உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்! (9)

அவன் தான் கடோத்கஜன். கடோத்கஜன் பிறக்கும்போதே பெரும்வலிமையோடும் பிறந்தான். கடம் போன்ற தலையில் ஏராளமான முடி இருந்ததால், கடோத்கஜன் என்னும் பெயர் வந்தது.ராட்சஷ கர்ப்பம் ஆனதால், மானுட லட்சணங்களோ, இயல்புகளோ அவனிடம் இல்லை. ஆனாலும், தாய் இடிம்பியின் மீதும், பீமன் மீதும் அவனுக்கு அதீத பாசம் இருந்தது. இதன் பின் பாண்டவர்களின் பயணம் அங்கிருந்து தொடங்கியது. இடிம்பியும் கடோத்கஜனும் அரை மனதாக பாண்டவர்களைப் பிரிந்தனர். அப்போது இருவரும் பீமனிடம், ''எங்களை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் நாங்கள் தோன்றுவோம். உங்களுக்கு தேவையானதைச்செய்வோம்,'' என்று கூறியே பிரிந்தனர்.இந்நிலையில் அவர்கள் அடுத்து சென்று தங்கியது ஏகசக்ரம் என்னும் நகரத்தில்..! பிராமண வேடத்தில் வந்த அவர்களுக்கு ஏகசக்ர நகரில் ஒரு பிராமணர் வீட்டில் அடைக்கலமும் கிடைத்தது. ஆனாலும், அவர்களுக்கு பாரமாக இல்லாமல் இருக்கவும், பிராமணர்கள் என்றாலே பிட்சை எடுத்து அதில் கிடைப்பதை புசித்து வாழவேண்டும் என்கிற நெறி இருந்த காரணத்தினாலும் அர்ஜுனனும் பீமனுமே பிட்சைப் பொருட்களை பெற்று வந்து, அதைத்தான் குந்தி சமைத்து அவர்களுக்கு பரிமாறினாள்.வாழ்வில் புயல் வீசும்போது எல்லாவித நிலைப்பாடுகளையும் சந்திக்க நேரிடும் என்பதற்கு பாண்டவர்களுக்கு நேரிட்ட இந்த துன்பங்கள் உதாரணம். ஏகசக்ர நகரத்தில் அவர்கள் தங்கியிருந்தபோதுதான் பீமனால் பகாசுர வதமும் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் பிராமணர்களால் நித்ய வேள்வி புரியவோ, அனுஷ்டானங்கள் செய்யவோ இயலவில்லை. செத்துச்செத்து பிழைக்க வேண்டியவர்களாக இருந்தவர்கள் இறுதியில் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக 'எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்' என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.அந்த ஒப்பந்தப்படி பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டு பிராமணர் குடும்பம் அன்று பகாசுரனுக்கு உணவை அனுப்ப வேண்டும். கூடவே நரமாமிசமாக அவர்களின் புதல்வனையும் அனுப்ப வேண்டும். இப்படி உயிரோடு ஒரு அசுரனுக்கு இரையாக யாருக்கு மனம் வரும்? ஆனாலும் வாக்களித்து விட்டபடியால் அதன்படி நடந்து கொண்டே தீரவேண்டும். இதன் காரணமாக அந்த பிராமணரும் அவர் மனைவியும் கண்ணீர் விட்டபடி இருந்தனர். அதை அறிந்த குந்திக்கும் மனம் கசிந்தது.பலத்தில் ஆயிரம் யானைகளுக்கு நிகரான பீமனை எண்ணி குந்தியும் ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த பிராமணரிடம், ''நீங்கள் உங்கள் பிள்ளையை அனுப்ப வேண்டாம். நான் என் மகனை அனுப்புகிறேன். இன்றோடு இந்த பிரச்னை தீர்ந்து இந்த நகரமும் துக்கம் நீங்கி செழிப்போடுசந்தோஷமாய் திகழட்டும்,'' என்றாள்.அதைக்கேட்டு அந்த பிராமணரும் அவர் மனைவியும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பீமனால் அந்த பகாசுரனை எதுவும் செய்ய முடியாது என்று கருதியதோடு, இதனால் உங்கள் மகனைக் கொன்ற பாவம் எங்களை வந்துசேரும் என்று பெரிதும் வருந்தி மறுத்தனர்.ஆனால், பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது. பக வதம் செய்த பீமனையும் ஊரார் சுற்றி வந்து வணங்கினர். குந்தியும் பூரித்துப் போனாள். நாங்கள் தங்கியிருந்தது பிட்சை எடுத்து வாழ வழி செய்த பிராமணருக்கும் ஏகசக்ர நகருக்கும் பீமன் மூலமாக நன்றி காட்டிவிட்டதாகச் சொல்லி மகிழ்ந்தாள்.இவ்வேளையில்தான் பாஞ்சால தேசத்தில் துருபதன் தீயில் பூத்த தன் மகளான திரவுபதிக்கு சுயம்வர ஏற்பாடுகளைச் செய்திருந்தான். அதைக் கேள்விப்பட்டு பல அரசர்களும் மகாரதர்களும் பாஞ்சால தேசம் நோக்கி செல்லத் தொடங்க தர்மரும்,தம்பிகளுடன் பாஞ்சால தேசம் சென்று அந்த சுயம்வரத்தை பார்க்க சித்தமானார்.திரவுபதிக்கான சுயம்வரத்தில் பங்கு கொள்ளும்முன், அர்ஜுனனுக்கு, அங்காரபர்ணன் என்ற கந்தர்வன் மூலம் ஒரு கந்தர்வாஸ்த்ரம் கிடைக்கிறது. அங்காரபர்ணன், குபேரனுக்கு நெருங்கிய நண்பன். அதுமட்டுமல்ல... பொறாமையும் அகந்தையும் மிகுந்த இவன் பெரும் மாயன்... அங்க்ர வித்தை கற்றவன். பெரும் காமாந்தகனுமாவான்!கந்தர்வர்கள், இரவில் குறிப்பாக சந்திவேளை கழிந்த எண்பது வினாடிகளுக்கான கால கதியில்,அதாவது முன்னிரவிலும், பின் பிரம்ம முகூர்த்த காலம் தொடங்கும் வரையிலான பின்னிரவுக் காலத்திலும்தான் ஆற்றில் நீராடுவார்கள். இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சாபம்.இக்கால வேளையில் மானுடர்கள் நதிகளில் நீராடுவதில்லை. நதி நீராடுவதற்கான சாத்திரங்களும் இதையே வழிமொழிகின்றன. அங்காரபர்ணனும் தன் இச்சைக்குரிய கந்தர்வப் பெண்களுடன் பூமியில் பாயும் புண்ணிய நதியான கங்கையில் அந்த இரவு வேளையில் நீராடிக் கொண்டிருந்தான். அங்கே பாண்டவர்கள் வந்து சேர்கின்றனர். களைப்பு நீங்க கங்கையில் நீராட அவர்கள் மனம் எண்ணுகிறது. இரவின் கருமையை வெற்றிகொள்ள, அர்ஜுனன் கங்கைக்கரையில் தீ மூட்டுகிறான். அதன் வெளிச்சத்தில், அங்காரபர்ணன் ஜலக்ரீடை செய்தபடி இருப்பது கண்களில் படுகிறது.அங்காரபர்ணனும் பாண்டவர்களைப் பார்க்கிறான். பிராமண வேடத்தில் அவர்கள் இருந்தமையால் அவனுக்கு அவர்கள் அற்ப மானிடர்களாக கண்ணுக்கு தெரிகிறார்கள். கோபமாக கரைக்கு வந்தவன் அர்ஜுனனைப் பார்த்து 'யார் நீங்கள்... இங்கே இவ்வேளையில் நீராட உங்களுக்கு உரிமையில்லை. இது கந்தர்வனாகிய என் போன்றோர் நீராடும் நேரம்' என்று அகங்காரமாக பேச, அர்ஜுனன் முகம் சிவக்கிறது. அங்காரபர்ணன்தொடர்கிறான்.''மானிடர்களான நீங்கள் முதலில் கந்தர்வர்களைக் கண்டால் வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலும் நான் குபேரனுக்கு நண்பன். மாவீரன்...என் போல அஸ்த்ரப் பயிற்சி பெற்றவர்களையே பார்க்க முடியாது!'' என்று தற்பெருமை பேசுகிறான். அவனை அடக்க என்ன வழி என்று அர்ஜுனன் எண்ணும்போது, துரோணர் அவனுக்கு தந்த அக்னியாஸ்த்ரம் நினைவுக்கு வருகிறது. ''இதை மனிதர்களுக்கும், பூவுலகைச் சார்ந்த எந்த உயிர்களுக்கு எதிராகவும் மட்டும் பயன்படுத்தி விடாதே' என்று அவர் கூறியிருந்ததும் அவன் நினைவுக்கு வருகிறது. எதிரில் நின்று மார்தட்டும் இவனோ கந்தர்வன்... இவனுக்கு எதிராக அதை எடுத்தால் தவறில்லை என்று தோன்றல அர்ஜுனன் அக்னியாஸ்திரத்தை எடுத்து பிரயோகிக்க தயாரானான். அதைக்கண்ட கந்தர்வனும் தனது கந்தர்வஸ்திரத்தை கையில் எடுத்தான்.-தொடரும்இந்திரா சவுந்தரராஜன்