ஜெயித்து காட்டுவோம்! (25)
மகாகவி பாரதியிடம் ஒரு அன்பர் கேட்டார், 'நான், தான தர்மம் செய்து புண்ணிய பலனை அடைய விரும்புகிறேன். அன்னதானம் செய்யலாமா? ஆலய திருப்பணிக்கு பணம் தரலாமா? வேறு விதமான அறப்பணி செய்யலாமா? புண்ணியம் அதிகம் தருவது எது? பாட்டாலே பதில் கொடுத்தார் பாரதியார். 'இன்னரும் கனிச்சோலைகள் செய்தல்இனியநீர் தண்சுனைகள் இயற்றல்அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'இந்த உலகில் ஒருவன் அனைத்து வளமும் பெற அடிப்படையானது கல்வி தானே. எனவே, அறிவொளியை பரவச் செய்தலே அதிக புண்ணியம் தரும் என்கிறார் மகாகவி. உருவத்தில் மனிதர்களாக இருப்பவர்களை, உண்மையில் மனிதர்களாக ஆக்குவது கல்வி தானே!பள்ளிக்கூடம், கல்லுாரி, பல்கலைக்கழகம் என கல்விக்கூடங்களோடு முடிவது அல்ல படிப்பு...தேர்வில் வினாக்களுக்கு பதில் அளித்தால் மட்டும் போதுமா? வாழ்க்கை என்னும் பாடம் படிக்க, புத்தகங்கள் மூலம் அறிவை தொடர்ந்து நாம் பெற்றாக வேண்டும்.மகான் ஒருவர், ''அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவராக ஆக்குகிறது. அறிவு தனிமையில் நமது தோழன். இன்பத்திற்கு வழிகாட்டி. துன்பத்திலோ ஆதரவாளி. பகைவர்களிடம் இருந்து நம்மை காக்கும் கேடயம்'' என கூறுகின்றார். 'கற்க கசடற கற்பவை' என்று சொன்ன வள்ளுவர் 'சாந்துணையும் கல்லாதவாறு' என்கின்றார். அப்படியென்றால் என்ன பொருள் தெரியுமா? சாகும் வரை ஒருவன் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சுவாசிப்பை நிறுத்தும் வரை வாசிப்பை நாம் தொடர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.மாவீரன் பகத்சிங்கிற்கு துாக்கு தண்டனை என தீர்ப்பு முடிவானது. உயிர் போவது உறுதி என தெரிந்தும் பகத்சிங், பயம் இல்லாமல் புத்தகம் ஒன்றை படித்தான். துாக்கு மேடைக்கு அழைக்க வந்த சிறைக் காவலர்களிடம்,''சிறிது நேரம் கழித்து அழைத்து செல்லுங்கள். லெனின் எழுதிய அரசியலும், புரட்சியும் நுாலை படித்துக் கொண்டிருக்கிறேன். சித்து முடித்ததும் வருகின்றேன்'' என்றான்.மாவீரன் பகத்சிங் போலவே இறுதி மூச்சு உள்ள வரை புத்தகத்தோடு இணைந்திருந்தார் அண்ணாத்துரை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சைக்காக வந்த அமெரிக்க மருத்துவர் மில்லரிடம், 'ஒருநாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யுங்களேன்' என்றார்.'நல்ல நாள் பார்க்கிறாரோ' என்று எண்ணிய மில்லர், 'ஏன் வேண்டாம் என்கிறீர்கள்' என்று கேட்க, அண்ணாத்துரை சொன்ன பதில் என்ன தெரியுமா?'மேரீ கோர்லியின் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். முடிக்க இன்னும் ஒரு நாள் ஆகும். அதன் பிறகு சிகிச்சையை வைத்து கொள்ளுங்கள். இந்த நல்ல நுாலை வாசித்து முடித்த பிறகு நான் வானுலகம் போனாலும் வருத்தப்பட மாட்டேன்' என்றார். அறிவுத்தேடல் என்பது உயிர் உள்ள வரை அவசியம் என்பதை அறிஞர்களின் வாழ்வு மூலம் அறிந்த பின்னும், வாசிக்கும் பழக்கத்தை நாம் நேசிக்காமல் இருக்கலாமா? ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற விரும்புகிறோம். அவரவர் ஏற்ற பணியில் அற்புத சாதனை நிகழ்த்தவே எண்ணுகிறோம். ஆனால் வெற்றி என்பது விரைவாக வருமா என்ன? முட்டி, மோதி, விழுந்து, எழுந்து, பொறுமை காத்து, போராடி பல அனுபவங்களை பெற்ற பிறகு தானே வாழ்வில் ஜெயிக்க முடிகிறது. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் எப்படி ஏற்படுகிறது என்பதை அந்தந்த துறை சார்ந்த அறிஞர்களின் புத்தகங்களை படிப்பதால் மட்டுமே நம்மால் அறிய முடியும். 'கிங்ஸ்லி' என்ற அறிஞர்,'' 'புத்தகங்கள் மிக விந்தையானவை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்பவர்களிடமும், நுாற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களிடமும் நேரடியாக உரையாடி அவர்களின் அனுபவங்களை பெற செய்கின்றன.'போர்க்களத்தே பரஞான மெய்கீதை புகன்றது யாருடைய வாய்?' என்று தேசியகவி பாரதியார் புகழும் கீதை, கடவுளால் மனிதனுக்கு தரப்பட்ட புத்தகம்.மனிதன் கடவுளுக்கு தந்த நுாலாக மாணிக்கவாசகரின் திருவாசகம் இருக்கிறது.மனிதன் மனிதனுக்கே தந்த பெருமை மிக்க வாழ்வியல் நுாலாக இருப்பது திருக்குறள்.'நம்மவர்கள் மதுரைக்கு போனால் மல்லிகைப்பூ வாங்குவர். சேலத்திற்கு போனால் மாம்பழம் வாங்குவர். மணப்பாறைக்கு போனால் முறுக்கு வாங்குவர். ஆனால் எங்கு போனாலும் புத்தகம் மட்டும் வாங்குவதில்லை' இப்படி குறைபட்டு கொண்டார் அண்ணாத்துரை. மனிதன் உருவாக்கியதில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் புத்தகம் என்பதை அறிந்தும், அதை பயன்படுத்தி முன்னேற தெரியாதவர்களாக நாம் இருக்கலாமா? -- தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்