நம்மாழ்வாரை போற்றுவோம்!
ஜூன் 2, 2023 - நம்மாழ்வார் திருநட்சத்திரம்திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி, துாத்துக்குடி) வேளாண் குலத்தில் பிறந்த பொற்காரியார் வாழ்ந்து வந்தார். இவருக்கும் உடையநங்கை என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆண்டுகள் சில சென்றன. குழந்தைச் செல்வம் இல்லாததால், தினமும் பெருமாளிடம் முறையிட்டனர். அன்று ஒரு நாள் வைகாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர நேரம். வானில் முழுநிலவாக சந்திரன் ஜொலிக்க திருக்குருகூர் கிராமமே பிரகாசமானது. காரணம் சந்திரன் மட்டுமல்ல. அப்போது காரியார் - உடையநங்கை தம்பதிக்கு பிறந்த குழந்தையும் காரணம். அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. வைகுந்தத்தில் இருக்கும் பெருமாளின் சேனைத் தலைவரான விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார். இவர் பிறந்தவுடன் இயல்புக்கு மாறாகச் செயல்பட்டார். அதாவது பிறந்தவுடன் குழந்தையிடம் இருந்து அழுகைச் சத்தமே வரவில்லை. தவிர தாய்ப்பாலும் குடிக்கவில்லை. இதனால் இவருக்கு 'மாறன்' என பெயர் சூட்டினர். காரணம் சேனைத் தலைவரான விஷ்வக்சேனரிடம், 'நம் ஆழ்வாருக்கு உபதேசம் செய்துவிட்டு வருக' எனக் கூறினார் பெருமாள். அதன்படி அவரும் திருக்குருகூர் வந்து, பிறர் அறியாதவாறு மாறனுக்கு தத்துவப் பொருட்களை விளக்கினார். உண்மையை அறிந்த மாறன், அந்த ஊரில் உள்ள ஆதிப்பிரான் கோயிலுக்கு தவழ்ந்து சென்றார். அங்கு ஆதிசேஷனின் அம்சமாக இருக்கும் ஒரு புளியமரத்தடியில் அமர்ந்தார். கண்களை மூடி எதையும் சாப்பிடாமல் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய பசி பெருமாளை தரிசிப்பதே. அதுவும் நடந்தது. உள்ளுக்குள் பெருமாளின் திருவடி காட்சி தந்தது. இதனால் பெரிய ஞானியாக உருவெடுத்தார். சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.இப்படி இருக்கையில் அந்தணர் மரபில் தோன்றிய ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் அயோத்தியில் இருந்தார். ஒருநாள் தென் திசையில் இருந்து ஜோதி ஒன்று பளீர் என அவருக்கு மட்டும் தெரிந்தது. உடனே அங்கிருந்து கிளம்பினார். கடைசியில் அந்த ஜோதி திருக்குருகூரில் உள்ள புளியமரத்தில் நிலை கொண்டது. அங்கே நம்மாழ்வாரைப் பார்த்தார். அவரது தவத்தை கலைக்க விரும்பவில்லை. கடைசியில் வேறுவழியின்றி பெரியக் கல்லை உருட்டி சத்தம் எழுப்பினார். நம்மாழ்வாரும் விழித்துக் கொண்டார். அவரது ஞானத்தை அறிய விரும்பிய மதுரகவியாழ்வார் அவரிடம், ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்'' எனக்கேட்டார். இதற்கு அவர், ''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார். இதைக் கேட்டவருக்கு சப்தநாடியும் ஒடுங்கியது. அவரை தன் குருவாக ஏற்றார் மதுரகவியாழ்வார். (இந்தக் கேள்வி ஆன்மாவுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை குறித்தது. அதாவது உயிரற்றதாகிய உடலில், அணு வடிவாக உள்ள ஆன்மா வந்து புகுந்தால், அந்த ஆன்மா எதை அனுபவிக்கும்? எந்த இடத்தில் இன்பம் உண்டென்று நினைக்கும்? எனக்கேட்டதற்கு, அந்த உடலுக்கும், வடிவத்துக்கும் ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அப்படியே இருக்கும் என்றார் நம்மாழ்வார்) பின்னர் நம்மாழ்வார் சொல்லச்சொல்ல பாடல்களை எழுதினார் மதுரகவியாழ்வார். திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி ஆகியவற்றை பாடினார். வைணவ தத்துவத்தை நம்மாழ்வார் நிலை நாட்டியதால் 'குலபதி' என கொண்டாடப்படுகிறார்.