சொல்லடி அபிராமி (16) - மேனாவதியின் கதை
மன்மதனின் கதையை முடித்த பட்டர் அடுத்து,'வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளேஅவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்துவெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!' என்று பாடி விளக்கமளித்தார். “அபிராமித் தாயே! நீயும் இறைவனும் பிரிந்து சிலகாலம் தனித்திருந்து பிறகு பிரபஞ்சம் உய்யும் பொருட்டு மீண்டும் சங்கமித்து மகிழ்ந்து திருமணக் கோலம் கொள்ளும் காட்சியை என் சிந்தையுள்ளே நிறுத்தி சதா சர்வ காலமும் தியானித்து வருகிறேன். எனவே நீங்கள் தந்த வாக்கின்படி கொடிய காலன் என்னைத் தேடி வரும் காலத்தில் எனது அறியாமையாகிய இருளைப் போக்கும் வகையில், பொன் நிறத்தில் ஜொலிக்கும் திருவடிகள் காட்டி அடியேனை ஏற்றருள வேண்டும்,” என்பதே இப்பாடலின் பொருள்.இந்தப் பாடலில் வரும் சிவசக்தி திருமண வைபவத்தை பட்டர் சொல்ல ஆரம்பித்தார்.இமகிரியின் அரசனான இமவானுக்கு மகளாக அம்பிகை அவதரித்தாள். மேனாவதி என்று பெயர் சூட்டப்பட்டது. அவளை 'இமயத்தில் வளர்ந்த கொடி' என்னும் பொருள் விளங்கும்படியாக 'ஹேமலதா' என்று மக்கள் அழைத்தனர். சிவபக்தியுடன் வளர்ந்த ஹேமலதாவுக்கு அவர் மீது காதலே வந்துவிட்டது. தனிமையில் இருந்து கண்மூடி சிவனை தியானித்து தன்னை மனைவியாக ஏற்க வேண்டினாள். அரண்மனை வாசத்தை விடுத்து, துறவுக்கோலம் பூண்ட மேனாவதி பல சிகரங்கள் தாண்டி கவுசிகரம் என்ற இடத்தைச் சென்றடைந்தாள்.அங்குள்ள கவுரி குண்டத்தில் இறங்கினாள். பனி உறைந்த இமயத்தின் கடுங்குளிரும், கவுரி குண்டத்தில் உறையும் நிலையில் இருந்த தண்ணீரும் அவளது திருமேனியை நடுநடுங்கச் செய்தன. ஆயினும், சற்றும் பொருட்படுத்தாமல் கவுரி குண்டத்தில் மூச்சடக்கி மூழ்கினாள். நீருக்கடியில் இருந்து நெடுநாள் சிவதியானம் தொடர்ந்தாள்.அம்பிகையின் தவத்தினால் தோன்றிய ஆகர்ஷண சக்தியால் கவுரி குண்டத்திற்கு ஓடி வந்தனர். ரிஷிகள், அம்பிகையின் தவ உஷ்ணத்தால் இமயத்தின் பனிப்பாறைகளும் உருக ஆரம்பித்தன. இதேநிலை தொடர்ந்தால் இமயமே உருகி பெருவெள்ளம் ஏற்படுமென ரிஷிகள் அஞ்சினர்.சிவலோகம் சென்று அம்பிகையின் கோரத்தவம் பற்றி சிவனிடம் எடுத்துக் கூறினர், சிவனும் தக்க நேரத்தில் திருமணம் நிகழும் என அருள்பாலித்தார். ஒருநாள், மாலை மயங்கும் நேரம். ஓர் முதிய அந்தணர் கவுரிகுண்டத்திற்கு வந்தார். உரத்த குரலில், “யாருமே இங்கு இல்லையா? எனக்கு பசியாக உள்ளதே! உதவுவார் எவருமே கிடையாதா?” என்று அரற்றினார். இது அம்பிகையின் திருச் செவிகளை சென்று எட்டியது. நீரைவிட்டு வெளியே வந்து, கை நிறைய கனி வகைகளை தருவித்து, “அந்தணரே! இதோ இந்தக் கனிகளைப் புசியும்!” என்று அளித்தாள். அவரும் கனிகளை புசித்து பசி நீங்கப் பெற்றார். கன்னிகையே! “நீ யாரம்மா?” என்று கேட்டார்.“இமவான் எனும் மலையரசனின் அன்பு மகள் நான். மேனாவதி என்பது என் பெயர்” என்று பதிலளித்தாள் சக்தி.“ஓ! அப்படியா? இமவான் புத்திரியா நீ? அது சரி அரண்மனையில் ஆடம்பரமாக சுகித்திருக்க வேண்டிய நீ இப்படி தண்ணீருக்கடியில் கோரத்தவம் புரிவது ஏன்?”“சுவாமி! நான் பார்வதியின் அம்சம். எனவே அந்த சிவனை மணம்புரிய வேண்டியே இந்த கடுந்தவம். சிவனார் மனம் உருகி வரமாட்டாரா என்ற ஏக்கத்தில் இருக்கிறேன்.”“என்ன? மூன்று கண்களும், ஐந்து தலையும் உடைய பாம்பைக் கழுத்தில் சுற்றி இடுகாட்டில் ஆடித்திரியும் சிவனையா கணவனாக அடைய விரும்புகிறாய்?” என்று திட்டினார்.“அவர் இல்லையேல் நான் இல்லை. அவரே என் கணவர். இது இப்பிறவியில் மட்டுமில்லை. இன்னும் ஆயிரமாயிரம் பிறவிகள் நான் எடுத்தாலும் அவர்தான் என் கணவர்; நான்தான் அவர் மனைவி.”அந்தணர் தற்போது சற்றுப் பொறுமையாகக் கூறலானார்.“அம்மா! நான் சொல்கிறேன் என்று தவறாக நினையாதே. வயதில் மூத்தவன்... நான் சொல்வதை சற்றே கேளம்மா. அவன் கபாலத்தில் பிச்சையெடுத்து வாழ்பவன். உன்னை வைத்து எப்படி பிழைப்பு நடத்துவான்? தயவு செய்து அவனை மறந்து விடு. அவன் இடுகாட்டில் சாம்பலைப் பூசிக்கொண்டு புலித்தோல் போர்த்திக் கொண்டு இரவெல்லாம் ஆடுபவன். அவனா உன் மணாளன்?” என்றார்.அவ்வளவுதான்! ஹேமலதா ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினாள். முதியவரை பஸ்பமாக்கி விடுவதைப் போல் உற்றுப்பார்த்தாள்.பெரியவர் கலகலவெனச் சிரித்து, “அப்படியானால் நீ அந்த பிச்சாண்டியை மறக்கப் போவதில்லை. சரி... சரி... அந்த பைரவனுக்கு ஏற்ற நல்ல பைரவிதான் நீ...” என்றபடி மெல்ல நடந்து சென்றார். அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஹேமலதா.அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.அந்த அந்தணரின் உருவம் புகை மயமாய் மறைய, அங்கே ரிஷப வாகனத்தில், உடுக்கையும், திரிசூலமும், மான், மழுவும் தாங்கி சிவபெருமான் காட்சி தந்தார்.அது கண்டு ஆனந்தத்தில் திளைத்த ஹேமலதாவை ஆதிசிவன் திருமணம் செய்துகொள்ளும் அருட்காட்சியைக் காண முப்பது முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், மூவுலக சான்றோர் முதல் சாமன்யர் வரையிலும் ஒன்று கூடினர்.சிவசக்தி திருக்கல்யாணம் இனிதே நடந்தேறியது. அந்த வைபவத்தைக் கண்ணுற்றோர் சாகாவரம் பெற்றனர். மரண பயம் நீங்கப் பெற்றனர். பிறவிச் சுழற்சியிலிருந்து மீண்டனர். எனவேதான் 'வெவ்விய காலனை வெளிநிற்கச் செய்ய அடியேனும் சிவசக்தியை திருமணக் கோலத்தில் சிந்தையுள்ளே நிறுத்தி தியானிக்கிறேன்,” என்று முடித்தார்.இதையடுத்து,'வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளேதெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவிஉறைபவளே!' என்று பாடிய பட்டர், “அபிராமி அம்பிகையே! உன் சூட்சும நிலையினின்று வெளி வந்து ஸ்ரீ சக்ரத்தின் ஒளிவீசுகின்ற ஒன்பது கோணங்களிலும் வியாபித்து, எனக்கு அருட்காட்சி தரும்போது, என் உள்ளத்துள் உண்டாகும் பேரானந்த அனுபவம் கரைகாணா வெள்ளமாகப் புரண்டு ஓடுகின்றது. என் ஆன்மாவில் தெளிவான ஞானம் பிறப்பது உனது திருவுள்ளப்படியே நடக்கும் தாயே!” என்று விளக்கினார்.இதையடுத்து, அன்னை ஸ்ரீசக்ரத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூற ஆரம்பித்தார்.பண்டாசுர வதம் நிகழும் காலத்தில் லலிதாம்பிகையின் மந்திரியாகிய மந்திரிணி அம்பாவும், சேனாதிபதியாகிய தண்டினி அம்பாவும் கேயச் சக்ரம், கிரிச்சக்ரம் என்னும் தேர்களில் போர்க்களம் புகுந்தனர். அம்பிகையின் படையில் பெண்கள் மட்டுமே இருந்தனர். அம்பிகை ஏறிச் சென்ற தேர் ஸ்ரீசக்ரம் என பெயர் பெற்றது. பல நாட்கள் கடுமையான போர் நடந்தது. பண்டாசுரனின் புத்திரர்கள் எல்லாரும் அழிந்தனர். பண்டாசுரன் மட்டுமே எஞ்சி நின்றான்.இன்னும் வருவாள்முனைவர் ஜெகநாத சுவாமி