உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜாலம்-2 (8)

'வைரத்தை வைரத்தால்...' என கிருஷ்ணன் சொன்ன உதாரணம் பீஷ்மரை பிரமிக்க வைத்தது. கிருஷ்ணன் அதற்கு சுருதி சேர்க்க தொடங்கினான்.''பாஞ்சாலி.. நீ பாக்கியசாலி! ஆச்சார்யாருக்கு எப்போதும் ஒரு நாக்கு ஒரு வாக்கு தான். உன்னை 'தீர்க்க சுமங்கலி' என்று வாழ்த்தி விட்டபடியால், உன் திருமாங்கல்யத்திற்கு துளி பங்கமும் வராது. அவரால் மட்டுமல்ல; எவராலும் வராது. ஆச்சார்யார் வாக்கு அருள் வாக்கு!'' என்றான்.கொலுசை கழற்ற சொன்னது, பாதக் குறடுகளை (காலணி) நீக்க சொன்னது, தன் முகத்தை மறைக்க சொன்னதன் காரணம் அப்போது தான் திரவுபதிக்கு புரிந்தது.கூடவே இப்படி ஒளிந்து கொண்டா, ஆசிகளைப் பெறுவது என்ற கேள்வியும் எழுந்தது.கிருஷ்ணனுக்கும் அது தெரிந்து விட்டது.''என்ன பாஞ்சாலி... பிதாமகர் ஆசிகளை குறுக்கு வழியில் பெற்று விட்டோம் என சஞ்சலப்படாதே.. நல்லதை எந்த வழியிலும் பெறலாம். தீயவைகளைத் தான் நல்வழியில் கூட பெறக்கூடாது'' என பீஷ்மரையும் ஏறிட்டான் கிருஷ்ணன்.பீஷ்மர் பெருமூச்சு விட்டார்.பின், 'கிருஷ்ணா.. நீ பாண்டவர் பக்கம் நின்று விட்டதாய் கேள்விப்பட்ட நொடியே, அவர்களை ரட்சிப்பாய் என்று விதுரனிடம் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன். அதை நீ இப்போது மெய்ப்பித்து விட்டாய்' என்றவர்.'அதற்காக என்னை நீ சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாய் என கூற மாட்டேன். எனக்கும் நீ ரட்சனை தான் புரிந்துள்ளாய். இந்த யுத்தத்தை எண்ணியும், களத்தில் கவசம் தரித்து நான் போராடப் போவது குறித்தும் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இப்போது உன்னால் அது நீங்கி விட்டது'' என்றார்.கிருஷ்ணன் மவுனமாய் இருக்க பிதாமகர் தொடர்ந்தார்.'எனக்கும் செஞ்சோற்றுக்கடன் உண்டு. அதன் பொருட்டு நான் களத்தில் நின்று போராடப் போவது உறுதி. ஆனால் என் ஆசிகள் பாண்டவர்களை காக்கும். என் பாண மழை அந்த ஐவர் தவிர்த்து, அனைவர் மீதும் பொழியும். இதை துரியோதனனிடமும் விடுவேன். அன்று திரவுபதியின் மானம் காத்தாய். இன்று, என்னிடம் இருந்தும் காப்பாற்றி விட்டாய்'' என்றார்.புறப்படத் தயாரானான் கிருஷ்ணன்.திரும்பிச் செல்லும் சமயம் திரவுபதி, அணிந்து வந்த பாதக்குறடுகளை மறந்து நடந்தாள். அதை எடுத்து வந்து ''இதை மறந்து விட்டாயே?'' என்பது போல் அவள் முன் போட்டான்.'அண்ணா.. எனக்காக நீங்கள் உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? என் பாதக் குறடுகள் உங்களை தீண்டும்படி செய்து விட்டேனே... இந்த பாவத்துக்கு நான் என்ன பாடுபடப் போகிறேனோ...' என்றவளை கூர்மையாக பார்த்த கிருஷ்ணன்,'நான் உன்னை பாவியாக்கி விட்டேன் என்கிறாயா?' என கேட்ட கேள்வியால் திரவுபதி திணறிப் போனாள்.'பதட்டமடையாதே! மனிதனுடைய உடல் பாகங்களில் கால்களே தலையானவை. மனிதன் நகர்ந்து வாழத் துணை செய்பவை. நின்ற இடத்திலேயே நகராமல் விருட்சங்கள் போலொரு வாழ்க்கையை வாழலாம் தான். அந்த வாழ்வு மனிதனுக்கு ஏற்றதாகாது. நகர்ந்து வாழும் வாழ்க்கைக்கு துணை செய்யும் கால்களே மனிதனை ஞானியாக்குகின்றன. கால்களைப் பாதுகாக்கும் காலணிகள் தியாகத்தின் சின்னங்களாகும். அது எப்படி நீசமானதாகும்?' கிருஷ்ணனின் அடுத்த கேள்வியில் திரவுபதி வசமாய் சிக்கி கொண்டான்.'அண்ணா.. அவை கல், முள், எச்சிலும் பட்டு நம்மை காப்பவை. அந்த பொருளில் நான் அவைகளை அசுத்தமானதாய் கருதி அவ்வாறு குறிப்பிட்டேன்.'''தன்னை அசுத்தமாக்கிக் கொண்டு தன் எஜமானனை சுமந்து கொண்டு, சுத்தமாகவும் வைத்திருக்கும் பாதக்குறடுகளை நாம் பவித்ரமாக கருத வேண்டும். அப்படி கருதியதால் தான் என் முற்பிறப்பில் ராமனாக நான் அவதரித்த தருணத்தில் பரதன் என் பாதக்குறடுகளை அரியாசனத்தில் வைத்து அதையே, நானென்று கருதி ஆட்சி செய்தான். பரதனின் அந்த ஞானத்தோடு பாதக குறடுகளைப் பார்ப்பதே மேன்மை தரும்.''அண்ணா என்னை மன்னித்து விடு...''மன்னிக்கிற அளவுக்கான பிழை நீ செய்யவில்லை. என் மனதில் நிற்கிற ஒரு அறிவுரையை, உன் சிறு பிழை உனக்கு வழங்கியது. இந்த பிழைக்கு நீ நன்றி சொல். அப்படியே, கூந்தல் முடியாத உன் வைராக்யத்தை உறுதிப்படுத்து. நீ தரப்போகும் உற்சாகமே, இனி உன் பதிகளுக்கான பெரும் சக்தியாகும்.''கிருஷ்ணன் சொல்லச் சொல்ல திரவுபதியின் விழிகளில் கண்ணீர் சுரந்தது.கிருஷ்ணன் திரவுபதியோடு வந்து பிதாமகரிடம் ஆசி பெற்று சென்ற சம்பவம் துரியோதனனை எட்டியிருந்தது. பிதாமகர் ஆசிகளை வழங்கி,''பாண்டவர்கள் மேல் என் பாணம் படாது,'' என்று சொன்னதும் சகலரையும் பிசைந்து கொண்டிருந்தது.''கண்ணன் இப்படி செய்வான் என்பது நான் எதிர்பார்த்த ஒன்று தான். இதற்காக நீ பதட்டப்படாதே,'' என்ற சகுனி, ''பீஷ்மருக்கும் வயதாகி விட்டது. யுத்தகளத்தில் உன்னை போல், கர்ணனை போல போராட அவரால் நிச்சயம் முடியாது. நம் பேச்சுக்கும் ஏச்சுக்கும் பயந்தே அவர் களம் காண போகிறார். அவர் குறித்த எண்ணங்களை விட்டுத்தள்ளு.. குரு துரோணரின் மேலும், கர்ணனின் மேலும் கவனமாக இருப்போம்'' என சொல்லும் போது, கர்ணன் வந்தான்.துரியோதனனிடம் உற்சாகம். 'வா கர்ணா.. உன்னைப் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தோம். எல்லாம் அந்த மாயகிருஷ்ணனால் வந்த சஞ்சலம்'''அந்த சஞ்சலம் எனக்கில்லை நண்பா. இந்த உடம்பு, இதில் ஓடும் ரத்தம், உள் புகுந்து வெளிச்செல்லும் காற்று, இவைகளிடம் நீ காது கொடுத்து கேட்டுப் பார். அவை துரியோதனனே என் ஆவி என சொல்வது உனக்கு கேட்கும்..'கர்ணனின் பதில் துரியோதனனை உணர்ச்சி வசப்படச் செய்தது. அப்படியே 'கர்ணா.. என்னை தவறாக கருதிவிடாதே.. எங்கே அந்த கிருஷ்ணன், பிதாமகரை மழுங்கடித்தது போல உன்னையும் கட்டிப் போட்டு விடுவானோ என்ற அச்சம் எனக்கு சற்று முன் வரை இருந்தது. ஆனால் இப்போது நீங்கி விட்டது.'''நண்பா.. இந்த யுத்தம் உனக்கு மட்டுமல்ல, எனக்கும் அவசியம். தனக்கு நிகரில்லை என்னும் செருக்குள்ள அர்ஜுனனுக்கு நான் பாடம் கற்பிக்கப் போவது இந்த யுத்த களத்தில் தான்!' என கர்ணன் உணர்ச்சி வயப்பட்டான்.'இது போதும்... இது போதும் எனக்கு..' என துரியோதனன் துள்ளிக் குதிக்க' உன் நாகாஸ்த்ரமே அர்ஜுனனுக்கு எமன்' என தன் குறுந்தாடியை நீவியபடியே சிரித்தான் சகுனி.அப்படியே 'கர்ணா.. கேட்கிறேன் என தவறாக கருதாதே. ஒருவேளை உன்னைக் காண கிருஷ்ணன் வந்தால் என்ன செய்வாய்?' என்றும் கேட்டான்.'நல்ல கேள்வி மாமா.. அதே சமயம் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு தேரோட்டி மகனான என்னை பொருட்படுத்தி, என் மாளிகைக்கு அந்த கண்ணன் வருவான் என்றா எண்ணுகிறீர்கள்?''கர்ணன் திருப்பிக் கேட்டான்.- தொடரும்- இந்திரா சவுந்திரராஜன்