உள்ளூர் செய்திகள்

சொல்லடி அபிராமி (17) - மூன்று நதிகளின் கதை

அவன் தனித்து நின்று போரைத் தொடர்ந்தான்.'ஹே! அம்பிகே! நீ ஒரு கோழை. நேரில் தோன்றி போரிட அஞ்சி ஸ்ரீசக்ரத்திற்குள் ஒளிந்துகொண்டிருக்கிறாய். இன்னும் ஒரு நொடிப் பொழுதில் உனது ஸ்ரீசக்ரத் தேரிலிருந்து வெளிப்படவில்லை எனில், உன் தேரை எனது பாணம் பொடிப் பொடியாக்கும்,” என்று கர்ஜித்தான்.அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது. ஸ்ரீசக்ரத்தேர் அதிர்ந்தது. அதன் ஒளிவீசும் ஒன்பது கோணங்களும் மேலும் ஒளிர்ந்தன. அம்பாள் ஸ்ரீசக்ர தேரிலிருந்து வெளி வந்தாள். தேவர்களும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் மலர்மாரி பொழிந்தனர்.வேதங்கள் வணங்கிச் சிவந்த அம்பிகையின் திருப்பாதம் புவிமீது படிந்தது. அகந்தை அழியும் தருணம் தொடங்கியது. அம்பிகை கோபாவேசத்துடன் பண்டாசுரனைக் கீழே வீழ்த்தி, அவனது மார்பினைத் தன் இடக்காலால் மிதித்து திரிசூலத்தை ஓங்கினாள். பண்டாசுரன் அம்பிகையின் விஸ்வரூப தரிசனம் கண்டான்.அவனது குரல் தழுதழுத்தது. “அன்னையே! மன்னாதி மன்னரெல்லாம் பொன், வைர, வைடூரியங்களால் உன்னை அர்ச்சிக்கிறார்கள். அவர்களுக்கு நீ காட்சி கொடுக்கவில்லை. ஒற்றைக் காலில் நின்று இமயத்து சிகரங்களில் ஏகாந்தமாய் கோர தவம்புரியும் முனிவர்களுக்குக் கூட நீ காட்சி கொடுப்பதில்லை. பக்தியில் தன்னையே சமர்ப்பணம் செய்து சரணாகதி அடையும் பக்தர்களும் உன் திருக்காட்சி கண்டதில்லை. ஏன்? உன்னோடு எக்கணமும் வசிக்கும் யோகினி சக்திகள் கூட உன்னை முழுமையாகப் பார்த்ததில்லை. ஆனால், கொடியவனிலும் கொடியவனான இந்தப் பாவிக்கு நீ காட்சி தந்தாயே! என்னே உன் கருணை?' என்று இரு கரம் கூப்பிக் கண்ணீர் மல்கினான்.அம்பிகை அவன் மேல் கருணை கொண்டு வதம் புரிந்து அருளினாள். பண்டாசுரன் அசுரத்தன்மை நீங்கி தேவத் தன்மை அடைந்தான்.ஸ்ரீசக்ரத்திலிருந்து அன்னை வெளிப்படும் போதெல்லாம் அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பெறும் என்பதற்கு இப்புராணமே சாட்சி..”பட்டரின் மெய்யுரை கேட்ட சபையோர் அவரது திருப்பாதங்களை வணங்கி மகிழ்ந்தனர். அவரும் அடுத்த பாடலுக்கு சென்றார்.“உறைகின்ற நின்திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோஅறைகின்ற நான்மறையின் அடியோ, முடியோ? அமுதம்நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே!”“பூரணமான, சலனமற்ற, மங்கல வடிவினளே! நீ அருளாட்சி செலுத்தும் கோவில் உன் கணவரின் ஒரு பாகமோ? ஓங்கி முழங்குகின்ற நான்கு வேதங்களின் சிகரமாகிய ஓம்காரமோ! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்கள் கூறும் அஹம் எனும் தத்துவமோ! அமிர்தம் வடிகின்ற பூரண நிலவோ! என்றும் என் நெஞ்சில் நிறைந்தவளோ! அல்லது பிறர் நெஞ்சில் நிறைந்தவளோ! பிறர் கண்களுக்குப் புலப்படாது மறைந்து ஓடும் சரஸ்வதி நதியோ?”இதுவே பாடலின் பொருள் என்று அருளினார் அபிராமி பட்டர்.அப்போது மக்கள், “பட்டர் பிரானே! மறைகின்ற வாரிதியெனப் பாடிய தாங்கள் அதனை சரஸ்வதி நதியெனப் புகழ்வது எப்படி?” என்று வினவினார் மன்னர்.பட்டர் அதற்கான விளக்கத்தை தொடர்ந்தார்“முன்னொரு காலத்தில் பராசக்தி தன்னிலிருந்து மூன்று சக்திகளைப் பிரித்தாள். அவர்களுக்கு கங்கை, யமுனை, சரயு என பெயர் சூட்டி, இமயமலைச் சாரலுக்கு செல்ல ஆணையிட்டாள். மறுகணம் மூவரும் இமயகிரி சேர்ந்தனர். அங்கு பாடியும், ஆடியும் ஆனந்தமாகத் திரிந்தனர். ஒருநாள் கயிலையில் நந்தி, முருகன், பிள்ளையார் ஆகியோருடன் சிவசக்தி வீற்றிருந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். அங்கிருந்த பராசக்தியிடம், “கங்கை, யமுனை சரயு என்ற அந்த மூன்று தேவி மங்கையரைப் படைத்தது ஏனோ?” என்றார்.“நாரதா! அவர்கள் மூவரும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரே ஆவர். கங்கை ஈசனையும், திருமகள் மாலவனையும், கலைமகள் பிரம்மாவையும் சென்று சேரும் காலம் தொலைவில் இல்லை. ஆனால் அதற்கு முன்...' என்று சற்றே நிறுத்திய பராசக்தியை ஏதும் புரியாமல் பார்த்தார். நாரதரிடம், “பொறுத்திருந்துதான் பாரேன்!' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.அவள் ஓர் ஏழு வயது பெண் குழந்தையாக மாறி, பாலா என்ற பெயருடன் நதி தேவியர் இருந்த இடத்திற்கு சென்றாள். அவளைக் கண்டதும் தேவியருக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. அவளுடன் கைக்கோர்த்து தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தனர். 'ஒளிந்து பிடித்து விளையாட்டு விளையாடலாமா?' எனக் குழந்தை கேட்க கங்கை கூறினாள். “குழந்தாய்! விளையாடலாம். ஆனால் நாங்கள் ஓடி ஒளிந்துகொள்வோம். நீதான் எங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்!”பாலாவும் ஒப்புக்கொண்டு கண் மூடினாள்.மங்கையர் ஓடி ஒளிந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்துக் கண்திறந்த குழந்தை அங்கும் இங்கும் தேடி ஓடியது.முதலில் கிடைத்தவள் யமுனை தான்! பாறைக் கூட்டங்களின் பின் ஒளிந்திருந்த யமுனையின் கரம் பற்றி வெளிக்கொணர்ந்த பாலா, தன் மழலை ரூபம் மாறி பராசக்தியாய் காட்சி அளிக்க யமுனை அன்னையின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினாள்.பராசக்தி அவளை ஆசீர்வதித்து, 'யமுனா! நீ ஒரு நதியாகப் பிரவாகித்து ஓடுவாயாக. நீ திருமகளின் வடிவமாதலின் மாலவனைச் சென்று சேர்வாயாக. நீ ஒளிந்து மறைந்த பாறைகள் சாலிகிராமங்களாக மாறி திருமாலின் அம்சமாக, நீ சென்று செழிக்கும் இடம்தோறும் காணப்பெறும்!' என்று அருளினாள். யமுனையும் பெருநதியாய் பிரவாகித்து ஓடி திருமாலைச் சேர்ந்தாள்.அடுத்து கங்கையைக் கண்டுபிடித்த அம்பிகை, 'கங்கா! நீ சிவனின் ஜடாமுடியின் உச்சியில் சென்று சேர்ந்து நதியாக புவியினில் பிரவாகித்து ஓடி, மக்கள் தம் பசிப் பிணி தீர்ப்பாயாக. உன் புனித நீரில் எவர் மூழ்கி எழுந்தாலும் அவர்களின் பலகோடி பிறவிகளின் பாவமும் தீரும்,” என்று அருளினாள்.இப்படியாக நதிகளின் பிறப்பு பற்றி முடித்த பட்டர் அடுத்த பாடலைப் பாடி பொருள் கூறினார்.“மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்சங்கலைச் செங்கை சகலகலாமயில் தாவுகங்கைபொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!”“மங்களம் பொருந்தியவளும், செம்மையான கலசம் நிகர் ஸ்தனங்களை உடையவளும் ஆன மலையரசி அம்பிகை. சமுத்திரத்தில் விளைந்த நற்சங்கினால் ஆன வளையல்கள் அணிந்த சிவந்த திருக்கரங்கள் கொண்டவள். அவள் சகலகலா வல்லியான கலைமகள் ஆன மயில்! அலைகள் ஆர்ப்பரித்து சிவபெருமானின் திருமுடியிலிருந்து பொங்கித் தாவும் கங்கையும் அவளே! சிவனது இடப்பாகம் பெற்ற உமையவள். அனைத்துலகும் தன்வசம் அடக்கும் உடையாள். பொன்னி நிறமுடைய திருமகள். நீல நிறம் கொண்ட தாராம்பிகை. வெண்ணிறம் தாங்கும் சரஸ்வதி. பச்சை நிறம்கொண்ட கொடிநிகர் பார்வதி.” இப்படி முடித்த பட்டரிடம் மன்னர் கேட்டார்.“ஐயனே! அம்பிகையை கரியவண்ணம் கொண்ட மாரியாகவும், காளியாகவுமே நாங்கள் வணங்கி வருகிறோம். ஆயின் வெள்ளை, சிவப்பு, நீலம், பச்சை மற்றும் பொன்நிறம் கொண்டவள் அந்த பராசக்தி என்று தாங்கள் புகழ்வதன் வாயிலாக விளக்கம் வேண்டும்,” என்றார்.- இன்னும் வருவாள்முனைவர் ஜெகநாத சுவாமி