உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை - 52

திரைபோடும் நேரம்!பொற்றாமரைக்குளத்தின் படிகளில் தனியாக அமர்ந்திருந்தேன். மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை.திடீரென ஒரு அழகான பெண்ணின் வடிவத்தில் பச்சைப்புடவைக்காரி வந்தாள்.“இனிமேல் நம் சந்திப்புகள் தொடராது. உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள். அடுத்து எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்க்கப் போகிறோமோ”“நாடகம் நடத்துபவர்களே நடிகையைப் போல் பேசினால்...'' நான் விம்மினேன்.“நாடகத்திற்கும் சில விதிகள் இருக்கின்றனவே! இந்தக் காட்சிக்கு திரைபோடும் நேரம் வந்துவிட்டது. நம் சந்திப்பின் உச்சகட்ட காட்சியை அரங்கேற்றப்போகிறேன். உனக்கு என்னை எப்படி பார்க்க வேண்டும்”“இந்த பிரபஞ்சத்தின் மகாராணியாக, ராஜமாதங்கியாக”அடுத்த கணம் வானத்தை முட்டும் கோட்டைச்சுவர்களால் சூழப்பட்ட அரண்மனை வாயிலில் நான் நின்றிருந்தேன்.“நான் உன்னோடுதான் இருக்கிறேன். ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரியாது. நீ அரண்மனைக்குள் செல்”பெரிய அரங்கில் பலர் அமர்ந்திருந்தார்கள். “இவர்கள் காவியம் படைத்தவர்கள். படைத்துக்கொண்டிருப்பவர்கள். அம்பிகையின் அழகைப் பற்றி ஆயிரம் காவியங்கள் படைத்துவிட்டார்கள். அவற்றை மகாராணியிடம் படித்துக்காட்டக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” ஒருவன் விளக்கினான்.அடுத்து இருந்த அரங்கங்களில் இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாகக் காத்துக்கொண்டிருந்தார்கள் - மகாராணியைச் சந்திக்க, அவளிடம் தங்கள் திறமைகளைக் காட்ட.கடைசியாக ஒரு பெரிய அறையில் நுழைந்தோம். திரும்பிப் பார்த்தேன். அன்னை அருகில் இல்லை. ஏதோ ஒரு உந்துதலில் முன்னால் பார்த்தேன். அங்கே பிரபஞ்சத்தின் ராணியாக, அழகு ராணியாக, ராஜமாதங்கியாக என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள் அன்பென்னும் அரியாசனத்தில் வீற்றிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.“என்னை அரசியாகப் பார்த்து விட்டாயா”நான் விம்மினேன்.“எத்தனையோ பேர் உங்கள் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும்போது இந்தக் கடையனிடம் கதைபேச பூமிக்கு வந்தீர்களே...உங்கள் கருணை..''''அழாதே. அவர்களெல்லாம் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் யாருக்காகக் காத்திருக்கிறேன் தெரியுமா?”தெரியாது.“அங்கே நடக்கும் காட்சியைப் பார்”அந்த மருத்துவமனையில் ஒரு பத்து வயதுச் சிறுவன் உயிருக்கு போராடினான். விபத்தில் அவனுக்குத் தலையில் அடிபட்டிருந்தது.சிறுவனின் தாய் மருத்துவரிடம் அழுதுகொண்டிருந்தாள்.“அவனுக்கு அந்த நடிகர்னா ரொம்பப் பிடிக்கும்யா. அவர் நடிச்ச படத்த 'டிவி'யில போட்டீங்கன்னா கண்ண முழிச்சிப் பாப்பான்யா”அந்த மருத்துவர் தன் சொந்தச் செலவில் அதற்கு ஏற்பாடு செய்தார். சிறுவன் கண்விழித்துப் பார்த்தான். சிகிச்சை தொடர்ந்தது. சிறுவன் குணமாகிவிட்டான். “அந்தச் சிறுவனுக்காகக் காத்திருக்கிறீர்களா. இல்லை, அவனுடைய தாய்க்காகவா. இல்லை, தன் சொந்தக் காசையும் கொடுத்து உதவிய அந்த மருத்துவருக்காகவா”“இல்லையப்பா”“யாருக்காக தாயே”“அந்த மருத்துவரின் உதவியாளராக இருந்த ஜெயா என்ற பெண்ணிற்காக. அவளுடைய வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள்.அவளுக்கு இரண்டு பெண்கள். அவளுடைய கணவன் குடிகாரன். அந்தக் குடும்பம் இரண்டு வேளை சாப்பிடுவதே பெரும்பாடு என்ற நிலையில் அவள் மனதில் ஓடிய அன்பு வெள்ளம் இருக்கிறதே.“மருத்துவர் உட்பட அனைவரும் அந்தச் சிறுவனின் உடல்நிலையைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிறுவனுக்கு மருத்துவமனையில் உணவு கொடுத்துவிட்டார்கள். அவனுடைய தாய்க்கு யார் உணவு கொடுப்பார்கள். மருத்துவமனையில் உணவகம் இருந்தது. ஆனால் உணவு வாங்க பணம் இல்லை.ஒரு நாள் சிறுவனின் தாய் சாப்பிடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே போய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பியதை ஜெயா கவனித்துவிட்டாள். அன்றிலிருந்து அவனுடைய தாய்க்கு தினமும் இரண்டு வேளை ஜெயா உணவு கொடுத்தாள். இதனால் ஜெயாவும் அவள் குழந்தைகளும் சாப்பிடும் உணவின் அளவு குறைந்தது. “ஜெயாதான் சிறுவனின் தாய்க்கு உணவு கொடுத்தாள் என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. தான் உணவு கொடுக்கும் விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனின் தாயிடம் சத்தியம் வாங்கியிருந்தாள் ஜெயா.“ஜெயாவிற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். அவள் காலம் முடிந்து என்னைக் காண வரும்போது நான் வாசலுக்குச் சென்று அவளது ஆன்மாவைத் தழுவிக்கொண்டு வரவேற்பேன். அவளுக்கு இனிமேல் பிறவியே கிடையாது''மவுனமாக அழுது கொண்டிருந்தேன். ஜெயாவின் அடுத்த பிறவியில் அவளது வீட்டில் வேலைக்காரனாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் போதுமென்று பார்த்தால் அவளுக்கு அடுத்த பிறவியே கிடையாதாமே! சென்ற முறை பேசியதை அன்னை ஞாபகப்படுத்தினாள்.“உன்னுடைய அடுத்த பிறவியைத் தேர்ந்தெடுத்துவிட்டாயா. இந்திர லோகத்தின் அதிபதியாக வேண்டுமா. காவியம் படைக்கும் கவிஞனாக வேண்டுமா. நாடாளும் மன்னனாக வேண்டுமா”“நீங்கள் கொடுத்த பட்டியலுக்கு வெளியே எதையாவது கேட்கலாமா”“தாராளமாக”“ஒரு மந்திரமாக அவதரிக்க விரும்புகிறேன் தாயே” “ஏன் இந்த விபரீத ஆசையப்பா”“மன்னனாக இருந்தாலும் மாபெரும் காவியம் படைக்கும் கவிஞனாகப் பிறந்தாலும் மனதில் அகந்தை வர வாய்ப்புண்டு. புலன் இன்பங்களில் மூழ்கி புவனேஸ்வரியை மறந்துவிடும் அபாயம் உண்டு. மந்திரத்திற்கு மனம் என்று ஒன்றும் கிடையாதே. அதனால் அகந்தை தோன்ற இடமில்லை. மந்திரத்திற்குப் புலன்கள் இல்லை. ஆகையால் புலன் இன்பங்களில் மூழ்கும் அபாயமும் இல்லை”“உனக்குத் துன்பமில்லாப் பிறவியைக் கொடுக்கலாம் என்றிருந்தேன்”“துன்பமில்லாத பிறவியைவிட அடுத்தவர் துன்பம் துடைக்கும் பிறவி மேல் அல்லவா”“மந்திரமென்றால் சில சமயம் நீ நரகத்தினுாடே செல்லவேண்டியதிருக்கும்”“எனக்கு உடலும் மனமும் இல்லையென்பதால் நரகத்தீ என்னைச் சுடாது. நான் நரகத்தில் இருக்கும்போது நரகவாசிகள் என்னால் உய்வுபெறவும் வாய்ப்பிருக்கிறது”“மந்திரமாகப் பிறப்பதால் என்ன பயன்”“என்னை உச்சரிப்பவர்களின் மனதில் எழும் அன்பில் திளைப்பேன். யாருக்காக என்னை உச்சரிக்கிறார்களோ அவர்கள் கண்ணீரைத் துடைப்பேன். நீங்கள் அன்பின் வடிவம் என்பதால் உங்கள் காலடியில் கிடப்பேன்”“சில சமயம் தீயவர்கள் கையில் மாட்டிக்கொள்வாய்”“அந்த மந்திரம் அவர்களுக்குள் இருக்கும் தீமையை அழித்துவிடும்”“மனிதர்களின் கர்மக் கணக்கில் குறுக்கிடுவாய். அது பெரிய பாவம்”“இல்லை தாயே! இந்த மந்திரம் அன்பின் வடிவம். கர்மக்கணக்கை அனுபவிக்க நான் என்னும் நிலை வேண்டுமல்லவா, அதையே இந்த மந்திரம் அழித்துவிடும். அன்பால் கர்மக்கணக்கு மாறினால் பாவமில்லை தாயே” “அப்படி என்ன மந்திரமப்பா. என்னுடைய பீஜாக்ஷர மந்திரமாகப் பிறக்கிறாயா”“இல்லை தாயே. நீங்களே எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரமாகப் பிறக்கிறேன்”“மந்திரமாகப் பிறக்கலாம். மனிதர்களுக்கு மன அமைதியைத் தரலாம். ஆனால் நீ கடைசிவரை அந்த மந்திரமாகவே இருப்பாய். என்னுடன் ஒன்றும் நிலை உனக்குக் கிட்டாமலேயே போய்விடும். பரவாயில்லையா”“இது என்ன தாயே விளையாட்டு. அந்த மந்திரம் அன்பின் சாரம். எல்லோர் மனதிலும் அன்பை விதைத்து துன்பத்தைக் களையும் தெய்வீக மாயம். மந்திரமும் அன்பின் வடிவம் நீங்களும் அன்பின் வடிவம் என்பதால் நான் அந்த மந்திரமாகப் பிறந்தவுடனேயே உங்களுடன் ஒன்றிவிடுவேன் தாயே!”“அப்படி என்ன மந்திரமப்பா அது”“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”-முற்றும்இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700 ல் தொடர்பு கொள்ளவும்.வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com