அறிவுரை சொல்ல தகுதி வேணும்!
செல்வந்தர் செல்வநாயகம் - சிவகாமி தம்பதிக்கு ஒரே வாரிசு முருகன். பாலில் சர்க்கரை சேர்த்திருந்தாலும், தன் கையால் கொஞ்சம் சேர்த்தால் தான் முருகனுக்கு திருப்தி. எலும்புருக்கி நோய்க்கு ஆளாவானோ என பெற்றோர் வருந்தினர். மருத்துவர் புத்தி சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. பாடம் நடத்தும் குருநாதருக்கு முருகன் பயப்படுவான் என்பதால் அவரிடம் புத்தி சொல்லுமாறு வேண்டினர் பெற்றோர். “கவலை வேண்டாம். இன்று வியாழக்கிழமை. ஒரு வாரம் கழித்து வாருங்கள்,” என்றார். பெற்றோருக்கு குழப்பம். அவர் ஒரு வார்த்தை சொன்னால் மகன் கேட்பானே! ஏன் அடுத்த வாரம் வரச் சொல்கிறார் என நினைத்தனர். மறுவாரம் மகனுடன் சென்றனர். 'செவ்வாயன்று வாருங்கள்' என்றார் ஆசிரியர். 'இன்னும் ஏன் தவணை சொல்கிறார் இவர்! குருநாதர் என்பதால் பெற்றோராலும் மறுக்க முடியவில்லை. செவ்வாயன்று சென்றதும், ஏற இறங்கப் பார்த்து விட்டு, ''ஞாயிறன்று வாருங்கள்'' என்றார் குருநாதர். 'விதி விட்டபடி நடக்கட்டும்' என்ற முடிவுக்கு வந்தார் செல்வநாயகம். கடைசி முயற்சியாக ஞாயிறன்று குருநாதரை பார்க்க வந்தனர். ''முருகா! நீ இனி மேல் பாலில் அதிகம் சர்க்கரை சேர்க்காதே. உன் உடல்நலனை பாதிக்கும்'' என்றார் குருநாதர்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அதன் பின் அளவான சர்க்கரையுடன் பாலைக் குடித்தான் முருகன். பெற்றோர் மகிழ்ந்தனர். மீண்டும் ஒருநாள் குருநாதரைச் சந்தித்த போது, ''முதல் நாளிலேயே புத்திமதி சொல்லவில்லையே ஏன்?” எனக் கேட்டார் செல்வநாயகம். “புத்திமதி சொல்லும் முன், அதன்படி நான் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்திமதி சொல்வதில் அர்த்தமில்லை. இது வரை நானும் அதிகளவு சர்க்கரை சேர்த்து பால் குடித்தேன். அப்போது புத்தி சொன்னால் என் வாக்கு பலிக்காது. என்னை தகுதிபடுத்திக் கொள்ளவே இத்தனை நாட்கள் தேவைப்பட்டன'' என்றார்.