உள்ளூர் செய்திகள்

மகாபாரத மாந்தர்கள் - 26

காந்தாரியாகிய நான்கா ந்தார மன்னன் சுபலனின் மகளான நான் ஹஸ்தினாபுரத்தின் அரசி ஆவேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. பாண்டு மற்றும் திருதராஷ்டிரரின் தாத்தா பீஷ்மர் காந்தார நாட்டுக்கு வருகை தந்தார். தனது பேரனுக்கு என்னை மணம் முடிக்க விருப்பம் என்று கூறினார். தொடக்கத்தில் பாண்டுவுக்குக்குதான் அவர் பெண் கேட்டு வந்திருக்கிறார் என்று எண்ணிய என் தந்தையும் தாயும் மகிழ்ந்தனர். ஆனால் பிறகுதான் தெரிந்தது பாண்டுவின் தமையன் திருதராஷ்டிரனுக்குதான் அவர் என்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறார் என்று. பெரும்படையுடன் வந்திருந்தார் பீஷ்மர். அவர் கூறியதற்கு இணங்காவிட்டால் தன்நாட்டின் கதி என்னவாகுமோ என்ற பயம் என் தந்தைக்கு உண்டானது. தவித்தார். பிறகு பீஷ்மரின் கோரிக்கைக்கு ஒத்துக்கொண்டார். என் சகோதரன் சகுனி இந்த திருமண ஏற்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்தான். அவனுக்கு நிலவரத்தை எடுத்துரைத்தேன்.நான் மறுத்தால் பீஷ்மர் தலைமையில் அஸ்தினாபுரத்தின் சேனை குறுநிலமான காந்தாரத்தை சின்னாபின்னப்படுத்தி விடலாம். அரச குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு என் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் உண்டு அல்லவா. எனவே திருதராஷ்டிரரைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டேன்.எனக்கு நிகழ்ந்தது அநீதி. தொடக்கத்தில் திருதராஷ்டிரர் கண்பார்வை இழந்தவர் என்பதும் எனக்கு தெரியாது. அவர் அரசராக ஆக முடியாது என்பதும் எனக்குத் தெரியாது. என்றாலும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு நான் முழுமையாக என் வருங்காலத்துக்கு என்னை தயார் செய்து கொண்டேன். பீஷ்மர் மீதும் திருதராஷ்டிரர் மீதும் உண்டாகி இருந்த வருத்தத்தை நீக்கிக் கொண்டேன். அஸ்தினாபுரத்தை அடைந்தோம். என் வருங்காலக் கணவர் பார்வை இழந்தவர் என்பதை அறிந்தேன். திருமண முகூர்த்தம் நெருங்கியபோது நான் ஒரு தீர்மானத்தை எடுத்தேன். என் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டேன். கணவனுக்கு கிடைக்காத எந்த சுகமும் மனைவிக்குத் தேவையில்லை என்று தீர்மானித்தேன்.பார்வையை மறைத்துக் கொண்டதால் இருள் சூழ்ந்தது. வருங்காலத்தில் என் வாழ்க்கையும் இருண்டு போகும் என அப்போது நான் எண்ணியதில்லை. என் கணவரின் மனதில் உருவாகி இருந்த ஆழமான எண்ணம் 'நான்தான் மூத்த இளவரசர் என்பதால் எனக்குதான் அரசு பட்டம் கட்ட வேண்டும்' என்று. ஆனால் அவர் பார்வை இழந்தவர். இந்தக் குறைபாடு உள்ள ஒருவரால் மன்னராக ஆட்சி செய்ய முடியாது என்று என் மைத்துனர் விதுரன் கூறிவிட்டார். தவிர என் மற்றொரு மைத்துனரான பாண்டு மாபெரும் வீரராக விளங்கியதுடன் பல நாடுகளை அஸ்தினாபுர அரசுடன் இணைத்தார். இந்த நிலையில் மக்களின் அபிமானமும் பாண்டுவின் பக்கம்தான் இருந்தது. பாண்டு மன்னரானார். காலப்போக்கில் எனக்கு நுாறு குழந்தைகள் பிறந்தன. அவர்களை ஆசை தீர என் கண்களால் பார்க்க முடியவில்லை. அவர்களை என்னால் வழிநடத்தவும் முடியவில்லை. அந்த விதத்தில் வாழ்வில் நான் தோற்றவளானேன். என் கணவர் பார்வையிழந்தவர். நானும் என் பார்வையை மறைத்துக் கொண்டேன். ஆனால் இரு கண்கள் இருந்தும் உண்மையைக் காண இயலாது என் மகன் துரியோதனன் வாழ்நாள் முழுவதும் அந்தகனாகவே செயல்பட்டான். அதேசமயம் குந்தி தன் கணவனை இழந்த போதும் தன் குழந்தைகளை அழகாக வழிநடத்தினாள். அவளிடம் பெருமதிப்பு கொண்டு அவள் கூறியதைக் கேட்டு நடந்து கொண்டார்கள் பாண்டவர்கள். ஆனால் இந்த விதத்தில் ஓர் அன்னையாக எனக்குக் கிடைத்தது தோல்விதான். கண்களை மூடி இருந்தாலும் என்னைச் சுற்றிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த சதிகளும் வஞ்சகங்களும் எனக்குத் தெரிந்தே இருந்தன. அவற்றுக்கெல்லாம் என் கணவரும் உடந்தையாக இருந்ததால் என் எதிர்ப்பை வார்த்தைகளால் தெரிவிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாமல் போனது. நுாறு மகன்களைப் பெற்ற நான் துச்சலை என்ற ஒரு மகளையும் பெற்றேன். அவளை மன்னன் ஜயத்ரதனுக்குத்திருமணம் செய்து வைத்தோம். ஆனால் போர்க்களத்தில் ஜயத்ரதனைக் கொன்றான் அர்ஜுனன். இதற்கு கண்ணனின் சூழ்ச்சியே காரணம்.என்னைக் கவலை சூழ்ந்தது. மருமகன் இறந்தது குறித்த கவலை ஒருபுறம் வாட்டியது. மறுபுறம் துரியோதனைப்போரில் கொல்வதாக பீமன் எடுத்திருந்த சபதம் என்னை உறுத்தியது. 'அருமை துரியோதனா, இன்றிரவு என்னை அரண்மனையில் வந்து பார். அப்போது உன் உடலில் எந்த ஆடைகளும் இருக்கக்கூடாது. அப்படி நீ என் எதிரில் நிற்கும் போது நான் என் கண் கட்டை அவிழ்த்து விடுவேன். அப்போது உன் உடல் முழுவதையும் பார்ப்பேன். என்னுடைய மன வலிமை காரணமாக எனக்கு சில சித்திகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி என் பார்வையின் மூலம் உன் உடலை வஜ்ஜிரத்துக்கு ஈடாக மாற்றுவேன். அப்படி ஒரு உடல் வலிமையை நீ அடைந்த பிறகு யாராலும் உன்னை கொல்ல முடியாது' என்றேன்.அன்றிரவு ஆடைகளற்ற நிலையில் துரியோதனன் என் அறையை நோக்கி வரும்போது வழியில் கண்ணன் அவனை சந்தித்தார். 'நீ என்ன குழந்தையா. ஆடைகள் இல்லாமலா இருப்பாய். அந்தரங்க உறுப்புகளையாவது மறைத்துக் கொள்ள வேண்டாமா' என்று கேட்டார். உடனே வெட்கப்பட்டுக் கொண்டு தன் அந்தரங்க உறுப்புகளையும் தொடைப் பகுதியையும் இலைகளால் மூடிக் கொண்டு வந்து சேர்ந்தான் துரியோதனன். என் பார்வை அந்தப் பகுதிகளின் மீது நேரடியாகப் பட முடியாமல் போனது. இதை அறிந்த கண்ணன் போர்க்களத்தில் பீமனிடம் துரியோதனின் தொடையைத் தாக்கச்சொல்ல, அதனால் என் மகன் இறந்தான்.இதனால் நான் கண்ணனின் மீது கடும் கோபம் அடைந்தேன். அவனது யாதவ வம்சம் அடியோடு அழியும் என்று சாபமிட்டேன்.போரின் இறுதி நாளன்று துரியோதனன் என்னிடம் விடைபெற வந்தான். அவனுக்கு ஆசி கூறினேன். என்றாலும் கூடவே 'தர்மம் எங்கே இருக்கிறதோ அங்குதான் வெற்றியும் நிலைபெறும்' என்றேன். என்னுடைய இந்தப் பேச்சு குறித்து கண்ணன் புகழ்ந்தான். போருக்குப் பிறகு பாண்டவர்கள் வந்து என்னை பணிந்தனர். அவர்களை நான் சபிக்கவில்லை. உண்மையை என்னால் உணர முடிந்தது. ஆனால் பீமன் அநியாயமான முறையில் என் மகன் துரியோதனனைக் கொன்றதை மட்டும் ஏற்க முடியவில்லை. 'ஒரு வீரன் வெற்றி பெறுவதற்காக அநியாயமான முறைகளை மேற்கொள்ளலாமா பீமா' என்று கேட்டேன். நீண்ட விளக்கம் அளித்தான். தற்காப்பு, க்ஷத்ரிய தர்மம், தர்மத்தை நிலைநாட்டுவது போன்ற பல காரணங்களை அவன் கூற என் மனம் அவற்றை நியாயம்தான் என்பதை ஏற்றுக் கொண்டது. அமைதி அடைந்தேன்.என்றாலும் பாண்டுவின் மனைவி குந்தியிடம் அன்பாகவே இருந்தேன். இருவரும் சகோதரிகள் போல பழகினோம். பாரதப்போர் முடிந்து தவ வாழ்க்கை நடத்தச் செல்லும்போது கூட வனத்துக்கு குந்தியுடன் கிளம்பினேன். -தொடரும்கபினி நதியின் கரையில் உள்ளது நஞ்சன்கூடு நகரம். மைசூரிலிருந்து 25 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. நஞ்சன்கூடு அருகில் உள்ள ஹெப்பயா கிராமத்தில் உள்ளது காந்தாரி கோயில். இதற்கான அஸ்திவாரக் கல் 2008ல்தான் நிறுவப்பட்டது. பெஜவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வரர் தீர்த்த சுவாமிகள் அஸ்திவாரக் கல் நடும் விழாவை துவக்கி வைத்தார். இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் கோயில் இது. கணவனிடம் கொண்டிருந்த அதீத அன்பு, அதேசமயம் நேர்மையில் இருந்து வழுவாத தன்மை இரண்டினாலும் காந்தாரி வழிபாட்டுக்கு உரியவர் ஆகிறார். திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள மேலே தம்பனுார் என்ற இடத்திலும் காந்தாரி அம்மன் கோயில் உள்ளது. இதன் முக்கிய தெய்வம் காந்தாரியம்மன். சித்ரா பவுர்ணமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஜி.எஸ்.எஸ்.aruncharanya@gmail.com