உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (19)

பாண்டவர்களிடம் யுத்தம் புரிந்தே தீர வேண்டும் என்பதில் கர்ணன் குறியாக இருந்தான். கர்ணனின் கருத்தின் முன்னால் சோமதத்தன் கருத்து எடுபடவில்லை.கர்ணன் மட்டுமல்ல, துரியோதனாதியர்கள் அவ்வளவு பேருமே தப்புக்கணக்கு தான் போட்டனர். திரவுபதி திருமண விஷயத்தில், அர்ஜூனன் அவளைத் தன் சகோதரர்களுக்கும் சேர்த்து மணம் முடித்ததை துருபதன் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டான். எனவே, இவ்வேளையில் போர் தொடுத்தால் பாண்டவர்களுக்கு யாரும் உதவ வர மாட்டார்கள். அவர்களை சுலபமாக அழித்து விடலாம் என அவர்கள் எண்ணினர்.போர் குறித்து, பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற குருநாதர்களிடமும் ஆலோசனை கேட்கவில்லை. திருதராஷ்டிரனுக்கே போருக்கு கிளம்பும்போது தான் செய்தி கூறினர். விதுரர் மட்டும் துரியோதனனின் ஆத்திரத்தைப் புரிந்து கொண்டு, முன்னதாக பாண்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கிறார். துரியோதனனின் பொறாமையை அறிந்த துருபதன், தன் பெரும்படையை பாண்டவர்கள் தலைமையில் தயார் செய்தான். யுத்தமும் நடந்தது. அதில், துரியோதனனின் சேனை சிதறிச் சின்னாபின்னமானது.பாண்டவர்களுக்கு மீண்டும் வெற்றி. தங்களை ஆலோசிக்காமல் படை எடுத்துச் சென்றதை பீஷ்மர் கண்டித்தார். வேறுவழியின்றி துரியோதனன் தலைகுனிந்து நின்றான். இது தான் சமயம் என்று பீஷ்மர் பாண்டவர்களுக்கான நியாயத்தை திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறத் தொடங்கினார்.''திருதராஷ்டிரா! 'வாரணாவதம்' என்னும் பெயரில் பாண்டவர்களை அழிக்க முயற்சி நடந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததோடு, பாஞ்சால தேசத்தின் மாப்பிள்ளைகள் ஆகி விட்டனர். அவர்களுக்கு நாட்டில் பாதியைத் தருவது தான் அனைத்து தவறுக்கும் சரியான பரிகாரம். அப்படிச் செய்யாத பட்சத்தில், பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தின் மீதே போர் தொடுத்தால் இந்த மொத்த நாட்டையும் நீ இழந்து விடுவாய்,'' என்று அவர் முத்தாய்ப்பாய் கூறவும், திருதராஷ்டிரன் தன் பிள்ளைகளைச் சமாதானம் செய்து பாதி நாட்டைத் தர சம்மதித்தான்.இச்செய்தி பாண்டவர்களை அடைய அவர்களுக்கு மகிழ்ச்சி.''எல்லாம் திரவுபதி மருமகளாக வந்த நேரம்'' என்கிறாள் குந்தி. அதன்பின் முறைப்படி ஏற்பாடுகள் நடந்தன. கிருஷ்ணனும் இதற்கு துணை செய்தான்.ஆயிரம் பசுக்கள் தானம் அளிக்கப்பட்டன!ஆயிரம் யானைகள் அபிஷேகத்திற்காக கங்கா ஜலம் ஏந்தி வந்தன. நூறு கிராமங்கள் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டன.ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தர்மர் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின், கங்கா ஜலத்தில் நீராட்டும் புரிந்தனர். திருதராஷ்டிரன் ஆசீர்வதித்து தந்த ராஜகிரீடத்தை, பீஷ்மர் தர்மருக்கு அணிவிக்க அவையே ஜெயகோஷமிட்டது.இந்த அற்புத நிகழ்வுக்கு வியாசரும் வந்திருந்தார். அவரிடம் தர்மர் ஆசி பெற்றார். கிருஷ்ணனும் சீர் தந்து கவுரவித்தான். திரவுபதியுடன் பாண்டவர்கள் ரதங்களில் அஸ்தினாபுர வீதியில், மக்கள் பார்க்க வலம் வந்தனர். குந்தியிடம் ஆனந்தக் கண்ணீர்! அதே சமயம் கிருஷ்ணனிடம் தீவிரயோசனை. பலராமர் அதற்கு காரணம் கேட்டார்.கிருஷ்ணன் அவரிடம், ''அண்ணா... இன்று ஒரு நல்ல விஷயம் நடந்து முடிந்தது. ஆனாலும், பாண்டவர்கள் விஷயத்தில் நடப்பதெல்லாமே விசித்திரமாக இருக்கிறது. அவர்களுக்கு எதுவும் சுலபத்தில் கிடைப்பதில்லை. இப்போதும் கூட, திருதராஷ்டிரன் முழுமனதோடு ராஜ்யத்தை தரவில்லை. பட்டாபிஷேகத்திற்கு துரியோதனன் எட்டிக் கூட பார்க்கவில்லை. எனக்கென்னவோ பாண்டவர்களின் பாதி ராஜ்யம் எந்த நிலையிலும் அஸ்தினாபுரத்தோடு இணைந்து இருப்பது நல்லதல்ல என்று தோன்றுகிறது,'' என்றான்.''உன் யூகம் சரி தான் கிருஷ்ணா, நீ காரணமில்லாமல் காரிய சிந்தனை கொள்வதில்லை என்பதை நான் அறிவேன். இதற்கு உன் மாற்றுத் திட்டம் என்ன?'' என்று கேட்டார் பலராமர். ''வேடிக்கை பார்'' என்றான் கிருஷ்ணன். இறுதியாக, திருதராஷ்டிரன் தர்மரை வாழ்த்திவிட்டு, ''நான் தருவதாக சொன்ன பாதிராஜ்யம் என்பது 'காண்டவபிரஸ்தம்' என்னும் பட்டணத்தைக் கொண்டதாகும். நீ அங்கே சென்று உன் அரசாட்சியை தொடங்கி சிறப்பாக வாழ்வாயாக,'' என்று வாழ்த்தினார்.காண்டவபிரஸ்தம் என்ற உடனேயே தர்மரிடம் மட்டுமல்ல, பாண்டவர்கள் ஐவருக்கும் ஒரே திகைப்பு. ஆனால், அருகிலிருந்த கிருஷ்ணன் உடனேயே அதை ஆமோதித்தான்.''திருதராஷ்டிரரே... தர்மனுக்கு நீங்கள் நல்ல வழியைத் தான் காட்டியுள்ளீர்கள். காண்டவ பிரஸ்தம் ஒரு சிறப்பு மிகுந்த பட்டினம். ஆயூ, புரூவரஸ், நகுஷன், யயாதி போன்றோர் ஆட்சி செய்த இடம். எனவே, அந்தப் பகுதி தர்மனைச் சேர்வது பொருத்தமே,'' என்றார்.கண்ணனே வழிமொழிகிறான் என்றால் அதன் பின் அதை சந்தேகிக்கவே தேவையில்லை என்ற முடிவுக்கு பாண்டவர்கள் வந்தனர். அன்றே திருதராஷ்டிரன் வழங்கிய சதுரங்க சேனைகளோடு பாண்டவர்கள் காண்டவபிரஸ்தம் நோக்கி புறப்பட்டனர். அப்போது ஒரு அதிசயமும் நடந்தது.அஸ்தினாபுரத்து மக்களும்வண்டி கட்டிக் கொண்டு பாண்டவர்கள் பின்னால் காண்டவ பிரஸ்தத்துக்கு புறப்பட்டனர். மக்களின் இந்த போக்கை அறிந்த துரியோதனன், ஊர் எல்லையில் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். வேறு வழியில்லாமல், மக்கள் சோகத்துடன் பாண்டவரை வழியனுப்பினர். அவர்கள் காண்டவபிரஸ்தம் சென்ற வேளையில், அவ்வூர் பொலிவிழந்து கிடந்தது. பாண்டவர்கள் கால் வைத்ததும் அங்கு மழை பொழிந்தது. நனைந்தபடியே அவர்கள் ஊருக்குள் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் இந்திரனை அழைக்க, அவன் ஓடி வந்தான்.''இந்திரா.... இந்த காண்டவபிரஸ்தம் பொலிவு பெற வேண்டும். இதன் பொலிவைப் பார்த்து தேவலோக அமராவதியோ என மக்கள் நினைக்கவேண்டும்,'' என்று கூறிட, இந்திரனும் விஸ்வகர்மாவை அழைத்து காண்டவபிரஸ்தத்தை இந்திரபிரஸ்தமாக்கப் பணித்தான்.அடுத்தநொடி நகர நிர்மாணம் தொடங்கியது. எட்டுத்திசையிலும் விண்ணை முட்டும் மதில்கள் எழுந்தன. அகழிகள் உருவாயின. தேர் புகுமளவு நாலாபுறத்திலும் வாயில்கள். ஆயிரம் யானைகள் நடந்து வரும் வகையில் அகலமான தெருக்கள், இருபுறமும் மாளிகைகள், மையத்தில் அரண்மனை, ஊருக்குள்ளே 'மா, கடம்பு, ஆம்ரா, அசோகம், புன்னை, பலா, ஆச்சா, பனை, மகிழம், தாழை, அருநெல்லி, பாதிரி, நீர் நொச்சில், தினிசம், அலரி, பாரிஜாதம்' என்னும் பல விதமான மரங்கள்... அதில் பத்துவகை ஊர்ப்பறவைகளும் கூடிக் கும்மாளமிட்டன. இதுபோக, நந்தினி என்னும் நதியும் அங்கு பாயத்தொடங்கியது.பாண்டவர்கள் புதிய நகரைப் படைத்த விஸ்வகர்மாவுக்கு நன்றி கூறினர். இது அனைத்துக்கும் காரணமான கிருஷ்ணனை, மகாவிஷ்ணுவாக பார்த்த குந்திதேவி, ''கண்ணா உன் கருணையே கருணை'' என்றாள்.அப்படிப்பட்ட இந்திரபிரஸ்த நகருக்கு ஒருநாள் நாரதர் வந்தார். - தொடரும்இந்திரா சவுந்தரராஜன்