பேச்சில் இனிமை வேண்டும்
பாண்டவர்களில் ஒருவரான பீமன், முனிவர்களுக்கு அன்னதானம் செய்தார். அதற்காக அவர்களை வற்புறுத்தி அதிகம் சாப்பிட வைத்தார். மறுப்பவர்களை திட்டி அவமானப்படுத்தினார். இதனால் சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. ''முந்நுாறு, நானுாறு என வந்தவர்கள் முப்பது, நாற்பதாக குறைந்து விட்டனரே'' என தன்னை சந்திக்க வந்த கிருஷ்ணரிடம் வருந்தினார் பீமன்.''சரி...அன்னதானத்தை நான் கவனிக்கிறேன். பக்கத்து மலையில் கந்தமாதன மகரிஷி என்பவர் நீண்டகாலம் தவமிருந்து வருகிறார். அவரைச் சந்தித்தால் தீர்வு கிடைக்கும்'' என்றார்.பீமனும் அவரைச் சந்திக்கப் போனார். மகரிஷியின் உடம்பே பொன் போல ஜொலித்தது. ஆனால் வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றம் வீசியது. “மகரிஷியே! ஏன் இந்த கொடுமை உங்களுக்கு?” எனக் கேட்டார் பீமன்.“பீமா! நான் முற்பிறவியில் அன்னதானம் செய்தேன். அந்த புண்ணியத்தால் இந்த பொன்னுடல் கிடைத்தது. ஆனால், சாப்பிட வருவோரை வற்புறுத்தி சாப்பிட வைத்தேன். மறுத்தவர்களை திட்டினேன். இதனால் இக்கொடுமைக்கு ஆளானேன். பகவான் கிருஷ்ணரால் அனுப்பப்பட்ட உன்னைக் கண்டதால் இனி பிரச்னை தீரும்'' எனத் தெரிவித்தார்.மனம் திருந்திய பீமன், ''கிருஷ்ணா! இன்று முதல் தானம் அளிக்கும் போது இனிமையுடன் பேசுவேன்'' என தெரிவித்தார்.