பச்சைப்புடவைக்காரி (8)
நாலா பக்கமும் பிரச்னை''நாலா பக்கமும் பிரச்னை. அதில் மூழ்கி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. என்ன தான் செய்வது? என்று பலர் என்னிடம் அறிவுரை கேட்கிறார்கள் தாயே. என்ன சொல்லட்டும்?''''அடுத்தவரின் வலியும் வேதனையும் புரியாமல் அறிவுரை சொல்வது தவறு. பாவமும் கூட. நாலா பக்கமும் பிரச்னைகள் இருக்கும் ஒரு சூழ்நிலையில் உன்னை மாட்டிவிடுகிறேன். அதிலிருந்து நீ மீண்டால் அறிவுரை சொல்லலாம்.''''தாயே இது என்ன கொடுமை?''''நீ ஒரு பிரச்னையில் சிக்க வேண்டிய காலமிது. நீ என்னை வணங்குவதால் உனக்கு எந்தச் சலுகையும் காட்டமாட்டேன். இரண்டு மணி நேரம்தான். ஆனால் அதற்குள் மரண வேதனை அனுபவித்துவிடுவாய். அப்புறம் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லலாம்.''நானும், பச்சைப்புடவைக்காரியும் அம்மன் சன்னதி வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தோம். எனக்கு மட்டுமே ஒரு உணர்வுநிலையாக அன்னை வெளிப்பட்டதால் எனக்கு நானே பேசிக்கொள்கிறேன் என்று நினைத்து கோயில் காவலர் முறைத்தபடி கடந்து சென்றார்.என் முகம் வாடிவிட்டது... அன்னை தன் பொற்கரத்தால் என் முகத்தை நிமிர்த்தினாள். சிலிர்த்தேன்.''கவலைப்படாதே. தீர்வையும் நானே காட்டித் தருகிறேன்.'' மலர்ச்சியுடன் நான் தலை நிமிர்ந்தேன்.''தீர்வு தானாக வராது. உனக்கு முன் நான் காட்டும் வழிகளில் நல்ல வழியை நீ தேர்ந்தெடுக்க வேண்டும்.''''இல்லாவிட்டால்...''''அடுத்த பிறவியில் சந்திக்கலாம்.''மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருநாள். மாலை ஆறரை மணிவாக்கில் எங்கோ வேலையாகச் சென்றவன் அண்ணாநகர் பக்கம் போக, போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். யாரோ சொன்னதைக் கேட்டுத் தெப்பக்குளம் நோக்கி என் காரைச் செலுத்தியது நான் செய்த இமாலயத் தவறு என்றுபுரிந்த போது காலம் கடந்து விட்டிருந்தது. அங்கிருந்த மேல்பாலத்தின் கீழே மாட்டிக்கொண்டேன். என்னைச் சுற்றி மக்கள் கூட்டம். மக்கள் நடந்து போகக் கூட இடம் இல்லாத நிலை. கால் மணி நேரம் எப்படியோ மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்திருந்தேன். அதன்பின் ஒரு வகையான மரண பயம் என்னை ஆட்கொண்டது.காரின் கதவைத் திறக்கக்கூட இடமில்லை. கடந்து சென்ற மக்கள் என்னை ஒரு விநோதப் பிராணியைப் போல் பார்த்துச் சென்றார்கள்.'நடக்கறதுக்கே இடத்தைக் காணோமா இதுல இவரு கார ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு. இங்கேயே கிடந்து சாவுடி. அப்போத்தான் உனக்குப் புத்தி வரும்' போன்ற வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தேன்.காரைக் கடந்து சென்றவர்கள் எல்லோரும் காரை 'டம் டம்' என்று தட்டிவிட்டுச் சென்றார்கள். யாரோ என் தலையில் தட்டுவதைப் போல் வேதனையாக இருந்தது. யாராவது சாலை விதிகளை மீறினாலே எனக்கு கோபம் வரும். இப்போது. அப்படியே காரை அவர்கள் மேல் ஏற்றிக்கொன்று விடலாமா என்ற அளவுக்கு வெறி வந்தது. அப்படிச் செய்தால் அடுத்த நொடியே மொத்தக்கூட்டமும் சேர்ந்து என்னையும் காரையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும். அதன்பின் அன்னை சொன்னது போல் அடுத்த பிறவியில்தான் அவளைப் பார்க்க முடியும். நாயாகப் பிறக்கிறேனோ, நரியாகப் பிறக்கிறேனோ யார் கண்டது?காற்று வேண்டும் என்பதற்காக காரின் கண்ணாடியைச் சற்று இறக்கி வைத்தேன். மொட்டைத் தலை மனிதர் ஒருவர், அந்தச் சிறு இடைவெளியில் வாயை உள்ளே வைத்து என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டினார். என்னைப் பெற்றவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள், உயரதிகாரிகள் ஏன், என் பரம எதிரிகள் கூட என்னை அப்படித் திட்டியதில்லை. சுடுசொல் அதிகம் கேட்காமலேயே வளர்ந்தவன் என்பதால், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சட்டையணியாத உடம்பில் சாட்டையடிகளாக விழுந்தன. செய்யாத தவறுக்கு இப்படி அநாகரிகமாகத் திட்டுகிறாயே என்று அவருடன் நான் சண்டைக்குப் போகலாம். என் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் அவர் பக்கம் கூட்டம் இருந்தது. கூட்டத்திற்கு முன் நியாயம் நிற்காது.முந்தைய நாள்தான் நான் பலரின் பாராட்டு மழையில் நனைந்திருந்ததை நினைத்துப் பார்த்தேன். இன்னும் அதிகமாக வலித்தது.நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரு போலீஸ்காரர் ஓடி வந்து 'வண்டியைப் பின்னால் எடுங்கள்' என்று கத்தினார். வண்டியை ஓர் அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. நடந்து வந்தவர்கள் காரைத் தட்டினார்கள். திட்டினார்கள். ஆனது ஆகட்டும் என்று காரை நிறுத்திவிட்டேன். 'அடுத்த பிறவியில் பார்க்க முடியா விட்டாலும் பரவாயில்லை தாயே! இந்தப் பிறவியில் பாவியான என் மீதும் அன்பைப் பொழிந்த உங்களை வணங்குகிறேனம்மா.' என்றபடி கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒரு காவலர் ஓடி வந்தார்.''சார் முன்னால போகலாம். கிளியர் பண்ணிட்டேன். ஆனா பொறுமையாப் போகணும்.''தயக்கத்துடன் காரைக் கிளப்பினேன். ஊர்ந்து சென்றது வண்டி. எப்படியோ பாலம் ஏறி இறங்கித் தெப்பக்குளம் சென்றுவிட்டேன். அங்கே கூட்டம் இல்லை. வண்டியை ஓரம் கட்டி நின்று விட்டேன். ஸ்டியரிங்கில் முகம் புதைத்து அழுதேன். யாரோ என் தோளைத் தொட்டார்கள். பச்சைப்புடவைக்காரி.''பிரச்னை வரும் போது பொறுமை வேண்டும்; கோபம் கூடவே கூடாது. அடுத்தவர் மீது பழி போடக்கூடாது. அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கலாம் என்பதை உணர வேண்டும். துன்பங்களை அமைதியாகத் தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும். பதட்டப்பட்டு தப்பான வழிகளை நாடக்கூடாது. மிக முக்கியமானது - அந்தச் சமயத்திலும் உன் மனதில் அன்பு நிறைந்திருக்கவேண்டும்.''''தாயே இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.''''“என்ன பாடம்?''''நீங்கள் இன்பம் தந்தாலும், துன்பம் தந்தாலும் உங்களை விட்டால் எனக்கு வேறு யாரம்மா இருக்கிறார்கள்? நீங்கள் தரும் துன்பங்களை மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வது தான் இருப்பதிலேயே உத்தமமான வழிபாடு. மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்.''பச்சைப்புடவைக்காரியின் சிரிப்புச் சத்தம் மட்டும் கேட்டது. அவளைக் காணவில்லை. கூட்டத்தில் மாட்டிக்கொண்டபோது வந்ததைவிட இப்போது கண்ணீர் அதிகமாக வந்தது. அதையும் அவளுக்கே காணிக்கையாக்கினேன். இன்னும் வருவாள்தொடர்புக்கு: varalotti@gmail.comவரலொட்டி ரெங்கசாமி