உள்ளூர் செய்திகள்

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 25

சித்திரத்துத்தாமரைஎ ன்ன நடக்கிறது என்பதே புரியாத குழப்பத்தில் மயக்கமுற்றிருந்த தசரதன் மெல்லக் கண் திறந்து பார்த்தார். நடந்தது எதுவும் கனவல்ல, நனவே. இதோ கைகேயி ஆக்ரோஷத்துடன் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறாள். என்ன சொன்னாள்… என்ன சொன்னாள்… பரதன் நாடாள வேண்டுமா, சரி ஆண்டுவிட்டுப் போகட்டும். அடுத்து என்ன சொன்னாள்… ராமன் ஆரண்யம் புக வேண்டுமா. இது என்ன கொடுமை. பரதன் நாட்டை ஆள்வதற்கும், ராமன் காட்டை நோக்கிப் போவதற்கும் என்ன சம்பந்தம்.நாக்கு உலர்ந்து, வாய் உலர்ந்து, சரியாகப் பேச இயலாத வேதனையில் மருகினார் தசரதன். பிறகு தட்டுத் தடுமாறி, ''கைகேயி, நீ, நீயாகப் பேசவில்லை. உன்னை யாரோ துாண்டி விட்டிருக்கிறார்கள். கோசலையைவிட ராமனைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தவள் நீ. அவனுடைய தினசரி வளர்ச்சியில் பெருமையும், ஆனந்தமும் கொண்டவள். ராமனும் உன்னைப் பெரிதும் மதித்தானே, அதை கோசலையும் அங்கீகரித்தாளே! குழந்தை ராமனை உன் மடியில் நான் கிடத்தியதிலிருந்து, தன் திருமணத்துக்குப் பிறகு மணக்கோலத்தில் உன்னை அவன் முதலில் நமஸ்கரித்ததுவரை, கோசலை எந்த கட்டத்திலாவது மனம் சஞ்சலப்பட்டிருப்பாளா. பெற்ற தாயாகத் தனக்குக் கிட்டாத அந்த பாசத் தருணங்கள் உனக்குக் கிடைத்தது கண்டு எப்போதாவது பொறாமை பட்டிருப்பாளா, அல்லது முகச்சுளிப்பாகவாவது எதிர்ப்பை காட்டியிருப்பாளா. அந்தளவுக்குப் பொறுமையைக் கடைபிடித்திருக்கிறாள். அவளுடைய மகனான ராமன், அவளைப் போல மென்மையான மனம் கொண்டவன், எந்த கட்டத்திலும் நிதானம் இழக்காதவன் என்பதாலேயே அவனை இளப்பமாகக் கருதுகிறாயா. உன் பேச்சைக் கேட்டு உடனே காடேகி விடுவான் என எதிர்பார்க்கிறாயா. அவன் உன் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் என்ன செய்வாய்''கண்களில் தீப்பொறி பறக்க கைகேயி பார்த்தாள். ''அவன் தந்தை சொல் தட்டாத தனயன் ஆயிற்றே! ஆகவே நீங்கள்தான் அவனிடம் சொல்ல வேண்டும். உங்களிடம் அவன் எதிர்வாதம் செய்ய மாட்டான், ஆகவே 'பரதனுக்குப் பட்டம், உனக்குக் கானகம்' என்று நீங்கள்தான் அவனுக்கு உத்தரவிட வேண்டும்''இதைக் கேட்டு அலறினார் தசரதன். ''உன் கொடுமைக்கு அளவில்லையா. நான் எப்படி சொல்வேன். அவனை ஒரு பொழுது காணாவிட்டாலும் என் உள்ளம் பதறுமே, எப்படி பிரிந்து போகச் சொல்லி அவனைக் கேட்டுக் கொள்வேன்…. சரி, உன் விருப்பப்படியே நாளை பரதனுக்குப் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் நாளை மறுநாளே ராமன் ஆரண்யத்திலிருந்து அயோத்திக்குத் திரும்பிவிடலாம், இல்லையா''''ஒரு நாளா'' கேலியாகக் கேட்டாள் கைகேயி. ''பதினான்கு ஆண்டுகள். ஆமாம், ராமன் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் வசிக்க வேண்டும்''அந்த இடியைத் தாங்கிக் கொள்ள முடியாத தசரதன், பதறினார். ''என்னது பதினான்கு ஆண்டுகளா. ஏன், ஏன் இந்த அரக்கத்தனம்''''அது சட்டப்படியான கணக்கு'' கைகேயி அலட்சியமாக பதிலளித்தாள். ''என் மகன் பரதன் அரியணை ஏறிய பிறகு, பதினான்கு ஆண்டுகள் வரை ராமன் விலகி நின்றானானால், அதற்குப் பிறகு அரச பீடத்துக்கு உரிமை கோர அவனால் சட்டப்படி முடியாது. அதாவது பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் அயோத்திக்குத் திரும்பினானாலும், பரதன்தான் நிரந்தர அரசனாகத் தொடர்வான்'''ஐயோ கொல்கிறாயே… கைகேயி, ராமன் அயோத்தியில் இருக்க வேண்டாம் என்றால் சரி. ஆனால் ஆரண்யம் வேண்டாம். அவன் உன் கேகய நாட்டிலோ அல்லது அவனுடைய மாமனார் ஜனகரின் மிதிலையிலோ இருந்து கொள்ளட்டும். வனம் வேண்டாம், என் குழந்தை அந்தச் சூழலைத் தாங்க மாட்டான்''''இன்னொரு நாட்டில் போய் அவன் வாழ்வானானால், அந்த அரசரின் துாண்டுதலில் பரதன் மீது போர் தொடுக்க முயற்சிக்கலாம். அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன். அதனால்தான் அவன் காடெல்லாம் சுற்றி, நதிகளில் நீராடி, முனிவர்கள், ரிஷிகளை சந்தித்து அவர்களுடைய போதனைகளைப் பெற்று வனவாசம் முடிந்ததும் ஆட்சிப் பற்று இல்லாதவனாக அவன் திரும்ப வேண்டும்'''படுபாவி, எவ்வளவு சாமர்த்தியமாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறாள்'' என்று அந்த வேதனையிலும் வியந்தார் தசரதன். ''சரி, நான் உனக்கு வரம் தர மறுக்கிறேன் என்றால் என்ன செய்வாய். அவ்வாறு நான் மறுப்பது அதர்மம் என வாதிட்டாலும் நான் கேட்பதாக இல்லை, ராமனை காட்டுக்கு அனுப்ப மாட்டேன் என்றால் என்ன செய்வாய்'' ஆற்றமாட்டாமல் கேட்டார் தசரதன்.''விஷமருந்திச் சாவேன்'' பளிச்சென்று சொன்னாள் கைகேயி. ''அப்படி நேர்ந்தால் அடுத்த பதின்மூன்று நாட்களுக்கு, சாஸ்திரப்படி அரண்மனையில் சுப விசேஷம் நடக்க முடியாது. இந்த காலகட்டத்தில் எனக்குக் காரியம் செய்ய என் மகன் பரதன் வருவான். அதன் பிறகு யார் மன்னன் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்''நிலைகுலைந்து சாய்ந்தார் தசரதன். எப்படியெல்லாம் யோசிக்கிறாள் இவள்! எப்படியெல்லாம் திட்டமிடுகிறாள்! இவ்வாறு பேச வேண்டுமானால் மனதுக்குள்ளேயே எத்தனை நாள் ஒத்திகை பார்த்திருக்க வேண்டும்! சட்டென்று எடுத்த முடிவென்றால் இத்தனை கோர்வையாக, அடுத்தடுத்ததாகத் தன் பேச்சை வெளியிட முடியுமா….முத்தாய்ப்பாகச் சொன்னாள் கைகேயி: ''ராமனை இங்கே வரச் சொல்கிறேன். நீங்களே அவனிடம் சொல்லி விடுங்கள். ஏனென்றால் உங்கள் பேச்சை என்றுமே மீறாதவன் அவன். உடனே தங்கள் கட்டளையைச் சிரமேற்று வனம் நோக்கிப் பயணமாவான். அதே கணத்தில் பரதனையும் அயோத்திக்குத் திரும்பச் சொல்லி தகவல் கொடுக்கலாம், சிம்மாசனத்தில் அமர்த்தலாம்''இளக்காரமாகச் சிரித்தார் தசரதன். ''என் அருமைப் புதல்வனை, சீமந்த புத்திரனை வனம் செல் என்று சொல்வேனா. அதற்கு பதில், 'இறந்து போ' என்று நீ சொல்லியிருந்தால் சந்தோஷப்படுவேன். ஆமாம், ராமனைப் பிரிவதை விட என் உயிரை துறப்பது மேல்'' என கதறித் துடித்தார்.விட்டுவிடுவதாக இல்லை கைகேயி. ''அப்படியென்றால் நான் சொல்கிறேன். நானாகச் சொல்வதென்றால் அதை அவன் ஒருவேளை அலட்சியப்படுத்தக் கூடும். ஆகவே நீங்கள் சொல்லச் சொன்னதாகச் சொல்கிறேன். அவன் ஏற்பான்''''நான் இப்போதே இறந்தேன் போ''என விரக்தியாகச் சொன்ன தசரதன் மயங்கினார். உடனே கைகேயி ராமனைத் தன் இருப்பிடத்திற்கு வருமாறு சொல்லியனுப்பினாள். கண்களில் குரோதம் கொப்பளிக்க, மறைவிலிருந்து பார்த்த மந்தரை மகிழ்ந்தாள். தான் எதிர்பார்த்ததை விடவும் கைகேயி ஆணித்தரமாக தசரதன் மீது சொல் தாக்குதல் நடத்துவதைக் கண்டு வியந்தாள். கைகேயி சாதிப்பாள் என்ற நம்பிக்கை மந்தரைக்கு உறுதியானது. அரியணையில் அமர்வான் பரதன். நாடெல்லாம் போற்றிப் புகழ்ந்த ராமன் கானகம் செல்வான். அவனை உலகம் மறந்துவிடும், பரதனையே கொண்டாடும். கைகேயியே மகாராணியாகத் திகழ்வாள். தான் தலைமைப் பணிப்பெண்ணாக அனைவரையும் ஆட்டிப் படைக்கலாம்.ராமன் வந்தான். முகம் மலர்ந்திருந்தான். சலனமற்றிருந்தான். இல்லறத் துறவியாக, தோற்றத்தில் இனிமை ஒளி பரப்பினான். ஆனால் கைகேயியின் அறைக்குள் நுழைந்த அவன் தந்தையார் அலங்கோலமாக வீழ்ந்து கிடப்பதையும், கைகேயி அமங்கலமாக அமர்ந்திருப்பதையும் கண்டான். அதுவரை அவன் கண்டிராத காட்சி அது. ''அம்மா'' என்றழைத்த அந்தப் பாசக் குரலில் அப்படியே உருகித்தான் போனாள் கைகேயி. 'மகனே என்னை மன்னித்துவிடு. என் நோக்கம் யாருக்கும் புரியாது, இப்போதைக்குப் புரியவும் வேண்டாம்'' என மனசுக்குள் அழுதபடி சொல்லிக் கொண்டாள். வாடாத சித்திரத்துத் தாமரை போல என்றென்றும், எப்போதும் மலர்ந்திருக்கும் ராமனின் முகத்தைப் பார்க்கவும் திராணியின்றி தலை குனிந்தபடி பேச ஆரம்பித்தாள் கைகேயி.-தொடரும்பிரபு சங்கர் prabhuaanmigam@gmail.com