வானே. என்னை இங்கே விட்டுவிட்டு நீ மட்டும் வைகுண்டம் செல்வது முறையா'' எனக்கேட்டார். அதற்கு கூரத்தாழ்வார் பணிவுடன், ''குருவே. தாங்கள் வைகுண்டம் வரும்போது அங்கே தங்களை வரவேற்க நான் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்'' என்றார். பார்த்தீர்களா... குருவின் மீது எப்படி பக்தி வைத்திருந்தார் கூரத்தாழ்வார். அதுமட்டுமல்ல. விதியும் அவர் கூறிய ஆசையை நிறைவேற்றியது. ஆம். இவர் பேசிக் கொண்டிருந்த அன்றைய நாளே வைகுண்டம் சென்றார். அவருக்குரிய இறுதிக் காரியங்களை ராமானுஜரே செய்தார்.