கிருஷ்ணஜாலம் - 2 (36)
நிலைகுலைந்து நின்ற துரோணரின் காதுகளில் பீமனின் கருத்துக்கள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதைப் போல் இறங்கின.''ஆச்சார்யரே! அந்தணரே! எங்கள் மாட்சிமை மிக்க குருநாதரே... மாவீரராய் மாண்பு மிக்கவராய் இருந்தும் எப்போது துரியோதனன் பக்கம் சாய்ந்தீரோ அப்போதே நீங்கள் அற்ப மனிதராகி விட்டீர்கள்! கலைகளை கற்பிக்கும் அந்தண குருவுக்கு ஷத்திரிய போர்க்களத்தில் என்ன வேலை? ஆற்றிலும், குளத்திலும் நீராடி ஆன்மிகக் கடமையாற்ற வேண்டிய நீங்கள் எப்போது களத்தில் நின்று உயிர்ப்பலிக்கு அஞ்சாமல் போராடினீரோ அப்போதே போய்விட்டது உங்களது அந்தணப் புனிதம்.''பீமனின் ஆவேசமான கருத்துக்கள் துரோணரை மேலும் துடிக்கச் செய்தது. பீமனோ தொடர்ந்தான். ''ஆச்சார்யரே! அந்தணம் என்பது அஹிம்சை சார்ந்தது. ஈ, எறும்புக்கு கூட தீங்கு நேராதபடி வாழும் வாழ்வை கொள்கையாகக் கொண்டது. ஏன் எனில் அந்த பரம்பொருள் எல்லா உயிருக்குள்ளும் இருப்பதால், சகல உயிர்களையும் பரம்பொருளாக பார்ப்பதே அந்தணமாகும். உமக்குள் அப்படி ஒரு பார்வை எப்படி இல்லாமல் போயிற்று? எதை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த போர்க்களத்திற்கு வந்தீர்கள்? ஷத்திரியர்கள் நிற்கவேண்டிய இக்களத்தில் ஆச்சார்யரே, உமக்கும், உம் புத்திரனுக்கும் என்ன வேலை? உம் புத்திரன் இறந்து விட்டான் என்றதுமே வில்லை கீழே போட்டு நிலைகுலைந்து நிற்கும் உம்மைப் பார்த்து கேட்கிறேன். பிள்ளைப் பாசம் என்பது உங்களுக்கு மட்டும் தானா? இந்த களத்தில் உங்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஷத்திரிய புருஷர்களின் தாய்மார்களுக்கெல்லாம் அது கிடையாதா?இப்போது உங்கள் உள்ளம் துடிப்பது போல் தானே அவர்கள் உள்ளமும் துடிக்கும்? இதை எண்ணிப் பார்த்தீரா? போகட்டும்.. தர்மத்திற்கு பெரும் சோதனையும் கேடும் வரும் சமயம் அந்தணனாவது ஷத்திரியனாவது...? தர்மம் நிலைக்க வேண்டும் என நீங்கள் போரிட முடிவு செய்திருந்தால் எங்கள் பக்கம் அல்லவா நின்றிருக்க வேண்டும்?பதிமூன்று ஆண்டு கால வனவாசமே எங்களுக்கு பெரிய அநீதி. அதை அனுபவித்து முடித்த பிறகும் அநீதி இழைத்த துரியோதனனை விட்டு தாங்கள் ஏன் விலகவில்லை? எங்கள் பக்கம் கூட வந்திருக்க வேண்டாம் விலகி பொதுவில் நின்றிருக்கலாமே...?இப்படியா வெறிபிடித்தவர் போல களத்துக்கு வருவீர்கள்? யோசியுங்கள் ஆச்சார்யரே! நன்றாக யோசியுங்கள். இப்போது நானே கூட இத்தனை பேசாமல் உங்களை கொன்றிருக்கலாம். ஆனால், நீங்கள் உணர வேண்டும்... உணர்ந்தே உங்கள் உயிர் பிரிய வேண்டும் என்பதே என் விருப்பம்... இந்த யுத்தம் ஒரு வரலாறாகி எல்லோராலும் பேசப்படும் போது எது அந்தண நீதி, எது ஷத்திரிய நீதி என்பதை உலகம் அறிய வேண்டும். அதற்காகவே நான் பேசுகிறேன். என் பேச்சின் நியாயம் உங்களுக்கு சரி என்று படும் பட்சத்தில் ஒரு வினாடி கூட நீங்கள் இக்களத்தில் இருக்க கூடாது'' என்றான் பீமன். அப்பேச்சை அருகில் இருந்து கேட்டபடி இருந்த கிருஷ்ணன், அர்ஜூனன், தர்மன் மூவரும் பீமனா இத்தனை நேர்த்தியாக பேசியது என வியந்தனர். குறிப்பாக கிருஷ்ணன் பீமனை பெருமிதம் பொங்கப் பார்த்ததோடு, துரோணரையும் பார்த்தான். பீமனின் பேச்சின் நியாயம் உணர்ந்த துரோணர், களத்தை விட்டு விலகாதவராய் அப்படியே ரதத்தில் அமர்ந்து விட்டார்.அக்களத்தின் இன்னொரு பாகத்தில் போரிட்டபடி இருந்த துச்சாதனன், துரியோதனன் உள்ளிட்டோர் துரோணர் போரிட்ட களத்தில் அமைதி நிலவுவதைக் கண்டு கலங்க ஆரம்பித்தனர். துரியோதனன் சற்று தள்ளியிருந்த சகுனியிடம் ''மாமா... போர்க்களத்தில் எதனால் இந்த அமைதி... எங்கே நம் போர்ப்படை ஒற்றர்கள்?'' என கேட்க, ஒரு ஒற்றனும் ஓடி வந்து நடந்ததை கூறினான். ''துரோணாச்சார்யார் ஆயுதத்தை போட்டு விட்டு அமர்ந்து விட்டார். பீமன் அவர் முன் நின்று நீர் ஒரு அந்தணர் எப்படி போருக்கு வரலாம், உமது புத்திரன் இறந்து விட்டான் என்பதால் இப்படித் துடிக்கிறீர்களே... அப்படித்தானே மற்றவருக்கும் இருக்கும்'' என்றெல்லாம் பேசியபடி இருக்கிறார் என்றான்.''என்ன அஸ்வத்தாமன் இறந்து விட்டானா?'' என துரியோதனன் விதிர்த்திட, ''இது ஏதோ சூழ்ச்சி...'' என்று சூழ்ச்சியின் நாயகனான சகுனியும் கூறினான். அந்த நொடியில் ரதத்தில் நிலைகுலைந்து அமர்ந்து விட்ட துரோணர் முன் துருபதனின் புதல்வனும், திரவுபதியின் சகோதரனும், துரோணரை அழிக்கவென்றே வேள்வித்தீயில் பிறந்த திருஷ்டத்துய்மன் ஒரு வாளோடு வந்து, ''ஆச்சார்யரே... எங்கள் கணக்கு உங்கள் பொருட்டு பாக்கி உள்ளது. நான் வாளோடு வந்திருக்கிறேன். பதிலுக்கு வாளெடுங்கள். மோதிப் பார்த்து விடுவோம். யக்ஞத்தில் தோன்றிய யக்ஞ புத்ரன் நான் உங்களை அழிப்பதற்கென்றே பிறந்தவன்'' என்றான்.துரோணர் அதைக்கேட்டு கோபப்படவில்லை. பீமனின் பேச்சு அவரது மனதை சமப்படுத்தியிருந்தது. ''திருஷ்டத்துய்மா... வேள்வி தொடர்புடைய அந்தணனான எனக்கு, வேள்வியில் தோன்றிய உன்னால் ஒரு முடிவு ஏற்படுவதே சரி. எத்தனை பெரிய வீரனாயிருப்பினும் தர்மம் வீறு கொள்ளும் போது செயலற்றுத்தான் போவான். தர்மத்தை விட பெரிய வீரம் நேற்றும் இல்லை இன்றும் இல்லை நாளையும் இருக்கப் போவதில்லை. அந்த தர்மமே இக்களத்தில் கிருஷ்ணன் தலைமையில் உங்களை வழிநடத்தும் போது உங்கள் முன் என் வித்தைகள் எம்மாத்திரம்? திருஷ்டத்துய்மா... நான் போரிட்டு முடித்துவிட்டேன். நீயும் உன் கணக்கை முடித்துக் கொள்...'' என்ற துரோணர் தலை குனிய திருஷ்டத்துய்மனும் தன்வாளால் துரோணரின் சிரசை ஒரே வீச்சில் வெட்டினான்.உடல் வேறு தலை வேறாக அவர் மண்ணில் பிரிந்து விழுந்திட துரோணரின் மேனிக்குருதி ஆசீர்வதிப்பது போல் தர்மன் அர்ச்சுனன் பீமன் என்று சகலரின் மேலும் படவும் அவர்களிடமும் சிலிர்ப்பு.இவ்வேளையில் தர்மன், பீமனிடம் ஒரு குறுகுறுப்பும் கூட... யானையைக் கொன்றதை பிள்ளையைக் கொன்றதாக நம்ப வைத்தல்லவா அவரை வீழ்த்த முடிந்தது? தர்மாவேசத்தோடு தான் பேசிய பேச்சுக்கு தன் செயல் உகந்ததா என பீமனும், அடடா இப்படி ஒரு பாதகத்துக்கு துணை போய் விட்டோமே என தர்மனும் விக்கித்த போது, கிருஷ்ணன் அதைப் புரிந்தவனாய் பேசத் தொடங்கினான்.''தர்மா... பீமா... கலங்காதீர்கள்! உங்களை இங்கே வழிப்படுத்தியவன் நானே... ஆகவே சகலமும் என்னையே சேரும்! சேற்றில் விழுந்த பொன்னை எடுக்க முனையும் போது நாமும் சற்று சேறாகியே தீர வேண்டும். நோக்கம் கருதி சேற்றைக் கழுவி துடைத்துக் கொள்வது போல் உங்கள் மனதை என்னைக் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டும் என்பது நியதி. இழப்பதற்கேற்பவே பெறுவதும் இருக்கும். துரோணர் கூட இங்கு கருவி தான். அவரைப் பொறுத்த வரையில் கர்த்தா துரியோதனனே! இங்கே துரோணர் நிமித்தம் பாவக்கணக்கு தோன்றியிருந்தால் அதுவும் துரியோதனனையும் சேரும்.இது குறித்து வருந்த வேண்டாம். இது போர்க்களம்; இங்கே ஆச்சார்யார் மரித்து வீரசொர்க்கம் அடைந்ததை எண்ணி மகிழுங்கள். சுணக்கம் நீக்கி போரைத் தொடருங்கள். தடைகள் பெரும்பாலும் தகர்ந்து விட்டன. இனி கவுரவர்களை அழிப்பதே இலக்காக இருக்கட்டும்'' என்றான் கிருஷ்ணன்.- தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்