உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணஜாலம் - 2 (9)

கர்ணனை யோசனையுடன் பார்த்த சகுனி, 'வருவான்.. அந்த மாயக்காரன் கட்டாயம் வருவான்...' என்றான் அழுத்தமாக.'அப்படி வந்தால் ஏன் வந்தோம், என்று எண்ணும்படி செய்ய என்னால் முடியும் மாமா.. நீங்கள் கவலைப்படாதீர்கள்.'கர்ணன் சொன்ன விதமே... துரியோதனனைப் புளகாங்கித படுத்திவிட்டது.'அபாரம் கர்ணா.. அபாரம். சரியாகச் சொன்னாய்!' என்று குதுாகலித்தான்.பூஜை செய்தபடி இருந்தாள் குந்தி. ஆயிரம் தீபங்கள் அடக்கமாய் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. அவள் எதிரில் அம்பிகையின் சொரூபம் பூஜை கண்டு கொண்டிருந்தது. கிருஷ்ணனிடம் கேட்டுப் பெற்றிருந்த மேல் வஸ்திரத்தையும் சேர்த்து சிந்தித்தபடி இருந்தாள்.அப்போது அவளை அழைப்பது போல் கிருஷ்ணனின் குழலோசை காதில் ஒலிக்கத் தொடங்கியது. திரும்பிப் பார்த்தாள். கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான். கும்பிட்ட தெய்வம் நேரில் வந்தது.'கிருஷ்ணா..''அத்தை..''உன்னையே நினைத்தபடி இருந்தேன் வந்து விட்டாய்.''இப்போது தான் புரிகிறது. உன் தீவிர உணர்வே என்னை கட்டி இழுத்து வந்திருக்கிறது.''உட்கார் கிருஷ்ணா.. பிதாமகரின் நல்லாசிகளை திரவுபதிக்கு பெற்றுத்தந்து என் பிள்ளைகளை அவரோடு உயிர் போர் புரியாதபடி செய்து விட்டாய். உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..?''அவசரப்படாதே அத்தை. முதல் அடிதான் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.''உனது இந்த பதில் எனக்கு பயத்தை தருகிறது. இருப்பினும் நீ இருக்கின்ற தைரியம் தான் எனக்கு.''பயப்படாதே என்றால் கேட்கவா போகிறாய். இல்லை அந்த பயம் தான் சுலபத்தில் விட்டுவிடுமா?''கிருஷ்ணா.. நான் என்ன உன்னைப் போல் அவதாரமா..? மிகச் சாதாரணமப்பா..''பஞ்ச பூதங்களையே பிள்ளைகளாய் பெற்றிருந்தும் எவ்வளவு தன்னடக்கம் உனக்கு?' கிருஷ்ணன் அப்படி சொன்ன மாத்திரத்தில் குந்தியிடம் ஒரு வித ஸ்தம்பிப்பு.'புரிகிறது அத்தை.. உன் முதல் பிள்ளையை நான் மறந்து விட்டேன். அப்படித்தானே''கிருஷ்ணா.. உன் படைப்பில் எதற்காக இப்படி எல்லாம் நடக்கின்றன? நானொரு பாவி; நல்ல தாயுமில்லை.. ஒரு மந்திர புஷ்பத்தை ஆற்றோடு விட்ட அரக்கி..' என்று மிக வேகமாய் கண்ணீர் பெருக்கினாள் குந்தி. கிருஷ்ணன் மவுனமாக பார்த்தான்.'கிருஷ்ணா..''சொல் அத்தை''உன்னை எல்லோரும் மாயாவி, ஜாலக்காரன் என்கின்றனர். பிதாமகர் போன்றோர் அவதார புருஷனாகவே பார்க்கின்றனர். உன்னை புரிந்து கொள்ள யாராலும் முடியவில்லை. எனக்கே உன்னை புரிந்தது போலும், புரியாதது போலும் இருக்கிறது. அத்தை என்று அழைப்பதால் என் உறவுக்காரனா நீ? இல்லை; அந்த உறவோடு என்னை வழி நடத்தும் பரமபுருஷனா..?' குந்தி எப்படியோ ஒரு வழியாக கேட்டு விட்டாள்.'இப்போது இந்த சிந்தனையும் கேள்விகளும் எதற்கு அத்தை?''உன்னிடம் நான் சில கால ரகசியங்களுக்கு விடை காண விரும்புகிறேன். ஒருபுறம் யுத்த பாரம், மறுபுறம் பெற்ற பாரம்..''புரிகிறது.. உன் மந்திரப்பிள்ளை... அதாவது சூரிய புத்ரன் என்னவானான் என்பது உனக்கு தெரிய வேண்டும். சரி தானே?''ஆம்.. அண்ணாந்து வானம் பார்க்கும் போதெல்லாம் அவன் நினைவே.. அவ்வளவு ஏன்? ஒளியை நான் உணரும், விழித்திருக்கும் அவ்வளவு தருணத்திலும் அந்த பிஞ்சு முகம் அழையாமல் என் மனக் கண்களில் தெரிகிறது..''இக்கேள்விக்கான விடையை, நீ அந்த ஆதித்தனிடமே கூட கேட்டு விடலாமே?''கிருஷ்ணா... இது என்ன பதில்? அதை நான் எப்படி கேட்பேன்.. கேட்கும் திடசித்தமோ, தகுதியோ எனக்கில்லை..''கவலைப்படாதே.. அந்த ஆதித்தனுக்கும் உன்னை குற்றம் சொல்லும் தகுதியில்லை. உன்னைப் போல அவனும் தன் பிள்ளையை கைவிட்டவனே..''கிருஷ்ணா..''அத்தை.. வினைவழி செல்வதே வாழ்க்கை! ஒரு செயலின் விளைவே மறுசெயல். இது ஒரு கணக்கு, இது ஒரு விஞ்ஞானம்; இது ஒரு நெறி.வகுக்கப்பட்ட இந்த நெறிக்கு நான் கூட விதி விலக்கில்லை.. நானே கூட சிறையில் தேவகியிடம் பிறந்து, மறுகணமே அவளிடம் பால் கூட அருந்தாமல் யசோதையை அடைந்து; அவளால் ஆளானவன் தானே? அவ்வாறு மட்டும் நிகழாது போயிருந்தால், இன்று இப்போது உன்முன் நானும், என் முன் நீயும் நின்று பேசும் இந்த செயல்பாடும் நடந்திருக்காது.இதை, 'இன்று இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என்று இருப்பதால் அன்று அவ்வாறு நடந்தது' என்றும் கூறலாம்.''கிருஷ்ணா.. உன் தத்துவ பேச்சை கேட்கும் மனம் இன்று எனக்கில்லை. என் பிள்ளைகள் இனியாவது நன்றாக வாழவேண்டும் என்று என் மனது துடிக்கிறது. நான் ஆற்றில் விட்ட, அந்த இளைய சூரியனும் என் பிள்ளை தானே? அவதார புருஷனான உனக்கு, நிச்சயம் அவன் யார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவனும் நன்றாக இருக்க வேண்டும். அவன்.. அவன்... நன்றாக இருக்கிறான் தானே?' குந்தி தயங்கித் தயங்கி கேட்டுவிட்டாள்.கிருஷ்ணன் தனக்கே உரித்தான புன்னகையோடு அதற்கு பதில் கூற தயாரானான்.'அத்தை... இக்கேள்வியை நீ எப்போதோ கேட்டிருக்க வேண்டும். உன் குற்ற உணர்வு என்னிடம் கேட்க விடவில்லை. பரவாயில்லை, இன்றாவது கேட்டாயே.. ஒருவேளை; நீ கேட்காவிட்டாலும் அவன் யார் என்று கூறிவிடவே எண்ணி இருந்தேன். சொல்லப்போனால் அதற்காகவே இப்போது இங்கு வந்தேன்.''கிருஷ்ணா.. தயவு செய்து முதலில் சொல். யார் அவன்? எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? நான் அவனைக் காண முடியுமா?''அத்தை உன் பிள்ளை மிக நலமாகவே உள்ளான். இத்தனை நாட்களாக அவனை உணர வழியிருந்தும், நீ உணராமல் இருந்தது தான் விந்தை. அவன் பாண்டு வழி, நீ பெற்ற ஐந்து பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவனில்லை. சொல்லப் போனால் உன் ஐந்து பிள்ளைகளை விட வீரம், கொடை, நன்றி உணர்ச்சி என்கிற முக்குணத்தில் தந்தையை போலவே பிரகாசிப்பான் அவன்.''நீ இத்தனை கீர்த்தியோடு சொல்லச் சொல்ல, என் தாயுள்ளம் அவனைக் காண துடிதுடிக்கிறது. அவன் யார்? முதலில் அதைச் சொல். பிறகு மற்ற சங்கதிகளைச் சொல்..''சொல்கிறேன் அத்தை சொல்கிறேன் அவன் யாரோ அல்ல, துரியோதனனுக்கு உயிர் நண்பன்! அர்ஜுனனுக்கோ உற்ற பகைவன்! நடக்கப் போகும் யுத்தத்தில் அவனுக்கும் அர்ஜுனனுக்குமான யுத்தமே உச்சகட்டமாக திகழும்.''ஐயோ.. என் பிள்ளைகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளப் போகிறார்களா? இது என்ன கொடுமை.. கிருஷ்ணா இவ்வளவு தெரிந்திருந்தும் உன்னால் எப்படி இத்தனை சமாதானமுடன் பேச முடிகிறது. பீடிகை போடாமல் அவன் யார் என்று முதலில் சொல்.''இன்னுமா உன்னால் அவனை உணர முடியவில்லை. ஒருவர் ஒன்றைக் கேட்டால், அவர் கேட்டதை; கேட்டு முடிக்கும் முன்பே வழங்கிவிடும் குணம் கொண்ட கர்ணனே உன் முதல் மந்திர புஷ்பம்!' கிருஷ்ணன் கூறிய மறுநொடி குந்தியிடம் ஸ்தம்பிப்பு.'இப்போது அவனே என் அடுத்த இலக்கு..' என கிருஷ்ணன் கூறவும் அவளுக்கு மேலும் அதிர்ச்சி!தொடரும்- இந்திரா சவுந்தர்ராஜன்