ஜெயித்துக் காட்டுவோம்! (20)
'வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்தமண்ணில் நமக்கே இடம் ஏது?'என பாடியுள்ளார் கவியரசர் கண்ணதாசன்.பூமியில் மனிதர்களாக பிறந்து வாழும் நாம் அனைவரும், ஒருநாள் இந்த மண்ணுலகிலிருந்து மறைய போகிறோம் என்பது நிச்சயம்.'எந்த வகையில் நம் இறுதிமூச்சு அடங்கும்? பூகம்பத்திலா? சுனாமியிலா? சாலை விபத்திலா? நோயிலா?இந்த கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. அவிழ்க்க முடியாதபடி ஆண்டவன் போட்ட மர்ம முடிச்சு இது!எது எப்படியோ பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையிலே நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை பயனுள்ளதாக்க வேண்டும்.ஆம்! நேரம் தான் வாழ்வின் சாரம்!'வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல்'என்று குறள் மூலம் வழி காட்டுகிறார் திருவள்ளுவர்.'மனிதனே! அரட்டையிலும், குறட்டையிலும், சுக போகத்திலும், தீய பழக்கத்திலும் வாழ்நாளை வீணாக ஆக்கிக் கொள்ளாதே!' என்கிறார் தெய்வப்புலவர்.அயல் நாட்டுஅறிஞர் 'தோரே' சொல்வது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.'உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஒரு சிலரே இறந்துள்ளனர்' என்கிறார் அவர்.ஆம்! இறக்க வேண்டுமானால் முதலில் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?அறிஞரின் கேள்வி நியாயமானது தானே!'வந்து பிறந்து விட்டோம் - ஆனால் வாழத் தெரியவில்லை!' என்கிறது ஒரு திரைப்பாடல்.ஜனனத்திற்கும், மரணத்திற்கும் இடைப்பட்டுள்ள காலத்தை, பயனின்றி கழிக்காமல் சரியான முறையில் பயன்படுத்துபவன் இறப்பிற்கு பின்னும் சாகாவரம் பெற்றவனாக மாறுகிறான். பத்தாம் திருமறையான 'திருமந்திரம்' என்னும் நுாலில் திருமூலர் சொல்வதை பாருங்கள்.'ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை!காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார்க்குக்கூற்றை உதைக்கும் குறி அதுவாமே!'திருமூலர் இந்த பாடலில் என்ன சொல்கிறார் தெரியுமா?காலனை சிவபெருமான் காலால் உதைத்தது போல, மனிதனாலும் செய்ய முடியும். மூச்சுக்காற்றை அதாவது சுவாசத்தை கண்டபடி உறங்குவதிலும், உண்பதிலும், சினிமா பார்ப்பதிலும் மன அழுத்தத்திலும், உரக்க கத்துவதிலும், கோபத்திலும் வீணாக்கி விடாமல், விழிப்புடன் பயன் படுத்தினால் காலன் வரும் தேதியை கட்டாயம் தள்ளி போடலாம் என்கிறார்.தேசிய கவி பாரதியாரும் இக்கருத்தை பாடலில் பிரதிபலிக்கிறார்.'அச்சத்தை, வேட்கைதனை.... சினத்தை நீர் அழித்து விட்டால்சாவுமங்கே அழிந்து போகும்!'உதாரணம் ஒன்று கேளுங்கள்.அனைவர் வீட்டிலும் சமையல் நடக்கிறது. அதற்காக நாம் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் எடை ஒரே அளவு தான்! ஆனால் சிலருக்கு நாள் கணக்கில் காலியாகி விடுகிறது. சிலர் வீட்டில் மாதம் கடந்தும் தீராமல் இருக்கிறது. காரணம், வறுப்பதும், பொறிப்பதும் அளவாக இருப்பதால் நாள் நீடிக்கிறது.ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் சமமாக தினமும் 24 பொற்காசுகளை வழங்கியுள்ளார் கடவுள்.இந்த பொற்காசுகள் என்னும் 24 மணிநேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துபவன், ஜெயித்துக் காட்டுபவர் பட்டியலில் சேர்கிறான்.ஒரு மாணவனுக்கு, இறுதி தேர்வு எழுதுவதற்கு இருபது நாட்களே இருந்தன. தினமும் அதிகாலையில் எழுந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் தானே. ஆனால் அவனோ ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது, புதிய திரைப்படத்தை முதல் நாளே பார்ப்பது என்று இருந்து விட்டான்.இந்நிலையில், நண்பனிடம் இப்படி கேட்க முடியுமா?'நாலு நாள் இருந்தா கொடுடா... நானும் தேர்வுக்கு தயாராக வேண்டும்!'நேரம் மட்டும் போனால் போனது தான்!அறிஞர் ஒருவர் கூறுகிறார், 'நேரம் தான் நமக்கு அவசியமான தேவை. ஆனால் அதையே அதிகமாக வீணாக்குகிறோம்.''நல்ல பொழுதை எல்லாம் துாங்கி கழித்தவர்கள்நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்!'என்கிறார் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.அவர் 29 வயதில் இறந்தாலும், இன்றும் அவர் புகழ் பேசப்படுகிறதே. காரணம் அவர் தன் வாழ்நாளை சரியாக பயன்படுத்தாததால் தான்.'பொழுதுபோக்கப் புறக் கணிப்பாரையும்எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே!'என்கிறது தேவாரம்.'பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்'என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்திருப்பது நல்லது!தொடரும்அலைபேசி: 98411 69590- திருப்புகழ் மதிவண்ணன்