உள்ளூர் செய்திகள்

மலரட்டும் ராம ராஜ்ஜியம்

காஞ்சிப்பெரியவரிடம் ராமதுாதரான ஆஞ்சநேயரின் மகிமை குறித்துக் கேட்டார் பக்தர் ஒருவர். ''ஒப்பற்ற தெய்வமானவர் ஆஞ்சநேயர். தாவித் தாவி எல்லா இடங்களுக்கும் வரும் வானரம் போல, தனது வழிபாட்டால் இந்தியா முழுவதையும் இணைக்கிறார். அவரது கோயிலும், வழிபாடும் இல்லாத இடமே இல்லை. தமிழகத்தில் அவரை 'அனுமார்' என்கிறோம். ஆந்திராவில் 'ஆஞ்சநேயலு', என்றும், மகாராஷ்டிரத்தில் 'மாருதி' என்றும் அதற்கும் வடக்கே போனால் 'மகாவீர்' என்றும் அழைக்கின்றனர்.ஆஞ்சநேயருக்கு இணை யாருமில்லை. அவரை மனதில் நினைத்தால் தைரியம் வரும். அறிவு வளரும். கீழான காம இச்சை பறந்தோடும். அனுமன் போல அடக்கமுடன் நற்செயலில் ஈடுபடும் எண்ணம் வரும். பக்தியும், ஒழுக்கமும் உண்டாகும். எந்த இடத்தில் ராம நாம ஜபம் செய்யப்பட்டாலும், ராமாயணம் சொல்லப்பட்டாலும் அங்கே அனுமன் கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்து கேட்பதாக ஐதீகம். அப்போது அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்.தற்காலத்தில் மக்களுக்கு அடக்கம் என்னும் நல்ல பண்பு இல்லாமல் போனது. ஆடம்பர வசதிகள் எத்தனை வந்தாலும் போதவில்லை. பணத்திற்காக அல்லாடுகின்றனர். போதும் என்ற எண்ணம் இல்லை. ஸ்ரீராமபக்தன் அனுமன் போல் அடக்கமுடன் வாழ்ந்தால் நிறைவுடன் வாழலாம். இவரை வழிபட்டால் வாழ்வில் குறையே உண்டாகாது. உலகத்தில் தர்மம் நிலைக்க அவரது திருவடியை பிரார்த்திப்போம். ராவணன் உள்ளிட்ட அரக்கர்கள் அனுமன் உதவியால் தான் அழிந்தார்கள். அவர் அருள் இருந்தால் மட்டுமே நாட்டில் 'ராம ராஜ்ஜியம்' மலரும்.குருக்ஷேத்திர போரில் அர்ஜூனனின் தேர்க்கொடியில் இருந்து கொண்டு பாண்டவர்களைக் காப்பாற்றினார். அர்ஜூனனுக்கு பகவத்கீதையை கிருஷ்ணர் உபதேசித்தபோது தேர்க்கொடியில் இருந்தபடியே கேட்டவர் அவர். பிற்காலத்தில் இந்து தர்மம் நலிவடைந்த போது அனுமனின் அவதாரமாக தோன்றிய மகான் 'சமர்த்த ராமதாசர்'. மராட்டிய மன்னர் சிவாஜி மூலம் இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினார் ராமதாசர். இன்றும் கொடுமைகள் அதிகரித்து விட்டன. அதில் இருந்து மக்களை காப்பாற்றி மீண்டும் 'ராம ராஜ்ஜியம்' மலர, ஆஞ்சநேயரை வேண்டுவோம்'' என்றார் காஞ்சிப் பெரியவர்.'ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்' என நாமஜபம் செய்யத் தொடங்கினர் பக்தர்கள். தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்