பரீட்சைக்கு நேரமாச்சு!
காஞ்சி சங்கர மடத்தில் ஒருநாள் காலையில் ஏழைச்சிறுவன் ஒருவன் மகாபெரியவரை தரிசிக்க வந்தான். சுவாமிக்கு அளிக்க துளசி மாலை ஒன்றை வைத்திருந்தான். வரிசையில் நின்றவர்கள் வில்வம், எலுமிச்சை, ரோஜா மாலைகளுடன் இருந்தனர். சிலர் ஏளனத்துடன் சிறுவனை பார்த்தனர். காரணம் அவனது மாலை சணல் நாரில் கட்டப்பட்டிருந்தது. ஏழை என்பதால் வீட்டில் இருந்த சணலால் அவன் கட்டிஇருக்க வேண்டும். ஆனால், பெரியவரின் அருட்பார்வையோ சிறுவன் மீது விழுந்தது. 'இங்கே வா!' என கையசைத்தார் பெரியவர். ஓடிய சிறுவன், மாலையை அவரின் திருமுன் வைத்து வணங்கினான். மாலையை எடுத்துக் கொண்டே, 'இன்று உனக்கு பரீட்சையா?' என்றார் பெரியவர்.''ஆமாம் சுவாமி... கணக்கு பரீட்சை!'' என்றான். மகாபெரியவர் தன்னிடம் பேசுகிறார் என்ற பெருமிதம் அவன் முகத்தில் பிரகாசித்தது. 'இந்த மாலை நீயே கட்டினதா?''ஆமா. எங்க வீட்டுல துளசிச்செடி இருக்கில்ல! அதை பறிச்சி நானே கட்டினேன். இன்னிக்கு கணக்கு பரீட்சை... அதான் சுவாமிகள் கிட்ட கொடுத்து ஆசி பெற வந்தேன்!'மகாபெரியவர் அதை தன் தலை மீது வைத்தார். 'மாலை எப்படி இருந்தால் என்ன... அவனது பக்தியை அல்லவா நாம் பார்க்க வேண்டும்' என்பது போல அனைவரையும் பார்த்தார். 'பரீட்சையை நன்னா எழுது. நிறைய மார்க் வாங்கு! ஷேமமா இரு!' என ஆசியளித்து, துளசிமாலையை பிரசாதமாக அவனுக்கே கொடுத்தார். சிறுவன் மீண்டும் வணங்கி விடைபெற்றான். அங்கிருந்தவர்கள் துளசி இலைகளை பிரசாதமாக கேட்க சிறுவனும் கொடுத்து விட்டு, 'பரீட்சைக்கு நேரமாச்சு!' என்று சொல்லி சிட்டாய்ப் பறந்தான்.