உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக் காட்டுவோம்! (10)

''என் மகளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளது. வருகிற மாதம் நிச்சயதார்த்தம். அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் முகூர்த்தம். அவசியம் நீங்கள் மனைவியுடன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும்!''''நான் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன். இன்னும் மூன்று மாதம் தான் அதற்கு பின் நாங்கள் எல்லோருமே மும்பைக்குச் சென்று விடுவோம். முன்பதிவும் செய்து விட்டோம்'' இப்படிப்பட்டஉரையாடல்களை அனைவரும் கேட்டிருப்போம்.எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடியாத சூழலில், இந்த திட்டமிடுதலில் எது பிரதானம் வகிக்கிறது தெரியுமா?அது தான்.... நம்பிக்கை!ஆம்.... நம்பிக்கையே வாழ்க்கையை சுழல வைக்கும் உந்து சக்தி. உயிர்ப்பு விசை. தற்போது ஏழ்மையில் வாடும் நான் கடவுள் தந்த இரு கைகளாலும், அயராமல் உழைத்து அடுத்த ஆண்டிற்குள் வாழ்வில் உயர்வேன் என்று சொன்னால் இருப்பது இரு கை அல்ல. (நம்பிக்கையையும் சேர்த்து) மூன்று கை. சாதித்த மேதைகளின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் எல்லாம் அவர்கள் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை விளைவித்த அதிசயங்களே...'புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துதமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர்'என்று அறிவுத்திறன் மீது அசையாத நம்பிக்கை வைத்ததால் தான், பாரதியார் மகாகவியாக, யுகபுருஷராக மலர முடிந்தது.பாரதியார் அடிமை பாரதத்தில் பிறந்து வளர்ந்தாலும், நாடு விடுதலை பெறும் என்ற தீவிர நம்பிக்கையில் தீர்க்கதரிசனமாக பாடுகிறார்.''ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று...''அவரிடம் கொழுந்து விட்டு எரிந்த நம்பிக்கையால் அல்லவா இன்று சுதந்திரக் காற்றை நம்மால் சுவாசிக்க முடிகிறது.''நம்பினோர் கெடுவதில்லைநான்கு மறைத் தீர்ப்பு'' என்று பாடுகிறார் பாரதியார்.ஓரிரு தோல்விகளை சந்தித்தாலே சிலர் இடிந்து போய் விடுகின்றனர்.காரணம் என்ன?பூரண நம்பிக்கை அவர்களிடம் இல்லை.இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் இன்றும் இளைஞர்களின் இதயங்களில் அரசாட்சி புரிகிறார். அவர் ஆகாய விமானத்தைச் செலுத்தும் விமானியாக பணி புரிய விண்ணப்பம் செய்தார். ஆனால் தேர்வில் அவர் நிராகரிக்கப்பட்டார்.வாழ்வில் உயர வேண்டும். அனைவரையும் உயர்த்தி ஆகாய மார்க்கமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற லட்சியம் அப்போது நிறைவேறாமல் போனாலும், அது நீர்த்துப் போகவில்லை.இலக்கை நோக்கி ஆக்கப்பூர்வமாக இயங்கிய அப்துல்கலாம், ஏவுகணை நாயகனாகவும், ஜனாதிபதியாகவும் விளங்கியதை நாம் அறிவோமே!ஜெயிக்க விரும்புவோருக்கு அவர் சொல்லும் பாடம் என்ன தெரியுமா?'நம்பிக்கை மிக்கவர்கள் யாரிடமும் மண்டியிடுவதில்லை. நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் கிடைக்கின்றன. உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். சிறகுகளை பயன்படுத்தி மேலே மேலே பறந்து செல்லுங்கள். தோல்விகளை எதிர்கொள்ளக் கற்று, முழுமை பெறுங்கள். அதுவே வெற்றிக்கான முக்கிய திறமை. உங்கள் மனம் எதை விரும்புகிறதோ அது நிச்சயம் வந்து சேரும்!''உள்ளும் புறமும் மூச்சுக்காற்று வந்து போனால் ஒருவர் உயிரோடு இருக்கலாம். ஆனால் நம்பிக்கையோடு விளங்கினால் தான் அவர் உயிர்ப்போடு இயங்க முடியும்.'ஒளி சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அந்த இளம் விஞ்ஞானி. அறிவியல் தொடர்பான ஆய்வு என்றால் அவ்வளவு எளிதானதா என்ன? தேவையான கருவிகளுடன் இரவு பகலாக பாடுபட்டார். ஆராய்ச்சி பூர்த்தி பெற அவசியமான ஒரு கருவியை அவர் வாங்க வேண்டியிருந்தது. கையில் பணம் இல்லை. என்ன செய்வது என வருந்திய நிலையில் செல்வந்தர் ஒருவருக்கு கடிதம் எழுதினார்.''ஆராய்ச்சிக்கு தேவையான கருவியை வாங்க இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுகிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் என் கையில் நோபல் பரிசு இருக்கும். இளம் விஞ்ஞானியின் கடிதத்தில் 'நம்பிக்கையின் ஒளி' தெரிந்ததால் ஆய்விற்கு வாழ்த்து தெரிவித்து இருபதாயிரம் ரூபாய் காசோலையும் அனுப்பி வைத்தார் செல்வந்தர்.இடையறாத உழைப்பும், லட்சியப் பற்றும், அசையாத நம்பிக்கையும் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது.நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி.ராமன்.பிரபல செல்வந்தர் ஜி.டி.பிர்லா.'எமர்சன்' என்ற பேரறிஞர் கூறுகிறார், ''ஆசையின் வித்து மனதில் முளைக்கும் போது, அதை அடைவதற்கான திறமையும் வாய்ப்பும் அந்த ஜீவனிடம் இருக்கிறது என்று பொருள். அந்த திறன் அந்த ஜீவனிடம் இருப்பதால் தான் ஆசையே முளைக்கிறது''.நம்பிக்கையின் கையில் தான் வாழ்வு இருக்கிறது என்பதை உணர்வோம்!தொடரும்திருப்புகழ் மதிவண்ணன்அலைபேசி: 98411 69590