உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணஜாலம் - 2 (30)

அபிமன்யு குறித்த தெளிவோடு நிமிர்ந்த அர்ஜூனன் அடுத்து கேட்ட கேள்வி, ''என் மகனின் உயிரைப் போர்க்களத்தில் பறித்த பாவி யார்?'' என்பது தான்.''ஒருவரல்ல அர்ஜூனா... ஜெயத்ரதனில் தொடங்கி, துச்சாதனன் புதல்வனான துாஷணன் வரை பலர்...''''கோழைகள்... ஒரு சிறுபிள்ளையை எதிர்க்க இத்தனை பேரா?''''வயதில் தான் அபிமன்யு சிறுபிள்ளை. ஆற்றலில் அவன் உன்னையும் விஞ்சி விட்டான் அர்ஜூனா...''''ஆற்றலில் விஞ்சியவன் ஆயுளில் விஞ்சாது போய் விட்டானே...?'' என்ற அர்ஜூனன் அடுத்த நொடியே உடைந்து அழத் தொடங்கி விட்டான்.தடுத்து ஆறுதல் கூறப்போன தர்மனை கிருஷ்ணன் பார்வையாலே தடுத்தான். அதே வேகத்தில்,''அர்ஜூனா... உன் கோபதாபங்களை உன் கண்ணீரில் கரைத்து விடாதே. உன் வசம் உள்ள தனுராயுதத்தை விட பலம் மிக்கது இப்போது உன்னுள் மூண்டுள்ள கோபம் தான்... சகஜ மாந்தருக்கே கோபம் சத்ரு. போர்க்களத்திலோ அதுதான் நண்பன்!'' என்றான்.''உண்மை தான் கிருஷ்ணா... நான் இனி கண்ணீர் சிந்த மாட்டேன். பதிலுக்கு என் மகனை கொன்ற அந்த கவுரவ கூட்டத்தை குருதி சிந்த வைத்து, அவர்கள் சிந்திய குருதியில் அவர்களையே நீந்தவும் வைப்பேன்...'' என்று வீரசபதம் புரிந்தான் அர்ஜூனன்.கிருஷ்ணன் எதிர்பார்த்ததும் அதைத்தான்! சபதத்தின் தொடர்ச்சியாக ஆர்த்தெழுந்த அர்ஜூனன் ''எனது புதல்வன் அபிமன்யுவின் மரணத்துக்கு முதல் காரணமாக திகழ்ந்தவன் ஜெயத்ரதன்! இந்த ஜெயத்ரதனை நான் நாளைய யுத்தத்தில் கொல்வேன். அவ்வாறு நான் கொல்லாமல் போனால் பாழ்நரகம் எனக்கு வாய்க்கட்டும். ஜெயத்ரத வதம் நாளைய சூரிய அஸ்தமனத்துக்குள் நிகழும். அவ்வாறு மட்டும் நடக்காத பட்சத்தில் அதே போர்க்களத்தில் தீ வளர்த்து, அந்த தீக்குள் பாய்ந்து உயிர் விடுப்பேன் இது சத்தியம்!'' என்று மூன்று முறை சத்ய பிரதிக்ஞை செய்தான் அர்ஜூனன்.அர்ஜூனனின் அந்த வீரசபதம் பாண்டவர்களுக்குள் ஒரு புது எழுச்சியையே ஏற்படுத்தியது. அவர்களும் ஒருசேர ''உன் சத்யப் பிரதிக்ஞையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் அர்ஜூனா...! இனி நமது ஒவ்வொரு அடியுமே வெற்றிக்கான அடிகளாக மட்டுமே இருக்க வேண்டும்'' என்று பீமனும் ஆவேசக்குரல் எழுப்பினான்!அர்ஜூனனின் வீரசபதமும், பீமனின் ஆவேசமும் துரியோதனனுக்கும் ஜெயத்ரதனுக்கும் தெரிய வந்தது. அடுத்த நொடியே ஜெயத்ரதன் பயந்து நடுங்கத் தொடங்கி விட்டான்.''துரியோதனா... அர்ஜூனன் இப்படி ஒரு சபதம் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது'' என்று படபடத்தான்.''கவலைப்படாதே ஜெயத்ரதா... உன்னைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை'' என்ற துரியோதனன் நேராக துரோணரிடம் தான் சென்று நின்றான்.''என்ன துரியோதனா?''''அர்ஜூனன் சபதம் பற்றி அறிவீரல்லவா?''''நன்றாக அறிவேன். நீ கவலைப்படாதே ஜெயத்ரதனை பாதுகாப்பது என் பொறுப்பு..''''இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஜெயத்ரதன் என் தங்கை கணவன் மட்டுமல்ல... கர்ணனைப்போல எனக்கு உற்ற நண்பனும் கூட! எனக்கு உதவி செய்ய வந்த ஜெயத்ரதனுக்கு ஆபத்து என்றால், நட்புக்காக நம்மோடு போரிடும் எல்லோருமே பிறகு என்னை விட்டுப் போய்விடுவார்கள்...''''அறிவேன் துரியோதனா! நாளைய சூரிய அஸ்தமனம் ஜெயத்ரதனுக்கானதல்ல.. அந்த அர்ஜூனனுக்கு தான்! என்னிடம் வித்தை கற்றவன் என்னையே வெல்ல நான் இடம் தர மாட்டேன். அது எனக்கும் இழிவு'' என்றார் துரோணர்!துரோணர் சொன்னது உண்மை என்பது மறுநாள் போர்க்களத்தில் தெரிந்தது! ஒரு ரதத்தில் முதலாவதாக அவரும், அவருக்கு பின்னால் துரோண புத்திரனான அஸ்வத்தாமனும், அவனுக்கு பின்னால் கிருதவர்மாவும், அவனுக்கும் பின்னால் கர்ணனும், அவனுக்கும் பின்னால் துரியோதனனும், இறுதியாக ஜெயத்ரதனும் நின்றிருந்தனர்.''எங்கள் அவ்வளவு பேரையும் கொன்றால் மட்டுமே நீ துரியோதனனை நெருங்கி இறுதியாக ஜெயத்ரதனை அடைய முடியும். ஆனால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வா... நீயா நானா... என்று பார்த்து விடுகிறேன்...'' என்று துரோணர் வீரவசனம் பேசினார் .அடுத்த நொடியே அர்ஜூனன், துரோணரை நோக்கி நாணில் அம்பைப் பூட்ட முயன்றான். ஆனால் இவ்வேளையில் கிருஷ்ணன் முகம் சிந்தனையோடு மாறியது.''அர்ஜூனா.. குருவை எல்லாம் எதிர்த்துப் போரிடாதே! பிறகு நீ குருசாபத்துக்கு ஆளாக நேரிடும். துரோணரை யாரோ என்னவோ செய்து கொள்ளட்டும், வா, நாம் வேறு பக்கம் சென்று போரிடலாம்.'' என்று ரதத்தை கிருஷ்ணன் வேறு பக்கம் திருப்பினான். இதை துரோணர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.''நில்... விலகாதே, என் பாணத்துக்கு பதில் சொல்...'' என்கிற அவரது குரல் அந்த போர்க்களத்தின் ஆயுத சப்தத்துக்கு நடுவில் தேய்ந்து அடங்கிப் போனது. அதே வேளை அர்ஜூனன் கிருஷ்ணனின் செயலுக்காக கோபமாக பார்த்தான்.''என்ன பார்க்கிறாய்?''''என்ன கிருஷ்ணா நீ... போர்க்களத்தில் எதிரில் நிற்பவரை அவருக்கான உறவோடு பார்க்கக் கூடாது, எதிரியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று உபதேசம் செய்து விட்டு, இப்போது குருவை எதிர்க்கக் கூடாது என்றால் எப்படி?'' என்று கேட்டான்.''அர்ஜூனா... நீ துரோணரோடு மோதத் தொடங்கினால் அந்த மோதல் இன்று முழுவதும் நீடிக்கும், நாளை கூட தொடரக் கூடும். இருவருமே சமபலசாலிகள்... தோற்கவும் மாட்டீர்கள், வெல்லவும் மாட்டீர்கள்...! முடிவு தெரியாத யுத்தமாக அது அமைந்து விடும். ஆனால் இன்றைய அஸ்தமனத்துக்குள் ஜெயத்ரதனை நீ கொன்றே தீர வேண்டும் என்றால் இந்த முடிவில்லாத யுத்தம் உன்னை ஏமாற்றி விடும். அதனால் தான் அவ்வாறு சொல்லி பாதையை மாற்றினேன். துரோணரோடு மோதாமல் வேறு யாரோடும் மோதுவோம். படையைப் பிளந்து ஜெயத்ரதனையும் நெருங்குவோம். பேசிக்கொண்டிருக்க இது நேரமில்லை... படையை நான் ஊடுருவுகிறேன். நீ பாண மழை பொழி...'' என்ற கிருஷ்ணன் தன் குதிரைகளை தட்டிவிட, அவையும் சிலிர்த்துக் கொண்டு முன் சென்றன. கிருஷ்ணனின் தந்திரத்தை பின் தளத்தில் இருந்து கண்ட துரியோதனன் துரோணரை நெருங்கி, ''ஆச்சாரியாரே... இது என்ன விந்தை... அவன் உங்களோடு போரிடாமல் போர்க்களத்துக்குள் ஊடுருவுகிறான்?'' என்று அலறினான்.''அது தான் கிருஷ்ண தந்திரம்! வாள் கொண்டு போரிடுவது ஒருவிதம் என்றால் சொல்லாலே போரிடுவதும் ஒருவிதம் தான்! கிருஷ்ணன் அர்ஜூனன் வரையில் அதைத்தான் சாதித்துள்ளான். அதற்காக நான் பின்வாங்கி விட மாட்டேன். நீயும் என்னை நம்பிடாமல் யுத்தம் செய்.'' என்ற துரோணரை எரிச்சலுடன் பார்த்தான் துரியோதனன்.''கோபப்படாதே துரியோதனா... அர்ஜூனனால் உனக்கு ஏதும் ஆகிவிடாதபடி காக்கும் இந்திர கவசம் ஒன்று என் வசம் உள்ளது. நான் அதை உனக்களிக்கிறேன்.அதை அணிந்து நீ யுத்தம் செய். அர்ஜூன பாணங்களால் உனக்கு எதுவும் ஆகாது.'' என்ற துரோணர் அங்கேயே அப்போதே இந்திர கவசத்தை துரியோதனனுக்கு பூட்டிவிட்டார். அதே வேகத்தில் ''தர்மனைப் பிடிப்பது இனி என்பணி... அர்ஜூனனை நீ பார்த்துக் கொள்'' என்றார் துரோணர்!துரியோதனனும் அர்ஜூனனைக் குறிவைத்துச் செல்ல, துரோணர் தர்மனைப் பிடிக்க தயாரானார். துரோணருக்கும், தர்மனுக்குமான போரில் தர்மரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. தேர் முதல் வாள் வரை சகலமும் இழந்த தர்மன், துரோணரிடம் அகப்படப் போன சமயம், சகாதேவன் ஒரு ரதத்தில் வேகமாய் வந்து தர்மரை துாக்கி ரதத்தில் போட்டபடி போர்க்களத்தை விட்டே விலக முயன்றான்.துரோணரிடம் பலத்த ஏமாற்றம்! மறுமுனையில் அர்ஜூனனோ துரியோதனன் மேல் விடும் பாணங்கள், அவனை வீழ்த்தாமல் இந்திரகவசம் மேல் பட்டு முறிந்து விழுந்தபடி இருந்தன. அதை கவனித்த கிருஷ்ணன், ''அர்ஜூனா துரியோதனின் கரத்தை குறி வை, அதே போல் கால்களை குறி வை...'' என்றான்!- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்