உள்ளூர் செய்திகள்

மகாபாரத மாந்தர்கள் - 19

பரசுராமனாகிய நான்...ராமாயணம், மகாபாரதம் இந்த இரண்டு காவியங்களிலும் இடம் பெறும் அவதாரம் நான். ராமனும், கிருஷ்ணனும் தங்களது ஆயுட்காலம் முடிந்ததும் மீண்டும் திருமால் அம்சத்தில் கலந்தனர். நான் சிரஞ்சீவி. கலியுக முடிவில் கல்கி அவதாரத்தில் கலக்கக் காத்திருக்கிறேன். என் தந்தை ஜமதக்னி ஒரு மாபெரும் முனிவர். என் தாய் ரேணுகா தேவி விதர்ப்ப மன்னன் மகள். இவர்களுக்குப் பிறந்த ஐந்து மகன்களின் பெயர்கள் வசு, விஸ்வ வசு, ப்ருஹுத்யானு, ப்ருத்வாங்கன்வா மற்றும் ராமபத்ரன். இவர்களில் ராமபத்ரன்தான் நான். பின்னர் சிவனைக் குறித்து கடுந்தவம் செய்து மகா பரசு என்கிற கோடரியை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகு என்னைப் பரசுராமன் என்று அழைக்கத் தொடங்கினார்கள். பரசு என்றால் கோடரி என்று பொருள். அதைத் தாங்கியிருப்பதால் தான் எனக்கு பரசுராமன் என்று பெயர். பெரும் கோபம் கொண்டவன் என்று என்னைக் குறிப்பிடுவதுண்டு. என்றாலும் என்னுடைய அமைதியான தீர்க்க தரிசனத்தால்தான் என் தாயை என்னால் காப்பாற்ற முடிந்தது. எனது பெற்றோரும் சகோதரர்களும் சுரபி என்ற தெய்வீகப் பசுவுமாக நாங்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். காமதேனுவின் மகளான சுரபி கேட்டதையெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது. எனவே எங்கள் வாழ்க்கையில் குறை ஏதும் இல்லை. சுரபியின் சிறப்பைக் கேள்விப்பட்ட மன்னன் கார்த்தவீர்யார்ஜுனன் அந்தப் பசுவை தனக்குக் கொடுக்குமாறு என் தந்தையிடம் கேட்டான். அவர் மறுத்தார். நான் இல்லாத சமயத்தில் ஆசிரமத்திற்கு வந்து மன்னன் சுரபியைக் கவர்ந்து சென்று விட்டான். என்ன ஒரு அநியாயம்! கையில் கோடரியுடன் அரண்மனைக்குச் சென்றேன். மன்னனைப் போருக்கு வருமாறு சவால் விடுத்தேன். தொடர்ந்த போரில் அவனை வெட்டிக் கொன்றேன். சுரபியை மீட்டு வந்தேன். வீடு திரும்பிய என்னை சுரபியை மீட்டு வந்ததற்காக தந்தை பாராட்டினார். என் தாயார் ரேணுகா தேவிக்கு ஒரு தெய்வீகத்தன்மை உண்டு. அவர் தினமும் நதிக்கரைக்குச் செல்வார். அங்கு இருக்கும் உலர்ந்த மண்ணை எடுத்து ஒரு பானையை உருவாக்குவார். அந்தப் பானையில் நீரை நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு வருவார். ஒருநாள் நதிக்கரையில் உள்ள மண்ணில் அவர் பானை செய்த போது வானில் பறந்து சென்ற ஓர் அழகிய கந்தர்வனின் பிம்பம் நீரில் ​தெரிந்தது. இதைக் கண்டு என் தாயின் மனம் சலனப்பட்டது. இதன் காரணமாக அவரால் பானையை உருவாக்க முடியாமல் போனது. உண்மையை உணர்ந்த என் தந்தை எனக்கு ஒரு கட்டளையிட்டார். 'நீ உன் தாயைக் கொன்றுவிடு' என்றார். தந்தையின் கோபத்தையும் ஆணையையும் கேட்ட கண்ட தாய் அங்கிருந்து உடனடியாக வேறு இடத்திற்குச் சென்றார். செருப்பு தைக்கும் இனத்தைச் சேர்ந்த மாதங்கி என்ற பெண் தாய்க்கு அடைக்கலம் கொடுத்தார். என் தந்தையின் ஆணைப்படி என் தாயான ரேணுகாதேவியின் தலையைச் சீவ முயன்றபோது இடையில் புகுந்து தடுத்தார் மாதங்கி. ஆத்திரத்தில் இருவரது தலைகளையும் கொய்து விட்டேன். தான் கூறியதை நிறைவேற்றியதால் மகிழ்ந்த தந்தை,'மகனே, வேண்டும் வரத்தைக் கேள்' என்றார். இதற்காக காத்​திருந்த நான் 'தாயை உயிர்ப்பிக்க வேண்டும்' என்றேன். திகைத்த அவர் 'வெட்டப்பட்ட உன் தாயின் தலையை உடலுடன் சேர்த்து இந்தக் கமண்டல நீரைத் தெளி. உயிர் பெறுவாள்' என்றார். அன்னையை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசரத்தில் நான் தவறுதலாக மாதங்கியின் உடலை என் அன்னையின் தலையோடு சேர்த்து விட்டேன். உடல் மாறிய காரணத்தால் அவர் மாரியம்மன் என்று அழைக்கப்பட்டார். பின்னர் என் அன்னையின் உடலோடு மாதங்கியின் தலையை சேர்க்க, அவரை எல்லம்மா என்றும் தண்டுமாரியம்மன் என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இதற்கிடையே நான் மன்னன் கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றதை சக மன்னர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி பிராமண குலத்தில் பிறந்த ஒருவன் ஒரு மன்னனைக் கொல்லலாம். எனவே அவர்களில் பலரும் படையெடுத்து எனக்கு எதிராகத் திரண்டார்கள். ஆனால் போரில் அத்தனை பேரையும் நான் கொன்றேன். ஒரு பிராமணனுக்கு இத்தனை கோபம் ஆகாது என்றும் பாவம் தீர புண்ணிய யாத்திரையை மேற்கொள்ளச் சொன்னார். ஆனால் யாத்திரை சென்றபோது கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் வேறு மன்னர்களோடு எங்கள் ஆசிரமத்துக்கு வந்து என் தந்தை, சகோதரர்களை கொன்றனர். கோபத்தின் உச்சிக்குச் சென்ற நான் அவர்களைக் கொன்று தீர்த்தேன். அவர்களின் ரத்தத்தை ஐந்து குளங்களில் தேக்கினேன். அவை சமந்த பஞ்சகம் என்று அழைக்கப்பட்டன. குருக்ஷேத்ரத்தின் அருகிலுள்ள இங்கு தான் போருக்கு முன் முன்னோர் சடங்குகளை பாண்டவர்கள் செய்தனர். பல மன்னர்களைக் கொன்றதற்காக மனம் வருந்தினேன். ரத்தக்கறை படிந்த என் கோடரியை தண்ணீரில் கழுவியபோது அதில் படிந்த ஒரு ரத்தத் துளியை மட்டும் என்னால் நீக்கவே முடியவில்லை. பல நதி நீர்களில் அந்தக் கோடரியை சுத்தம் செய்தபோதும் அந்த ரத்தத் துளி அப்படியே இருந்தது. கர்நாடகத்தின் ஷிமோகாவிலுள்ள தீர்த்தஹல்லி என்ற பகுதியில் ஓடிக் கொண்டிருந்த துங்கபத்ரா நதியில் அந்தக் கோடரியைக் கழுவியபோது அந்த ரத்தக் கறை நீங்கியது. அந்த நதியின்மீது கொண்ட மரியாதை காரணமாக அந்த நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தேன். அந்தப் பகுதி ராமகுண்டம் என்று பெயர் பெற்றது.குருக்ஷேத்திரம் என்றவுடன் உங்களுக்கு பாரதப்போர்தான் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு முன்பே அங்கு ஒரு ஆக்ரோஷமான போர் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா. பீஷ்மனுக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற போர் அது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல 24நாட்களுக்கு! (மகாபாரதப் போர் கூட 18 நாட்களில் முடிவுற்றது என்பது நினைவிருக்கிறதா). அந்தப் போர் குறித்தும் சில மகாபாரத மாந்தர்களுடன் எனக்கு உள்ள தொடர்பு குறித்தும் அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறேன்.-தொடரும்பரசுராமர் அரேபியக் கடலில் ஓர் அம்பை வீச கடல் பின் வாங்கியது. கடலில் புதைந்து கிடந்த ஒரு நிலப்பகுதி (கொங்கணப் பிரதேசம் - அதாவது மும்பையிலிருந்து கேரளம் வரை உள்ள 720 கி.மீ., கடற்கரைப் பகுதி) உருவானது. மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மாவட்டம் சில்புன் என்ற இடத்தில் உள்ளது பரசுராமர் கோயில். மகேந்திரபுரி என்ற குன்றை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். அங்குதான் இந்தக் கோயில் உள்ளது. தினமும் மாலையில் பரசுராமர் இமயமலைக்குச் சென்று தவம் புரிந்துவிட்டு ​சூரியன் மறையும் போது இங்கு வருவதாக ஐதீகம்.சுவாமி பரமஹம்ஸ பிரம்மேந்திரரின் ஆலோசனையின்படி கோயில் எழுப்பப்பட்டது. சித்தி யாகுட் கான் என்பவர் நிதி உதவி செய்தார். தினசரி கோயில் செலவுக்காக இரு கிராமங்களை வெகுமதியாக அளித்திருக்கிறார். இன்றைய கோவாவிலும் (கொங்கண் பிரதேசத்தின் ஒரு பகுதி) பரசுராமர் கோயில் உள்ளது. தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள இங்கிருந்தே பரசுராமர் தன் கோடரியை வீசினார். அந்தக் கோடரி வீசப்பட்ட இடம் மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் உள்ள சல்ஹெர் கோட்டையில் உள்ளது. இந்த கோயிலில் வழக்கமான மனிதனின் காலடி போல் நான்கு பங்கு அதிக அளவு கொண்ட காலடித் தடங்கள் உள்ளன. ரேணுகாதேவி கோயில் ஒன்றும் இந்தப் பள்ளத்தாக்கில் உள்ளது.ஜி.எஸ்.எஸ்