உள்ளூர் செய்திகள்

சொல்லடி அபிராமி (22) - சுப்பிரமணியர் அவதாரம்

பட்டர் பேசத் துவங்கவும், மற்றொரு இளைஞனும் குறுக்கிட்டான். அவன் பட்டரிடம், “அப்படி என்றால் உலகில் எல்லாம் மாயை தானா? சுவை மிகுந்த உணவு, மயக்கும் மது, இயற்கையின் பேரழகு இவை எல்லாம் கூட பொய்யா?”நடுவயதில் இருந்த மற்றொருவன் உரக்கக் கூறியதாவது: “அதெல்லாம் சுத்தப் பொய். நிறைய யாகங்கள் செய்ய வேண்டும். சாலைகள் அமைப்பது போன்ற புண்ணிய காரியங்களைச் செய்ய வேண்டும். இத்தகைய புண்ணியம் செய்பவர்கள் மேலான சொர்க்கத்தை அடைந்து நீண்டகாலம் பலவிதமான இன்பங்களை அனுபவிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே,” என்றான்.“ஆன்மிகம், ஆலயத் திருப்பணி, அன்னதானம் மற்றும் யாகங்கள் போன்றவை செய்பவன், மீண்டும் மீண்டும் பிறந்து அல்லலுறவே செய்வான். சிலகாலம் அவன் சொர்க்கலோகத்தில் புண்ணிய பலன்களை அனுபவித்தாலும், மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறந்து அல்லல்படுவான் என்று முண்டக உபநிடதம் கூறுகிறது. அதனை 'இஷ்டம், பூர்த்தம்'எனும் இருசொற்களால் ஞானிகள் விளக்குகின்றனர். இஷ்டம் என்பது யாகங்கள் போன்ற சடங்குகள் செய்வது. சாலைகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது போன்றவை பூர்த்தம். இதனால் புண்ணியம் ஏற்பட்டாலும் அதன் கூடவே துக்கமும் வந்துசேரும் என்பது உண்மை.நற்பணிகள் அவசியம் தான். ஆனால் அதுவே ஆன்ம விடுதலையைத் தந்துவிடாது. இப்போது உங்கள் மனதில் எதுதான் நம்மை இந்தப் பிறப்பு, இறப்பு எனும் சூழலிலிருந்து மீட்கும் என்ற கேள்வி எழும். சொல்கிறேன் கேளுங்கள்,” என்று மேலும் தொடர்ந்தார்.“விழிப்படைந்த புத்தியைத் தேரோட்டியாகக் கொண்டவனின் பயணமே தன் லட்சியத்தை அடைகிறது. அவன் இறைவனைச் சென்று சேர்கிறான். விழிப்படையாத புத்தியால் வழி நடத்தப்படுபவன் தன் இலக்கினைச் சென்று சேருவதில்லை. அவன் உலக வாழ்வில் உழல்கின்றான்,” என்று கடஉபநிடதம் விளக்குகிறது. மனதை விட ஆற்றல் வாய்ந்தது புத்தி. மனதை புத்தியால் விழிப்படையைச் செய்து, ஆசையை அகற்ற வேண்டும். அவ்வாறு தூய்மை பெற்ற மனம் தான் தியானத்தில் ஈடுபட்டு அம்பிகையின் தரிசனம் பெற முடியும்,” என்ற பட்டரின் விளக்கம் கேட்டதும், வினா தொடுத்தவர்கள் பட்டரின் கால்களைப் பற்றி வணங்கினர்.பிறகு பட்டர் பல பாடல்களுக்கு விளக்கமளித்த பின்,“ககனமும் வானும் புவனமும் காண, விற்காமன் அங்கம்தகனம் முன் செய்த தவப் பெருமாற்கு, தடக்கையும் செம்முகனும், முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே” என்ற பாடலுக்குரிய விளக்கம் தந்தார்,“எல்லை என்பதே இல்லாத உலகெங்கும் விரிந்திருக்கும் சகல ஜீவராசிகளும், தேவர்களும், பூமியில் வசிப்பவர்களும் அதிசயத்துப் பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபெருமான் மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தார். சக்தியின் பராக்கிரமத்தால் தவயோகியாகிய சிவபெருமானுக்கு 12 திருக்கரங்களும், ஆறு திருமுகங்களும் பொருந்திய ஞானமே வடிவான முருகன் திருமகனாய் அவதரித்தார். இதுவே இப்பாடலின் பொருள்,” என்றார். “சிவபெருமான் மன்மதனை சாம்பலாக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது? அழிக்கும் சக்தி கொண்ட நெற்றிக்கண் தீப்பிழம்பு ஆக்கும் சக்தி படைத்து ஆறுமுகனைத் தோற்றுவித்தது எவ்வாறு? இதுவே அடியேனது ஐயம்,” என்றார் மன்னர்.பட்டர் விளக்கினார்:“அது தானே அன்னை அபிராமியாக விளங்கும் ஆதிசக்தியின் வல்லமை என்று நான் வியந்து போற்றினேன்! தவசீலராய் தட்சிணாமூர்த்தி என்ற மோன தவக்கோலத்தில் வீற்றிருந்த சிவபெருமான், ஒரு பிள்ளைக்குத் தந்தையானது அதிசயத்திலும் அதிசயம்!நெற்றிக்கண்ணின் நெருப்புப் பொறி மன்மதனை சாம்பலாக்கியது ஒரு அதிசயம்! அழிக்கும் ஆற்றல் கொண்ட தீப்பிழம்பு ஆறு தாமரைகளில் விழுந்து ஆறுமுகனாக அவதரித்தது மற்றுமோர் அதிசயம். ஆனால் இந்த அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமாக அம்பிகை திகழ்கிறாள். அதுவே பேரதிசயம்.மேலும் விளக்கமாக உரைக்கின்றேன்.. கேட்டு மகிழுங்கள்...முன்னொரு காலத்தில் சூரபத்மன் என்ற அசுரன், மூவுலகங்களையும் துன்புறச்செய்து வந்தான். காலதர்மத்தின்படி அவனை சம்ஹாரம் செய்ய சரவணபவனாகிய சிவகுமாரன் அவதாரம் செய்ய வேண்டும். ஏனெனில், சூரபதுமன் பிரம்மனிடம் தவம் செய்து வரம் பெற்றவன். சிவமும் சக்தியும் இணைந்தால் தான் உயிர்கள் தோன்ற முடியும். அப்படி ஆண், பெண் இணைவால் தோன்றிய எவராலும் அழியாத வரம் பெற்றான் சூரபத்மன். எனவே, சிவசக்தி சம்பந்தமின்றி சிவபெருமானால் மட்டுமே படைக்கப்படும் ஓர் ஆற்றலே சூரபத்மனை அழிக்க முடியும் என்ற நியதி தோன்றிடவே தேவர்கள் வியந்து நின்றனர். அதுமட்டுமன்றி சூரபத்மன் தோன்றி பலகாலம் ஆகியும் முருகப்பெருமானின் அவதாரம் நிகழ வேண்டிய தருணம் நெருங்கி வந்து சிவபெருமானோ அதைப் பற்றி சற்றும் சிந்திக்காதிருப்பது தேவர்களை மேலும் கவலைப்படச் செய்தது. சின்முத்திரை தாங்கிய கோலத்தில் சனகாதி முனிவர்கள் பணிந்திருக்க, ரிஷபவாகனம் காத்திருக்க, கண்கள் மூடிய நிலையில் மகாமவுனியாக தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் தென்திசை நோக்கி தியான சாதனையில் மூழ்கியிருந்தார்.பார்வதி தேவியோ அவரது தவத்திற்குச் சிறிதும் இடையூறின்றி பாத சேவையில் ஈடுபட்டிருந்தாள்.இவர் எப்படி முருகனை சிருஷ்டிப்பார் என்று குழம்பிய தேவர்கள், இந்திரனிடம் ஓர் ஆலோசனை கூறினர். 'எவரேனும் ஒருவர் சிவன் நிஷ்டையைக் கலைக்க வேண்டும்' என்பதே அந்த யோசனை. அப்படி செய்து முக்கண்ணனின் கோபத்திற்கு ஆளாக எல்லோருமே அஞ்சினர். முடிவில் காமதேவனாகிய மன்மதன், சிவனின் நிஷ்டையை கலைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.மன்மதனும் தேவகாரியம் என்பதால் ஒப்புக்கொண்டான்.குறிப்பிட்ட நேரத்தில் மன்மதன் மறைந்து நின்று சிவனின் மீது கரும்புவில்லில் மலர்க்கணைபூட்டி செலுத்தினான். இறைவன் திருமார்பில் அது பட்டு தெறித்தது. சிவன் கண்விழித்தார். கோபத்தில் நெற்றிக்கண் திறந்தது. அதிலிருந்து இரு ஜோதி பிழம்புகள் புறப்பட்டன.முதல் நெருப்பு, மன்மதனை சுட்டுச் சாம்பலாக்கியது. அடுத்து தடாகத்தில் பூத்திருந்த ஆறு தாமரைகள் மேல் விழுந்தது. அது ஆறு அழகிய குழந்தைகளாக மாறியது. பார்வதி ஓடிச்சென்று ஆறு குழந்தைகளை எடுத்து அணைத்துக்கொண்டாள். அச்சமயத்தில் ஆறுமுகப்பெருமான் அவதரித்தார்.மன்மதன் சாம்பலானதும் ரதிதேவி அம்பிகையிடம் முறையிட்டாள். மாங்கல்ய பிச்சை கேட்டு மன்றாடினாள். தன் கணவனை உயிர்ப்பித்து தரவேண்டும் எனக் கெஞ்சினாள். அம்பிகையின் திருவுளமறிந்து ஈசன், தனது கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து சாம்பல் மீது தெளிக்க அதனின்று மன்மதன் உயிர்த்தெழுந்தான்.இறைவன் பெற்றிருக்கும் மூன்றாவது கண் ஞானக்கண். அதிலிருந்து வெளிப்படுவது ஞானக்கனல். அதற்கு அழிக்கும் சக்தியும், ஆக்கும் சக்தியும் உண்டு. மோகம் அழிந்தால் ஞானம் பிறக்கும் என்பதே சிவன் நெற்றிக்கண்ணை திறந்த தத்துவம். காமம் அழிக்கப்பட்டதும் பிறக்கும் மூதறிவே பிரம்மஞானம். அதை உணர்த்திடவே சுப்பிரமணியரின் அவதாரம்.அதன்பின் சூரசம்ஹாரம், பாண்டாசுரன் தோற்றம், லலிதாம்பிகை வடிவில் அவனை அழிப்பது என பிரம்மாண்ட புராணம் கூறும் விளக்கங்கள்,” என்று பட்டர் உரையை நிறைவு செய்தார்.- இன்னும் வருவாள்முனைவர் ஜெகநாத சுவாமி