உள்ளூர் செய்திகள்

சொல்லடி அபிராமி (20) - சிறுமி வடிவில் வந்தவள்

அவன் கண்களில் நீர் மூட்ட, “தாயே! பராசக்தி, பாலாம்பிகே! எங்கள் குலதெய்வமே! காப்பாற்றி அருளம்மா!” என்று அழத்தொடங்கிய வேளையில் வானில் மழை மேகங்கள் சூழ்ந்து மின்னலும், இடியுமாக தூறலாயிற்று. அப்போது திடீரென்று ஏழெட்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஓடி வந்தாள். சத்யனைப் பார்த்ததும், தன் மழலை மாறாத மொழியில், “யாருங்க அண்ணா நீங்க? ஏன் இங்கே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கீங்க?” எனக் கேட்டாள்.அவளை ஏறிட்டுப்பார்த்த சத்யன், “பாப்பா! நான் எங்கள் குலதெய்வம் பாலாம்பிகையைத் தேடி வந்துள்ளேன். காட்டில் எப்படியோ வழி தப்பி விட்டேனம்மா!” என்றான்.“ஓ! அந்தக் கோவிலா வாங்க அண்ணா! நான் வழி காட்டுறேன்!” என்று அவனது கைகளைப் பற்றி இழுத்தாள் அந்தச் சிறுமி! ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல் சத்யனும் குழந்தையின் பின் சென்றான். நீண்ட தூரம் வளைந்து வளைந்து சென்ற பாதையில் நடந்து சென்றதும் தூரத்தில் கோவில் கண்களுக்குத் தென்பட்டது.அதற்குள் மழை பலமானது. சத்யன் கோவிலை நோக்கி ஓடினான். சிறிது தூரம் ஓடிய பின் நின்று விட்ட அந்த சிறுமியிடம், “நீ வரவில்லையா? ”என்று கேட்டான்.கலகலவென்று சிரித்த சிறுமி, “அண்ணா! நீங்க போங்க. நான் அங்கே அப்புறமா வருவேன்” என்று கூறி வேகமாக ஓடி மறைந்து விட்டாள்.சத்யன் முழுவதுமாக மழையில் நனைந்து போனான். அவன் கோவிலுக்குள் நுழையவும் பூஜாரி இரவு பூஜைக்கான ஆரத்தி தீபம் காட்டவும் சரியாக இருந்தது.சிரசின் மேல் இரு கரம் கூப்பி பாலாம்பிகையை வழிபட்டான். பூஜாரி தந்த தீபாராதனையை வணங்கி முடித்தான். பிறகு தான் கொண்டு வந்த பட்டுப் பாவாடை மற்றும் பூஜைப்பொருள்களை அவரிடம் ஒப்படைத்தான். பிறகு கண்களை மூடி தியானித்து விட்டு மீண்டும் அம்பிகையை நோக்கி வணங்கினான். அப்போது அவன் கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சி தந்தது!அங்கே கர்ப்பக்கிரகத்தில் சற்றுமுன் அவனை கோவிலுக்கு வழிகாட்டி அழைத்து வந்த சிறுமியின் வடிவிலேயே காட்சியளித்தாள் பாலாம்பிகை.அப்படியென்றால்?அவனை அங்கு அழைத்து வந்தது சாட்சாத் பாலாம்பிகையா? சத்யனின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது!அன்று முதல் சத்யனின் துன்பம் மறைந்து போனது. தாயார் உடல் நலம் பெற்றாள். சத்யனும் பழைய ஆரோக்கியத்தை பெற்றான். பிரிந்த மனைவி வந்து சேர்ந்தாள். பெண் குழந்தை பிறந்தது. பாலாம்பிகா என்று பெயர் சூட்டினர். வியாபாரம் மீண்டும் தலைதூக்கியது. இழந்த பெருமையும், செல்வமும் வந்து சேர்ந்தது.இப்போது சொல்லுங்கள்! அன்னையைப் பிரிந்தால் நாம் அடையும் பிணிகளுக்குக் காரணம் நாமா? அல்லது அவளா? அவள் கருணை மிக்கவள். நமக்கு அருள் புரியவேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவள். நாம் அவளைப் புரிந்து கொள்வதில்லை. தாயின் கரங்களிலிருந்து இறங்கிச் சென்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை எப்படி ஒரு தாய், வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பாளோ, அது போல கர்ம வினைகளால் நாம் அவளை விட்டு விலகி வந்து விட்டாலும், அவள் நம்மை மறப்பதில்லை..” என்ற பட்டரின் அருள்மொழியில் சபை நெகிழ்ந்து போனது.அடுத்து 25வது பாடலான,“பின்னே திரிந்துன் அடியாரைப் பேணி பிறப்பறுக்கமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே!” என்று பாடிய பட்டர், அதன் பொருளைச் சொன்னார்.“படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை புரிவதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலானவர்களைப் படைத்து, அவர்களுக்கு தாயாக விளங்கும் அன்னையே! இவ்வுலக மக்கள் மேன்மையுறும் பொருட்டு, அபிராமி என்ற நாமமும், ரூபமும் தாங்கி வந்தவளே! நீயே எம்பிறவிப் பிணிக்கு அருமருந்தானாய். அமுதம் போன்ற தாயே! உன்னை வழிபடும் வித்தையை நான் எவ்வாறு அறிந்து கொண்டேன் தெரியுமா? அது ஒரு பிரம்ம ரகசியம். உன்னை வழிபட்டாலே போதும். உன் பக்தர்கள் அந்த வழியை அறிந்து கொள்வார்கள். நான் அவர்களின் பின்னே சென்று அதை அறிந்து கொண்டேன். சிரத்தையுடன் நான் கற்ற இந்த வித்தையைக் கொண்டு என்றும் மறவாமல் உன்னை துதிப்பேன்” என்றவர் விளக்கத்தை தொடர்ந்தார்.அப்போது ஒருவர் “ஐயனே! 'அடியாரைப் பேணி' என்பதன் பொருளை விளக்க வேண்டும்,” என்றார். இதற்கு பதிலாக தேவதத்தன் என்பவனின் கதையைச் சொன்னார் பட்டர்.தேவதத்தன் ஸ்ரீ வித்யா தீட்சை பெற விரும்பினான்.அதற்காக தகுதிவாய்ந்த குருநாதரைத் தேடி காட்டில் அலைந்தான். ஒருநாள் ஒரு முனிவரை கண்டான். அன்று முதல் அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்தான். அவர் இவன் அருகே சென்று வணங்கிப் பணிந்தாலும் இவனை ஏறிட்டும் பார்க்கவில்லை. சில சமயம் கண்களை மூடி அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, பின் எழுந்து பார்த்தால் அவர் மறைந்து போயிருப்பார். ஆனாலும் குரு இவனைப் பார்க்கவே இல்லை.ஒருநாள் ஒரு குகை வாசலில் சற்றே கண் அயர்ந்து பசியுடன் படுத்திருந்த சமயத்தில், ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவளது குழந்தை முகமும், வசீகரமான கண்களும் தேவதத்தனுக்கு ஆச்சரியத்தை ஊட்டின. “யாரம்மா நீ?”என்று எழுந்திருக்க முயன்ற அவனைப் பார்த்து கலகலவென்று சிரித்த சிறுமியின் கைகளில் பால் நிறைந்த மண் கலயம் இருந்தது. பாலை அச்சிறுமி தேவதத்தனின் வாயில் ஊற்றினாள். தேவாமிர்தம் போல் இனித்தது. பசிதீர்ந்த தேவதத்தனை நோக்கிய அச்சிறுமி, “இந்தக் காட்டுக்குள் யாரைத் தேடுகிறாய்?” என்றாள்.“பெண்ணே! இங்கே ஒரு முனிவர் தவம் செய்து வருகிறாரே? அவரைத்தான் தேடுகிறேன்....”“ஏன் அவரைத் தேடுகிறாய்?” சிறுமி வினவினாள்.“அம்பிகையை வழிபடும், பிறப்பில்லா நிலை தரும் வித்தையை அவரிடமிருந்து அறிய வேண்டித்தாம் அவரைத் தேடுகிறேன்.”இதுகேட்டு கலகலவென சிரித்த சிறுமி மிகச் சாதாரணமாகச் சொன்னாள். “முதலில் உன்னைத் தேடு, உன்னை நீயே தேடு... குரு தானாக உன்னிடம் வருவார்!”அவ்வளவுதான். அவள் மறைந்து விட்டாள்.சிறுமியின் வடிவில் வந்தவள் அந்த அம்பாளேதான் என்பதைப் புரிந்து கொண்ட தேவதத்தனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. தனது தவறை உணர்ந்த அவன் மறுகணமே தன் தேடலை நிறுத்தி மவுனியானான். அவ்விடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் அவனுக்கு உச்சந்தலையில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. கங்கையே தன் தலையில் வர்ஷிப்பதைப் போன்ற உணர்வு. மெல்லக் கண்திறந்த அவனுக்கு பெருவியப்பு ஒன்று காத்திருந்தது. ஆம்! காலம் காலமாக அவன் தேடி அலைந்த குருநாதர் தானாக அவன் கண்முன் நின்றிருந்தார். அவரது அருட்கரங்கள் அவனது தலையில் ஆசியருளிப் பதிந்திருந்தன.ஆம் அன்பர்களே! தன்னைத் தானே தேடுவதே ஆத்ம சாதனத்தின் முதல் நிலை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வழியைக் காட்டிய அபிராமி அன்னையை வணங்கினால் நமக்கும் அவள் அருட்காட்சி கிடைக்கும்” என அபிராம பட்டர் அருளினார்.- இன்னும் வருவாள்முனைவர் ஜெகநாத சுவாமி