உள்ளூர் செய்திகள்

நான் ஒரு தேனீ

பாடத்தை நடத்த குருநாதர் சீடர்களின் முன் நின்றார். கடவுளை அடைய 'குரங்கு நியாயம்', 'பூனை நியாயம்' என்னும் வழிகள் இருப்பது குறித்த உபநிஷதம் பற்றியதாக அன்றைய பாடம் இருந்தது.சீடர்களிடம் குருநாதர்,'நீ குரங்கா? பூனையா?' என கேட்டார். 'சரிதான்! ரொம்ப படித்ததில் குருவுக்கு பித்து பிடித்து விட்டது போலிருக்கு” என மனதிற்குள் எண்ணிய சீடன் சிரிப்பை அடக்கியபடி, “குருவே! நான் மனிதன்” என்றான்.அவனிடம் குரு, “நீ மனிதன் தான்! இறைவன் மீது பக்தி செலுத்துவதில் குரங்கு நியாயம், பூனை நியாயம் என்று இருவிதம் இருக்குது தெரியுமா? குட்டிக்குரங்கு கைகளால் இறுக்கமாக, தாயைக் கட்டிக் கொள்வது போல, பக்தன் கடவுளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது ஒரு வகை. தாய்ப்பூனை குட்டியை வாயால் கவ்விக் கொண்டு திரிவது போல, பக்தன் கடவுளை சரணடைவது இன்னொரு வகை! இதில் நீ எந்த வகை பக்தியை விரும்புகிறாய் என்பதையே அப்படி கேட்டேன்,” என்றார். சீடன் குருவிடம், “ஊகூம் நான் தேனீ ” என்றான். மேலும்,“குருவே! பூக்களால் காற்றில் வாசனை பரவுகிறது. அதை நாடி, தேனீ சுதந்திரமாகப் பறக்கிறது. நான் தேனீயாக இருக்க, கடவுளும் பூ போல அருளை வாரி வழங்க காத்திருக்கிறார். நானும் தேனீயும் இன்பத்தேன் பருகுவது உறுதி!,” என்றான். சீடனின் விளக்கம் கேட்ட குரு வியப்பில் ஆழ்ந்தார்.