உள்ளூர் செய்திகள்

தேடி வந்த சீர்வரிசை!

பரந்தாமன் என்பவருக்கு ஆறு மகள்கள். நடுத்தரக் குடும்பம். ஐந்து பெண்களுக்குத் திருமணம் முடிந்தது. ஆறாவது பெண்ணுக்கு இப்போது தான் திருமணம் கூடி வந்திருக்கிறது. மாப்பிள்ளை ஒரு புரோகிதர். அவருக்கு எதிர்பார்ப்பு எதுவுமில்லை; என்றாலும் கொஞ்சமாவது சீர்வரிசை செய்ய வேண்டாமா? ஆனால் இவரிடம் சல்லிக் காசு இல்லை. அடிக்கடி மடத்திற்கு வரும் பக்தரான அவர் அன்றும் மகாசுவாமிகளை தரிசிக்க வந்தார். தன் ஏழ்மை, குடும்ப நிலையைச் சொல்லி கண் கலங்கினார். கனிவுடன் சுவாமிகள், 'அம்பாளைப் பிரார்த்தனை பண்ணு! எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார். நம்பிக்கையுடன் விடைபெற்றார் பரந்தாமன். சற்று நேரத்தில் காஞ்சிபுரத்திலுள்ள மிராசுதார் ஒருவர் மடத்திற்கு வந்தார். செல்வந்தரான அவருக்கு இரண்டு மகன்கள். அவருக்கு இணையான பெரிய குடும்பத்திலிருந்து மருமகள்கள் வந்திருந்தனர். 'தனக்கு ஒரு மகள் பிறந்து, அவளைக் கன்னிகாதானம் செய்யும் பாக்கியம் இல்லாமல் போனதே' என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இந்நிலையில் அவரிடம், ''கன்னிகாதானம் செய்யாத உன் மனக்குறை தீர ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு வா. அப்போது ஒரு கல்யாண பெண்ணுக்குத் தேவையான சீர்வரிசையான புடவை, மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம், பாத்திரங்கள், மாப்பிள்ளைக்கு வேட்டி எல்லாம் கொண்டு வா'' என்றார் மகாசுவாமிகள். ''அப்படியே செய்றேன் சுவாமி'' என்றார் மிராசுதார். பரந்தாமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் இருதரப்பினரும் மடத்திற்கு வந்தனர். சீர்வரிசைகளைப் பரந்தாமனிடம் ஒப்படைத்தார் சுவாமிகள். கன்னிகாதானம் செய்த புண்ணியம் கிடைத்ததே என மிராசுதாரின் கண்களில் பெருமிதம். மகளின் திருமணத்திற்கு சீர்வரிசை கிடைத்ததை எண்ணி பரந்தாமனுக்கு மகிழ்ச்சி. அனைவருக்கும் ஆசியளித்து, பிரசாதம் கொடுத்தார் மகாசுவாமிகள்.காஞ்சி பெரியவர் உபதேசங்கள்* காபி குடிப்பதை தவிருங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.மழை வர வருண காயத்ரிஓம் ஜலபிம்பாய வித்மஹேநீல் புருஷாய தீமஹி தன்னோ வருண பிரசோதயாத்தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்