பச்சைப்புடவைக்காரி! (1)
வைத்துக்கொண்டு வஞ்சனை செய்கிறேனா?அன்று சனிக்கிழமை. மீனாட்சி கோயிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. தரிசனம் முடிந்தபின் கோயிலைவிட்டு செல்ல மனமில்லாமல் பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தேன்.''யாராவது வருகிறார்களா? இல்லை அருகில் அமரலாமா?''குரல் கேட்டு நிமிர்ந்தேன். முன்னால் ஒரு பேரழகி நின்று கொண்டிருந்தாள். வயது 25 இருக்கும். ஜொலிக்கும் முகம். கருணை பொங்கும் கண்கள்.''நீங்கள்.. யார்..''''என் புடவையின் நிறத்தைப் பார்.'பச்சை. ஆஹா அன்னையே நேரில் வந்து விட்டாளா? அவள் கால்களில் விழுந்து வணங்கினேன். இவள் இப்படி எல்லோரும் பார்க்கும்படி வந்தால் இவள் மேல் கண் படாதோ? மக்கள் கூட்டம் மொய்த்து விடுமே!''நான் உன் கண்களுக்கு மட்டுமே தெரியும் உருவெளிப் பாடாக வந்திருக்கிறேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்''''தாயே நீங்கள் இறைவி. உங்களிடம் உள்ள செல்வங்களும், சக்திகளும் அளவிட முடியாதவை. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தாலும் உங்கள் செல்வத்தில் இம்மியளவு கூட குறையாது. பிறகு ஏன் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்? ஏன் வைத்துக்கொண்டே வஞ்சனை செய்கிறீர்கள் அம்மா?''''ஒரு தாயிடம் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இனிப்புகள் இருக்கின்றன. அந்தத் தாயின் குழந்தைகள் நிறைய இனிப்பு வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். பாத்திரத்தில் உள்ள இனிப்புகளை மொத்தமாக குழந்தையிடம் கொடுத்தால் என்ன ஆகும்? குழந்தைகளின் வயிறு கெட்டுப்போகும் அல்லவா? அதனால் அவள் அளந்து கொடுக்கிறாள். இறைவன் படியளக்கிறான் என்று சொல்வது அதனால் தான். அளந்து கொடுக்கக் காரணம் என்னிடம் குறைவாக இருப்பதால் அல்ல. நீங்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான். எந்த அளவு என் குழந்தைகள் இனிப்பு சாப்பிடமுடியும் என்று எனக்குத் தெரியும். அந்த அளவு வரை கொடுக்கிறேன். அதற்கு மேலும் வேண்டும் என்று அடம் பிடித்தால் நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறேன்.''அவளுடைய அழகு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.''இதில் இன்னொரு விநோதமும் இருக்கிறது. நான் காட்டும் காட்சியை கவனித்துப் பார்''கண் முன்னால் திரைப்படமாக காட்சி விரிந்தது.காட்சியில் தெரிந்த பெண்ணுக்கு முப்பது வயது இருந்தால் அதிகம். ஒரு ஜோதிடர் அவளுடைய கணவரின் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.''இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் கணவருக்கு நெருப்பில் பெரிய கண்டம் காத்திருக்கிறது. உயிர் பிழைப்பதே கொஞ்சம் கஷ்டம் தான்.''அந்தப் பெண் அதிர்ச்சியில் மூர்ச்சை அடைகிறாள். மயக்கம் தெளிந்ததும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஓடி வருகிறாள்.''தாலிப்பிச்சை கேட்டு வந்திருக்கிறேன், தாயே. கருணை காட்டுங்கள்.'' என்று மீனாட்சியின் சன்னதியில் கதறி அழுகிறாள். 'கவலைப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன்.' என்று அன்னை சொன்னது எனக்குத் தெரிந்தது. ஆனால் அவள் காதில் விழவில்லை.காட்சி மாறியது.மாலை ஏழு மணி. அந்தப் பெண்ணின் கணவன் வீட்டிற்கு வருகிறான்.''என்னங்க உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கே என்னாச்சு?''''எங்க ஆபீஸ்ல ஒரு சின்ன தீ விபத்து.''''ஐயையோ உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?''''நல்ல வேளை. அந்த சமயம் பார்த்து நான் சிகரெட் பிடிக்க வெளிய போயிருந்ததால தப்பிச்சிக்கிட்டேன். பாவம் என் பிரண்டு சுரேஷூக்கு நல்ல காயம்''அந்தப் பெண் அன்னை மீனாட்சியின் படத்தை விழுந்து வணங்குகிறாள். பின் தன் தாலியை எடுத்து கண்களில் ஒத்திக் கொள்கிறாள். கண்ணீர் மல்க மீனாட்சிக்கு நன்றி சொல்கிறாள். பின் தீக்காயம்பட்ட சுரேஷின் மனைவி மாலதியை தொலைபேசியில் அழைக்கிறாள்.''நல்ல வேளை சுமதி. காயம் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. தப்பிச்சிட்டாரு. ஒரு வாரம் ஆஸ்பத்திரில இருக்கணும்னு சொல்லிட்டாங்க. சின்னத் தழும்பு கூட இருக்காதுன்னு சொல்லிட்டாங்க.''''ஓஹோ''''இன்னொரு விஷயம் தெரியுமா? நேத்து கம்பெனி எம்.டி., அவரைப் பாக்க வந்திருந்தாரு. தீ விபத்துல மாட்டிக்கிட்ட ஒவ்வொருத்தருக்கும் பதினைஞ்சு லட்சம் தரப் போறாங்களாம். அந்தப் பணத்த என்ன பண்றதுன்னுதான் நானும் அவரும் பேசிக்கிட்டு இருக்கோம்.''அதற்குப்பின் மாலதி பேசியது எதுவும் சுமதியின் காதில் ஏறவில்லை.''இந்தச் சனியன் பிடிச்ச சிகரெட் பழக்கத்த விடுங்கன்னு எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு நீங்க வெளிய போகாம தீ விபத்துல மாட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்க பிரண்டுக்குக் கெடைச்ச மாதிரி உங்களுக்கும் 15 லட்ச ரூபாய் கெடைச்சிருக்கும்ல? உங்களால அது அநியாயமாப் போயிருச்சு''அதன்பின் மீனாட்சி படத்தைப் பார்த்துக் கத்துகிறாள்.''தாயே உனக்குக் கண் இல்லையா? இப்படி வர வேண்டிய 15 லட்ச ரூபாய் பணத்தை அநியாயமாப் பறிச்சிக்கிட்டயே? வெள்ளிக்கிழமை தவறாம கோயிலுக்கு வந்ததுக்கு இதுதானா பலன்?''''இப்போது சொல்லப்பா. நான் என்ன.. வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறேன். அவள் கணவனுக்கு உண்மையிலே அன்று நெருப்பில் கண்டம் இருந்தது. பாவம் இவள் அழுகிறாளே என்று கர்மக்கணக்கு பார்க்கும் தர்ம தேவதைகளிடம் பேசி, அவனைக் காப்பாற்றினேன். இவளோ... பணம் போய் விட்டதே என்று அழுது கொண்டிருக்கிறாள். நான் என்ன செய்யட்டும் சொல்?''''நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் தாயே! ஆனால் நீங்கள் செய்தது பெரிய தவறு. இவ்வளவு அல்பமான மனிதர்கள் மீதும் அன்பைப் பொழிகிறீர்களே.. அது தவறம்மா. நாங்கள் நன்றிகெட்ட புழுக்கள் தாயே. எங்கள் மேல் கருணை காட்டாதீர்கள்.''அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. விம்மி அழுதபடி வேரறுந்த மரம் போல் அவள் காலடியில் விழுந்தேன். எழுந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை.இன்னும் வருவாள்வரலொட்டி ரெங்கசாமிஅலைபேசி : 80568 24024