திருமணம் நடந்தது இனிதாக...
சென்னையில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹாபெரியவரை தரிசித்து விட்டு நீலகிரி எக்ஸ்பிரசில் கோவை செல்ல தயாரானார் அந்த பக்தர். ரயில் கிளம்ப இன்னும் முப்பது நிமிடமே இருந்தது. மனதிற்குள் மகளைப் பற்றிய சிந்தனை எழுந்தது. மூன்று வாரத்தில் அவளுக்கு திருமணம். 'கடன் தருவதாக சொன்னவர்கள் கைவிரித்தனர். ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் சமாளிக்கலாம். கொடுப்பவர் யார்?இந்நிலையில் அவரது மனைவி, 'மஹாபெரியவரிடம் சொன்னால் நம் பணப்பிரச்னை தீரும்' என்றாள். அவரும் காஞ்சிமடத்திற்குச் சென்று பிரச்னையைச் சொல்ல சுவாமிகள் கேட்டார். தொடர்ந்து, ''எந்த வண்டியில் கோயம்புத்துார் திரும்புகிறாய், முன்பதிவு செய்தாயா... இருக்கை எண் என்ன' எனக் கேட்டு ஆசியளித்தார். பக்தரும் பதிலளித்தார். இதோ... ரயில் கிளம்பும் நேரம் வந்து விட்டது.அப்போது அவர் பெயரை சொல்லியபடி ஒரு அன்பர் ஓடி வந்தார். முன்பின் தெரியாதவர் என்றாலும்,'' நான் இங்கேதான் இருக்கேன்'' என பக்தர் குரல் கொடுத்தார். ரயிலுக்குள் நுழைந்த அன்பர், ''சார்... என் மகளின் திருமணம் நன்றாக நடந்ததை முன்னிட்டு, சங்கர மடத்திற்கு காணிக்கை தர வந்தேன். ஆனால் அதை தங்களிடம் ஒப்படைக்கும்படி மஹாபெரியவர் தெரிவித்தார்'' என்று சொல்லி ஐம்பதாயிரம் கொடுத்தார். அந்த பணத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார் பக்தர். ரயிலும் புறப்பட்டது. தாயாரை விற்கலாமாதரிசனத்திற்கு வந்தவர்களிடம் 'வயதாகி விட்டால் தாயாரை விற்கலாமா?' என கேட்டார் மஹாபெரியவர். தாயாரை ஏன் விற்கணும்? யார் வாங்குவார்கள்? விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?' என பக்தர்கள் திகைத்தனர். 'தெய்வமான பசுவை கோமாதா என பூஜிக்கிறோம். குளிப்பாட்டுகிறோம். குங்குமம் வைக்கிறோம். அது தரும் பாலை சாப்பிடுகிறோம். ஆனால் பால் சுரப்பது நின்றால் அதைக் கொல்லத் தயங்குவதில்லை. இப்படி பாவம் செய்தால் நம்மை எப்படி கடவுள் காப்பாற்றுவார்? வசதி உள்ளவர்கள் பசுமடம் (கோசாலை) வைத்து வயதான பசுக்களை பாதுகாக்கணும்' என்றார் மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.