கள்ளுக்கடையில் ராமாயண ஆசிரியர்
'படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில்' என்று ஒரு சுலவடை சொல்வார்கள். இப்படித்தான் எழுத்தச்சன் என்ற புலவர், ஒரு கள்ளுக்கடையில் அமர்ந்து பொறித்த மீனைக் கடித்தபடியே கள் குடித்துக் கொண்டிருந்தார். இவர் மலையாளத்தில் ராமாயணத்தை எழுதியவர். 'ஆத்யாத்ம ராமாயணம்' என்று அதற்குப் பெயர்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். மலையாள இலக்கியத் தந்தை என போற்றப்படுபவர்.மலையாள தேசத்தில் நாராயண பட்டத்ரி என்ற உயர்வகுப்பைச் சேர்ந்த புலவரும் இருந்தார். இவருக்கு குருவாயூரப்பன் பற்றி பாட ஆசை. ஆனால் எப்படி துவங்குவது என தெரியவில்லை. எழுத்தச்சனைத் தேடி சேரிக்கு வந்தார்.அவர் கள்ளுக்கடையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து கள்ளுக்கடைக்கே போய், ''புலவரே! குருவாயூரப்பனைப் பாட ஆசை. முதல் வரியாக என்ன எழுதலாம்'' என்று கேட்டார். மீனும் கள்ளுக்கலயமுமாக அமர்ந்திருந்த எழுத்தச்சன், ''மீனைத் தொட்டு உண்' என்று ஆரம்பிக்க வேணடியது தானே'' என்றார்.அவர் குறிப்பிட்டது திருமாலின் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன்.இதைப் புரிந்து கொண்ட நாராயண பட்டத்திரியும் மச்சாவதாரத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார். அந்த நூல் தான் புகழ் பெற்ற நாராயணீயம்.