ஜெயித்துக் காட்டுவோம்! (27)
'என்னால் இந்த செயலை சிறப்பாக செய்ய முடியும்' என்று ஒருவர் நினைத்தால் அது, அவருடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.'என்னைப் போல் சிறப்பாக செய்ய யாரால் முடியும்?' என்று அதே நபர் எண்ணினால் அது அவருடைய ஆணவத்தை பறை சாற்றுகிறது.சக மனிதரோடு வாழ 'தன்னம்பிக்கை' உதவுகிறது.'ஆணவம்' நட்பு வட்டத்திலிருந்து விலகச் செய்து தனிமைப்படுத்துகிறது.தனித்து நிற்கும் எவரும் சாதனை புரிந்தவராக தன்னை இனம் காட்டி விட முடியாது. ஒருவரின் வெற்றிக்கு பின்னால் மற்றவரின் பங்கும் மறைந்திருக்கும் என்பதே உண்மை.'விரல் ஐந்தும் ஒன்றோடொன்று இணையாமல் தனித்தனியாக நின்றால் எத்தொழிலையும் செய்ய முடியாதே!' என்று கையே போதனை புரிகிறதே! இவ்வாறிருக்க 'என்னால் தான் எல்லாம் நடக்கிறது' என்ற எண்ணம் நமக்குள் வளர அனுமதிக்க கூடாது.'யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்' என்கிறார் திருவள்ளுவர்.'அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே' என்று பாடுகிறார் குமரகுருபரர்.'தலைக்கனம்' என்று சொல்லப்படும் ஆணவம் பலரிடம் தலை எடுப்பதால் தான் பிரச்னைகளே பிறக்கின்றன.'நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்' என்று கணவனும், 'எனக்குத் தெரியாத விஷயத்தையா நீங்கள் சொல்லிக் கொடுக்க போகிறீர்கள்?' என்று மனைவியும் விட்டுக் கொடுக்காமல் விதண்டாவாதம் பேசுவதற்கு ஆணவமே காரணம்.தமிழ்ப்புலவர் ஒருவர் தமக்கே உரிய முறையில் 'ல்' 'ன்' என்ற இரு எழுத்துக்களை மாற்றி கணவன், மனைவி உறவு பற்றி இப்படிக் கூறுகிறார்.குடும்பத்தி'ல்' கவுரவம் பார்க்கக் கூடாதுகுடும்பத்தி'ன்' கவுரவம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.ஆணவத்தால் உறவுகளில் விரிசல் உண்டாகின்றன. அதிகாரப் பகிர்வுகளில் மோதல்கள் உருவாகின்றன. அரசியலில் கோஷ்டி பூசல்களும், கலவரங்களும் ஏற்படுகின்றன.பூமி தான இயக்கத்தை தோற்றுவித்த வினோபாஜி, ஒருநாள் தனக்கு வந்த கடிதங்களை படித்தார். அதில் மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.அண்ணலின் கடிதத்தை படித்து முடித்ததும், அதை கிழித்து வீசினார் வினோபாஜி.அருகில் இருந்தவர்கள், அந்த கடித துண்டுகளில் காந்தியின் கையெழுத்து இருந்ததை கண்டு பதறினர். அதற்கான காரணம் கேட்டனர்.'மகாத்மாவின் கையெழுத்தை பாதுகாக்கும் நீங்களா இப்படி செய்தீர்கள்?''நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை. அவருக்கே உரிய பெருந்தன்மையால் என்னை வெகுவாக பாராட்டி இருந்தார். அதை பத்திரப்படுத்தினால் அடிக்கடி எடுத்துப் பார்ப்பேன். ஆணவம் என் தலையில் ஏறும். தலைக்கனம் வந்து விட்டால் என் நல்இயல்பு நாளடைவில் மாறி விடும். அதனால் தான் கிழித்தேன்' என்றார் வினோபாஜி.கிருபானந்த வாரியார் தனக்கே உரிய முறையில் ஆணவம் கூடாது என்பதை விளக்குகிறார்.சாப்பாட்டில் வருகிற 'ரசம்' தெளிவாக இருக்கும். ஏனென்றால் அதில் 'தான்' கிடையாது.'தான்' என்று அழைக்கப்படும் காய்கறித் துண்டுகள் இருப்பதால் தான் குழம்பு குழம்பியிருக்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் துாதுப்படலம் வருகின்றது. பாண்டவர்களுக்கு நீதி கேட்டு திருதராஷ்டிரன் மாளிகை நோக்கி வருகிறார் கண்ணன்.கண்ணன் தங்கள் இருப்பிடத்திற்கு முதலில் வருவார் என பீஷ்மர், துரோணர், துரியோதனன் மூவரும் நினைத்தார்களாம்.என்ன காரணம் தெரியுமா?'ஞானத்தில் மேலானவன் நான் தான். ஞானிகளை நாடியே இறைவன் வரவு இருக்கும்' என நினைத்தாராம் பீஷ்மர்.'குலத்தில் உயர்ந்தவன் நான். எனவே கிருஷ்ணர் கட்டாயம் என் இல்லத்தில் தான் கால் வைப்பார்' என எண்ணினாராம் துரோணர்.'இவ்வுலகில் செல்வத்தை விட சிறந்தது எது? மேலான செல்வமும், அதிகாரமும் வாய்ந்த என் மாளிகைக்கே வருகை புரிவார்' என நினைத்தானாம் துரியோதனன்.ஆனால் நிகழ்ந்தது என்ன?ஞானம், குலம், செல்வம் இவற்றால் ஆணவம் கொண்டவர்களை பார்க்காமல், அன்பே வடிவான விதுரரின் குடிலில் தான், கிருஷ்ணர் தங்கினார்.'நான் காணா இடத்தனைக் காண்போம் என்றுநல்லோர்கள் நவில்கின்ற நலமே' என்று கூறுகிறது திருவருட்பா.கவிஞர் ஒருவர் அற்புதமாக கூறுகிறார்,நான் மறையைக் கற்றவனா ஞானி? தன்னுள் 'நான்' மறையக் கற்றவனே ஞானி!- தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்