உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 17

கலியுகத்தின் கொடுமைதங்களை மறந்து மார்க்கண்டேயர் சொன்ன மத்ஸ்யோபாக்யானத்தை கேட்ட பாண்டவரிடம் கிருஷ்ணன், ''என்ன தர்மா... பீமா! இப்படி வாயைப் பிளந்தால் எப்படி? உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள்'' என்றான்.''பிரமிப்பாக இருக்கிறது. வாழ்வென்பதன் பின்புலத்தில் தான் எத்தனை கட்டமைப்புகள்! நம்மைப் படைத்த இந்த பிரம்மத்தின் சிருஷ்டி வல்லமையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை'' என்றான் சகாதேவன்.''ஆம் கிருஷ்ணா! இந்த வாழ்வு தான் எத்தனை விசித்திரமானது? அந்த பேரறிவை என்னால் முழுமையாக உணர முடியவில்லை'' என்றான் அர்ஜுனன். ''கடலில் இருந்து பிரிந்த ஒரு நீர்த்துளி போன்றே நாம்! கடலாய் கடலுக்குள் இருக்கும் வரை ஒரு பலம். பிரிந்து சொட்டாகி விட்டால் அதற்கேற்பவே பலம். இதுவே பரமாத்மா ஜீவாத்மாவின் நிலை. நாம் வேறு பரமாத்மா வேறில்லை. ஆயினும் பரமாத்ம பலம் நமக்கு கிடையாது. காரணம் பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்து விட்ட ஜீவாத்மா ஒரு துளி! மீண்டும் சேர்ந்திட முயலுதலே வாழ்க்கை'' மார்க்கண்டேய மகரிஷி விளக்கமளித்தார். அதைக் கேட்ட தர்மன், 'மகரிஷி... கலியுகம் எப்போது பிறக்கும், எப்படி இருக்கும்?'' எனக் கேட்டான். ''துவாபரத்தின் இறுதியில் நீங்கள் உள்ளீர்கள். உங்களின் முடிவு கலியுகத்தில் தான் நிகழ்ந்திடும். கலியுகத்தில் வாழப் போகும் மானிடருக்கு உங்கள் ஐவர் வாழ்வும், கவுரவாதியர் நுாறு பேர் வாழ்வும் தான் பாடமாக திகழும். அப்போது இந்த பூமி பாரதம் எனப்படும். அதில் உங்கள் வரலாறு மகாபாரதம் என்றாகும். துவாபரத்தின் அவதாரமான இந்த கிருஷ்ணனே கலியில் வழிபாட்டுக்குரியவனாய் இருப்பான். இவன் அருளியதே அனைவருக்கும் வழிகாட்டி நுாலாக திகழ்ந்திடும்(கீதை). இக்காலத்தில் ராமனும் சிந்திக்கப்படுவான். அவன் சரிதம் ராமாயணம் எனப்படும். அவனது நாமமும் கிருஷ்ண நாமமுமே ஜீவன்களுக்கு படகாய், துடுப்பாய் பயன்படும். இதில் படகு ராமன்! துடுப்பு கிருஷ்ணன்!'' என்ற மார்க்கண்டேயர் கிருஷ்ணனை பார்த்தார்.''உங்கள் ஆசையை சொல்லி என் கடமையை ஞாபகப்படுத்துகிறீரா''என்றான் கிருஷ்ணன்.''கிருஷ்ணா நீயே பேசுகிறாய். நீயே இப்படி கேட்கவும் செய்கிறாய். எனக்கு புரியும் இந்த உண்மை இவர்களுக்கும் புரிய வேண்டும்'' என மார்க்கண்டேயர் பாண்டவர்களைப் பார்த்தார். ''மகரிஷி... கலியுகம் மற்ற மூன்று யுகங்களை விட மேலானதாகவும், இனிதானதாகவும் இருக்கும் என்று கூறலாமா?'' என்று கேட்டான் பீமன்.அதற்கு சிரித்தார் மார்க்கண்டேயர். '' நாங்கள் தவறாக கேட்டு விட்டோமா?'' என்றான் நகுலன்.''இந்த யுகத்தில் கால்பாகமே நல்ல குணத்தவர்கள் என நான் உரைத்ததைக் கேட்டுமா இப்படி ஒரு கேள்வி?'' மார்க்கண்டேயர் நிமிர்ந்தபடியே கேட்டார்.''அப்படியானால்...?''''விளக்கமாகவே கூறுகிறேன். கலி என்ற பெயரே கலிபுருஷனிடம் இருந்து தான் வருகிறது. இவன் கரியவன். எதிர்மறையானவன். இவனது மந்திரிகளும் எதிர்மறையானவர்களே! துர்புத்தி கொண்ட ஒரு மந்திரி, களவு புரிபவன் ஒரு மந்திரி, மதுமங்கை மீது ஈடுபாடுடையவன் ஒரு மந்திரி, துரோகம், பொறாமை போன்ற குணங்கள் கொண்டவன் ஒரு மந்திரி இப்படி மனித வாழ்வுக்கு எதிரானவைகளே மந்திரிகளாவர். இவர்களே இந்த யுகத்தை நிர்வகிக்கப் போகின்றனர்'' என்ற மகரிஷியை அதிர்வோடு பார்த்தனர். ''இது என்ன கொடுமை. எதற்காக இப்படி ஒரு சிருஷ்டி?'' என வேகமாய் கேட்டான் தர்மன்.''இப்படி சிருஷ்டிப்பதன் பின்னே தான் ஒரு சுவை ஒளிந்துள்ளது. பாலுக்குள் தான் நெய் உள்ளது. ஆனால் அதை பாலிடம் இருந்து எப்படி பெறுகிறோம்? முதலில் அதை கறக்கிறோம்; பின் காய்ச்சுகிறோம்; பின் மோர் சேர்த்து திரிக்கிறோம்; பிறகு நீர் சேர்த்து மத்தால் கடைகிறோம். இத்தனைக்கு பிறகு மோரில் இருந்து வெண்ணெய் பிரிகிறது. அதை உருக்கினாலே நெய் கிடைக்கிறது.நெய்யைப் பெற இத்தனை பாடுகள். இந்த பாடுகள் இல்லாவிட்டால் நெய் என்பதை பெற முடியாது. இதைப் போன்றதே கலியில் நாம் படப்போகும் பாடுகளும்... அப்படியானால் பாடுபடுத்துபவர்கள் மென்மையாகவா இருக்க முடியும்?''''மகரிஷி... பால், நெய் என உதாரணம் நன்றாக உள்ளது. ஆனால் பாடுகளை நினைத்தால் பதைப்பாக உள்ளதே?''''பக்தி ஒன்றே பதைப்பை போக்கும். மற்ற யுகங்களைப் போல் தியானம் தவம், வேள்வி என சிரமப்பட தேவையில்லை. உள்ளத்தில் உண்மையாக 'ராமா' 'கிருஷ்ணா' என நெகிழ்வோடு நாமா சொன்னால் போதும். பாடுகள் ஏதும் செய்யாது''''அப்படியானால் கலியுகமே மிக எளிய மனிதன் வாழ உகந்த யுகம் எனலாமா?''''தாராளமாக. ஆனால் உண்மையில் கலி வாழ்க்கை அத்தனை எளிதன்று''''இப்படி இரண்டு பதில்கள் சொன்னால் எப்படி?''''உன்னால் தனியே விளையாட முடியுமா?''''இப்போது இந்த கேள்வி எதற்கு?''''பதில் சொல். தனியே விளையாட முடியுமா?''''அது எப்படி? விளையாட்டு என்றாலே இருவர் வந்தாக வேண்டுமே?''''அப்படியானால் உன்னோடு விளையாட இன்னொருவர் வேண்டும் அப்படித்தானே''''நிச்சயமாக...''''அப்படியானால் இருவரில் ஒருவர் தானே வெற்றி பெற முடியும்''''ஆம்... அதிலென்ன சந்தேகம்''''அந்த வெற்றியை உன்னோடு விளையாடுபவர் உனக்கு சுலபத்தில் தந்து விடுவாரா?''''அது எப்படி? அது போராட்டமாயிற்றே''''கலியும் அப்படியே... கலி வாழ்வும் போராட்டமே! எதிர்மறைகள் வெற்றி பெற முடியாதபடி தடுக்கும். அவைகளை வெற்றி கொண்டாலே மீண்டும் பிறவாமை என்ற வெற்றியும் முக்தியும் கிடைக்கும்''''விளையாடினால் தானே வெற்றி தோல்வி? நான் விளையாட விரும்பவில்லை என்றால்?''''துறவியாகி ஆசாபாசங்களில் இருந்து விலகி விடு''''ஓ... கலியுகம் இப்படிப்பட்டதா?''''இன்னமும் இருக்கிறது. உடல் முற்றி முதுமை வந்து சேர்ந்து தள்ளாடி விழுவது போல கலியும் முற்றும். அதனால் நலியும். அந்த கால கட்டங்கள் சவாலாக இருக்கும்''''எப்படி''''கலி முற்றும் போது அதர்மம் அதிகரிக்கும். பொய், களவு சர்வ சாதாரணமாகும். வறுமை, பிச்சை எடுத்தல் போன்றவை நிகழ்ந்திடும்''''அப்படியானால் நல்லவிதமாய் வாழ முடியாதா''''நல்லவர்கள் அற்ப ஆயுளில் மடிவர். மற்றவர்கள் நெடிது வாழ்வர்''''கொடுமை... கொடுமை...''''அதுவே கலியின் நிலைமை. வர்ணாசிரமம் உடையும். பிராமணன் தன்னிலை இழப்பான். சூத்திரன் வேதம் சொல்வான். கோயில்கள் சான்னித்யம் இழக்கும். பெண்கள் பலமணம் புரிவர். கணவன் இருக்க ஒரு பெண் இன்னொருவனோடு கூடுவாள். நீதி விலை பேசப்படும். உடல் வலிவுள்ளவர்கள் பெரிதாக கருதப்படுவர். நலிந்தவர்கள் அடிமைகளாவர். மாமிச போஜனம் பிரதானமாகும்''''போதும் மகரிஷி. போதும். கேட்கவே பதைப்பாக உள்ளது''''அதுவே கலியின் நிலை. ஆசிரியன் கடமையை மறப்பான். அந்தணன் புலால் உண்பான். தாயை தனயனே கொலை செய்வான். உண்மை, பொய்யை பிரித்தறிவது கடினமாகும். கலைகளில் ஆபாசம் மேலோங்கும். வேடத்துறவிகள் அதிகரிப்பர். மொத்தத்தில் மாயை மொத்த பூமியைத் தன் வசப்படுத்திக் கொண்டு விடும்''''இப்படி ஒரு யுகத்தை படைக்கத்தான் வேண்டுமா? அந்த பிரம்மனுக்குள் ஏன் இத்தனை குரூரம்?''பீமன் கோபத்தோடு கேட்டான். மார்க்கண்டேயர் பதிலுக்கு புன்னகைத்தார். -தொடரும் இந்திரா செளந்தர்ராஜன்