உள்ளூர் செய்திகள்

சண்டையை நிறுத்தும் மருந்து

சுசீலாவுக்கும், அவள் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால், பக்கத்து வீட்டு மாலா குடும்பத்தில் சண்டை வந்ததில்லை. இதற்கான காரணத்தை அறிய மாலா வீட்டுக்குப் போனாள் சுசீலா.“மாலா! உன் வீட்டில் சண்டை வருவதில்லையே எப்படி?” என்று கேட்டாள்.“சண்டை வந்தால் அதை நிறுத்த மருந்து இருக்கிறது. அதைச் சாப்பிட்டால் என் கணவர் சண்டையை நிறுத்தி விடுவார்” என்றாள் மாலா.“மருந்தை அவர் சாப்பிட மறுத்தால் என்ன செய்வாய்?” என்றாள் சுசீலா.''எனக்குத் தான் மருந்தே தவிர அவருக்கு அல்ல” என்றாள் மாலா.“அப்படியா! அது என்ன அதிசய மருந்து என்ற சுசீலாவிடம், மாலா, ''உன் கணவர் சண்டைக்கு வந்தால் இந்த மருந்தை வாயில் ஊற்றிக் கொள். அஞ்சே நிமிஷத்தில் சண்டை நின்று விடும்,” என்று ஒரு பாட்டிலைக் கொடுத்தாள்.இதற்கிடையில் சுசீலாவின் கணவர் பணிக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டியிருப்பது கண்டு எரிச்சல் பட்டார்.சிறிது நேரத்தில் வந்த சுசீலா, வாசலில் கணவர் கோபமுடன் நிற்கக் கண்டாள்.கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தவள், கணவருக்குத் தெரியாமல் கொஞ்சம் மருந்தைக் குடித்தாள். வழக்கம் போல கணவர் திட்டத் தொடங்கியும், சுசீலா வாய் திறக்கவில்லை. எதிர்த்து பேசாததால் கணவரும் சிறிது நேரத்தில் அமைதியானார்.மருந்து பலன் அளித்ததை எண்ணி சுசீலா மகிழ்ந்தாள். மறுநாள் மாலாவிடம், “மாலா.... சண்டையை நிறுத்தும் மருந்து எங்கு கிடைக்கும்?” என்று கேட்டாள் சுசீலா.“அடியே! அது சாதாரண தண்ணீர் தான். அதைக் குடித்ததுமே அந்த மருந்து ஏதோ பலன் தருவதாக எண்ணி, நீயே பேச்சை நிறுத்தி விட்டாய். மனம் தான் சண்டை போடச் சொல்கிறது, அதை நிறுத்தவும் சொல்கிறது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போனால் சண்டை வராது. அதை நாம் தான் செய்வோமே!” என்றாள் மாலா.