உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (8)

ஆணி மாண்டவ்யரின் <நிஜப்பெயர் மாண்டவ்யர் தான். இல்வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல் தீர்த்த யாத்திரை செய்து தவம் செய்வதை தன் நோக்கமாக கொள்கிறார். அதன் பொருட்டு ஒரு ஆற்றோரம் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு அந்த ஆசிரமத்தில் அமர்ந்து மவுனத் தவம் செய்யத் தொடங்குகிறார். பொதுவில் இது போன்ற தவத்தில் ஈடுபடுபவர்கள் புயல், மழை, காற்று என்று எதற்கும் அஞ்சமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் தான் பாம்புப் புற்றுகள் எழும்பி மூடி மறைத்துக் கொள்ளும். தவமானது பல ஆண்டுகள் கூட கலையாது நீடிக்கும். அப்படி ஒரு தவத்தில் மாண்டவ்யர் ஈடுபட்ட போதுதான் அவர் வாழ்விலும் விதி விளையாடத் தொடங்குகிறது. அவரது ஆஸ்ரமம் அமைந்திருந்த இடத்திற்கு அருகிலுள்ள நாட்டில் திருடர்கள் சிலர் களவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அரசனின் அரண்மனையிலேயே களவில் ஈடுபட்டு நகைகளை திருடிக் கொண்டு செல்ல முனையும் போது அரண்மனை வீரர்கள் பார்த்து விடுகின்றனர். திருடர்கள் தப்பி ஓட அவர்களை அரண்மனை வீரர்கள் துரத்துகின்றனர். அப்படி ஓடிவந்த திருடர்கள் மாண்டவ்யரின் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து ஒளிந்து கொள்கின்றனர். வீரர்கள் மாண்டவ்யரிடம், ''இந்த பக்கமாய் கள்ளர்கள் வந்ததைப் பார்த்தீர்களா? அவர்கள் எந்தப் பக்கம் சென்றனர்?'' என்று கேள்வி எழுப்ப மாண்டவ்யர் பதிலேதும் சொல்லாமல், மூடிய கண்ணைத் திறக்காமல் தவத்தைத் தொடர்கிறார். வீரர்கள் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து பார்க்க திருடர்கள் ஒளிந்திருப்பது தெரியவருகிறது. மாண்டவ்யருக்கும் கள்வர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் மாண்டவ்யர் தங்கள் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் மவுனத்தில் தவம் புரிவது போல நடித்தார் என்று குற்றம் சாட்ட அரசனும் மாண்டவ்யரை கழுவிலேற்ற உத்தரவிடுகிறான். அதற்கேற்ப கழுமரம் தயார் செய்யப்பட்டு அதன் மேல் உடம்பை இரு கூறாக பிளக்கும் கூரிய பெரிய ஆணி பதிக்கப்படுகிறது. அந்த ஆணிமேல் அப்போதும் தவத்தில் மவுனமாய் இருக்கும் மாண்டவ்யரும் அமர்த்தப்படுகிறார். ஆணியானது மாண்டவ்யர் உடலு<க்குள் புகுந்தும் மாண்டவ்யர் தவம் கலையவில்லை. அவர் வதைபடவோ அவர் உயிர் பிரியவோ இல்லை. அதைக்கண்ட பிறகே அரசன் அவர் ஒரு பிரம்ம ரிஷி... அவரைக் கழுவிலேற்றி பெரிய பாவத்தைச் செய்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டு கழுவில்இருந்து இறக்க உத்தர விடுகிறான். இருப்பினும் மாண்டவ்யர் உடம்புக்குள் புகுந்த கூரிய ஆணியை அகற்ற முடியவில்லை. மாண்டவ்யரும் அதை பற்றி கவலைப்படவில்லை. அரசனோ அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். மாண்டவ்யருக்கும் கோபம் வருகிறது. ஆனால், தன்னை கழுவிலேற்றிய அரசன் மேலல்ல.தனது விதியின்மேல்.....!எதனால் தனக்கு இவ்வாறு ஆனது?அனைத்தையும் துறந்து தவம் செய்யும் ஒரு துறவிக்கு இப்படி ஒரு துன்பம் வரலாமா?மாண்டவ்யர், ஆணி மாண்டவ்யராகி தர்ம தேவதை முன் சென்று நிற்கிறார். அவர் வந்து நிற்கும் வேகத்தைப் பார்த்து, தேவதையே சற்று நடுங்கிப் போகிறாள். 'தனக்கு நேரிட்ட துன்பத்திற்கு நான் என்ன பாவம் செய்தேன்?' என்று கேட்கிறார். தர்ம தேவதையும் அவர் பத்து வயது சிறுவனாக பூர்வ ஜென்மத்தில் இருந்தபோது பறவைகளை கற்கள் கொண்டு எரிந்து காயப்படுத்தியதாகவும் அந்த பாவத்தையே இப்போது அனுபவிக்க நேர்ந்ததாகவும் கூறுகிறாள்.அதைக் கேட்ட மாண்டவ்யர் தர்ம தேவøயை பெரும் கோபமுடன் பார்க்கிறார்.''தேவதையே! ஒரு மனிதன் பன்னிரண்டு வயதாகும் வரை செய்யும் பாவங்கள் அறியாத பாவங்கள் என்பது உனக்கு தெரியாதா? அறிந்து செய்யும் பாவங்களுக்கு தானே ஒருவன் தண்டனை அனுபவிக்கலாம்? பாவம்எது, புண்ணியம் எது என்றும் கூட தெரியாத வயதில் செய்த பாவங்களை கணக்கில் கொள்வது எந்த வகையில் சரி?'' என்று கேட்க தர்ம தேவதையா<ல் அவருக்கு பதில் கூற முடியவில்லை. மவுனமாக நின்ற அவளிடம் ஆணிமாண்டவ்யர், ''தேவதையே.... தவறு யார் செய்தாலும் தவறு தான்! தர்மம் நிலை பெற வேண்டுமென்றால், நீ செய்த தவறுக்கு தண்டனையாக நீ மானிட ஜென்மம் எடுக்கக் கடவாய். அப்படி எடுக்கப் போகும் பிறப்பில் எது தர்மம்? எது நியாயம்? எது நீதி? என்பதை உலகுக்கு உணர்த்துவாய்! நீ எடுக்கப்போகும் பிறப்பால் மனித குலத்துக்கு ஒரு அறநூலும் கிடைக்கட்டும்,'' என்று சபிக்கிறார். அந்தச்சாபம் தான் வியாசருக்கும் வேலைக்காரிக்குமான உறவில் விதுரனாக சந்திர குலத்தில் வந்து உதித்தது. விதுரர் பெரும் நீதிமானாக விளங்கி, 'விதுர நீதி' என்ற தர்ம சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார்!இவர் தான் கனகன் மூலம் பாண்டவர்கள் தப்பிப் பிழைக்கவும் காரணமாகிறார். தப்பிப்பிழைத்த பாண்டவர்களும் வனப்பிரவேசம் செய்கிறார்கள். இந்த வனப்பிரவேசத்தில் இவர்கள் சந்திக்கப்போகும் முக்கியமான சுவையான பாத்திரங்கள் தான் மூன்று அரக்கர்கள். அதில் முதல் இருவர் தான் இடிம்பன், இடிம்பி என்னும் பாத்திரங்கள்!(முருகப்பெருமானின் கந்த புராணத்து பாத்திரங்களான இடும்பன் வேறு) இடிம்பன், இடிம்பிக்கு மனித மாமிசம் என்றால் உயிர். அரக்கர்களான இவர்களுக்கு மனிதர்களுக்கான தர்மநியாயங்கள் பொருந்தாது. அரக்கர் இனத்துக்கென்று பல தன்மைகள் உண்டு. விரும்பிய வடிவம் எடுப்பது, வானில் பறந்து திரிவது என்று மகேந்திர ஜால வித்தைகள் எல்லாம் செய்வார்கள். இடிம்பன், இடிம்பிக்கு அண்ணன். இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள வனத்துக்குள்தான் பாண்டவர்கள் பிரவேசிக்கின்றனர். ஒரு பெரும் மரத்தடியில் களைப்போடு படுத்து உறங்குகின்றனர். அவர்களுடைய பிரவேசம் இடிம்பனால் உணரப்படுகிறது. அவனது பருத்த நாசிக்கு நர வாசனையை உணரும் சக்தி மிகுதி. எனவே இடிம்பன் இடிம்பியிடம், ''சகோதரி... நெடுநாட்களுக்குபிறகு என் நாசி நர வாசனையை அனுபவிக்கிறது. நமக்கு இன்று நல்ல வேட்டைதான். யார் அந்த மானுடர்கள் என்று பார்த்துவா,'' என அனுப்புகிறான். இடிம்பியும் காற்றாய் பறந்து மரத்தினடிக்கு வருகிறாள். அங்கே பஞ்சபாண்டவர்களையும், குந்தியையும் பார்க்கிறாள். அதில் பீமன் இடிம்பியை மிகவே கவர்ந்து விடுகிறான். பீமனின் பருத்த உடலும், பரந்து விரிந்த தோள்களும் அரக்கியான அவளை பெரிதும் மயக்கி விட, அவள் வந்த நோக்கத்தை மறந்து போகிறாள். அதேசமயம் பீமன் கண் விழித்திட அவன் எதிரில் தன் அரக்க உருவத்தில் செல்லாமல் ஒரு அழகான இளம் பெண்ணாக அப்சர கன்னிகை போன்ற தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு அவன் எதிரில் சென்று நிற்கிறாள். ''யார் நீ?'' என்று கேட்கிறான் பீமன். ''நான் இந்த வனத்துக்கு சொந்தக்காரி. நானும் என் சகோதரனும் இந்த வனத்தை ஆள்பவர்கள். இங்கே எங்கள் அனுமதி இல்லாமல் ஒருவர்கூட நடமாட முடியாது. உங்கள் வருகையை அறிந்து வந்தேன். உன்னைக்கண்ட மாத்திரத்தில் நான் என்னையே மறந்துவிட்டேன். உன்னை மணந்து, இன்ப வாழ்வுவாழ என் மனம் விரும்புகிறது,'' என்று பளிச்சென்று தன் விருப்பத்தைக் கூறுகிறாள். பீமன் சிரிக்கிறான். அந்த நாளில் இது போல கண்டவுடன் தோன்றும் காதல் தான் காந்தர்வ காதல் எனப்படும். அப்படி காதலோடு கூடி மணம் புரிவதுதான் காந்தர்வ மணம். இதற்கு எந்த கட்டுப்பாடும் தடையும் கிடையாது. விருப்பம்தான் இதன் அடிப்படை!ஆனால், பீமனோ இடிம்பியிடம், ''அழகான பெண்ணே.... நீ இதற்கு முன் மானிடர்களையே பார்த்தது இல்லையா என்ன? இவ்வளவு வேகமாக என்மேல் மோகம் கொண்டு விட்டாயே.... நானொன்றும் என் விருப்பம் போல நடக்க முடிந்த ஒருவன் அல்ல... உறங்கிக் கொண்டிருப்பவர்கள் என் சகோதரர்கள். அந்த மாதரசி என் தாய். நாங்கள் மிக துர்லபமான ஒரு நிலையில் இந்த வனப்பிரவேசம் செய்திருக்கிறோம். தூங்கி எழுந்தவுடன் சென்று விடுவோம். நீ போய் உன் மற்ற வேலைகளைப் பார்,'' என்கிறான். அவன் பேச்சைக்கேட்டு இடிம்பி வருந்துகிறாள். ''மகானுபாவரே! நான் பார்க்க அழகாயிருந்தாலும் அரக்க குலத்தைச் சேர்ந்தவள். என் பெயர் இடிம்பி. எனக்கு இடிம்பன் என்ற அண்ணன் இருக்கிறான். அவன் உங்களைக் கண்டால் கொன்று தின்று விடுவான். எனவே நீங்கள் என்னை மணந்து கொண்டு எனக்கு உறவாகி என் அண்ணனிடம் இருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்,'' என்கிறாள். பீமன் திரும்பவும் சிரிக்கிறான். ''நீ உண்மையை சொன்னதற்காக உன்னை பாராட்டுகிறேன். அதே சமயம் உன் அண்ணனைச் சொல்லி என்னை பயமுறுத்த முடியாது. உன் அண்ணன் வந்தால் ஆபத்து அவனுக்கு தானேயன்றி எனக்கில்லை,'' என்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே இடிம்பனும் வந்து விடுகிறான். பீமனுடன் இடிம்பி பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு கோபப்படுகிறான். இடிம்பி அவனை சமாதானப்படுத்தப் பார்க்கிறாள். ஆனால், இடிம்பன் கேளாமல் பீமனோடு மோத பீமனும் அவனை எதிர்கொள்கிறான். இருவர் மோதும் சப்தமும் மற்ற பாண்டவர்களின் உறக்கத்தை கலைத்துவிட அவர்கள் எழுந்து யுத்தத்தை கவனிக்கின்றனர். இடிம்பியிடம் குந்தி நடந்ததை கேட்க, இடிம்பியும் நடந்ததை கூறுகிறாள் இவ்வேளையில் அர்ஜுனன் தன் பாணத்தால் இடிம்பனுக்கு குறிவைக்க முனைய பீமன் அவனோடு சண்டை செய்தபடியே வேண்டாமென்கிறான். ''தம்பி, இவன் என்னாலேயே சொல்லப்பட வேண்டும், நீ பாணம் போடாதே..'' என்று தடுக்கும் பீமன் இடிம்பனைத் தூக்கி வானில் எறிந்திட கீழே விழுந்து தலை உடைந்து இடிம்பன் உயிரும் பிரிகிறது.பின் குந்தி இடிம்பியின் விருப்பத்தை அறிந்து, பஞ்ச பாண்டவர்களுடன் கலந்து பேசுகிறாள். ''வாரிசுகளுக்காக சந்திர குலம் பட்ட பாட்டை நான் அறிவேன். உங்களை எல்லாமும் கூட நான் தேவர்களின் உதவியால் தான் பெற்றேன். எனவே இடிம்பியின் விருப்பம் ஒரு வகையில் வம்ச விருத்திக்கு உதவும். பீமனும் பலசாலி. அவனுக்கேற்றவளே இடிம்பி. எனவே இவர்களை நாம் மணம் செய்யச் சொல்லலாம்,'' என்கிறாள். பீமனோ, ''தாயே... நாடிழந்து நாடோடிகளாக திரிந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டை திரும்ப அடையும் பெரும் கடமை காத்திருக்கிறது. இடையில் எனக்கு எதற்கு திருமணம்?'' என்று கேட்கிறான். ஆனால் தர்மபுத்திரர் தாயான குந்தியின் விருப்பம் இறுதியில் நல்லதே செய்யும் என்று நம்பி பீமனுக்கும் இடிம்பிக்கும் அந்த வனத்திலேயே திருமணம் செய்விக்கிறார். இத்திருமணத்திற்கு வியாசரும் வருகிறார். வந்தவர் இடிம்பியின் உண்மையான பெயர் கமலபாலிகை என்று கூறி, ''பீமனை மணந்ததாலும், அரக்ககுணத்தை விட்டொழித்ததாலும் இனி இவள் கமலபாலிகை என்றே அழைக்கப்பட வேண்டும்,'' என்கிறார். கமலபாலிகைக்கும் பீமனுக்கும் விரைவிலேயே ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. அது யார் தெரியுமா?- தொடரும்இந்திரா சவுந்தரராஜன்