பச்சைப்புடவைக்காரி (2)
UPDATED : மே 04, 2018 | ADDED : மே 04, 2018
குறிசொல்ல வந்தவள்அன்று மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. காலையில் என் பால்ய சிநேகிதனைச் சந்தித்தேன். பொதுவாகக் குசலம் விசாரித்தபோது அவன் சொன்ன விஷயம் என்னைப் பெரிய அளவில் பாதித்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை சிக்கல்களா? அவனுடைய மகளின் திருமணம் முறிந்துவிட்டது. மகனுக்கு நிச்சயமாகியிருந்த திருமணம் நின்று விட்டது. இதனால் அவனுக்கு மாரடைப்பு வந்துவிட்டது.அன்று மாலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடந்தே சென்றேன். இவ்வளவு கனத்த மனதுடன் அவள் சன்னதிக்குப் போக விரும்பவில்லை. ஆடிவீதியில் ஒரு நல்ல இடம் பார்த்து அமர்ந்துவிட்டேன்.''சாமி சோசியம் பாக்கறீகளா?'''ஆமா இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல்.' எரிச்சலுடன் அவளைப் பார்த்தேன்.''ஏன் சாமி உன் கூட்டுக்காரன் குடும்பத்துல பிரச்னை. அதுனால மனசு உடஞ்சி போயிருக்க சரிதானே?''அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டேன்.''நீ... நீங்க யாரும்மா?''''என் புடவை நிறத்தைப் பாரு சாமி.''பச்சைப்புடவைக்காரி.சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன்.''உக்காரு சாமி. என்ன பிரச்னைன்னு சொல்லு'' சொன்னேன்.''ஏன் தாயே சிலரின் வாழ்க்கை மட்டும் இடியாப்பச் சிக்கலாக இருக்க வேண்டும்?''''எல்லாம் நீங்களாக வரவழைத்துக் கொண்ட பிரச்னை தான்.''''புரியவில்லையே.''''உன் நண்பனின் பிரச்னைகள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.''என் முகம் சுண்டைக்காயாய்ச் சுருங்கியதை அவள் கவனித்துவிட்டாள்.''அந்த ஞானம் இப்போது உனக்கு வேண்டாம். அந்தச் சிக்கலை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.''என் முகம் மலர்ந்தது.முன்னால் தெரியும் காட்சியைப் பார்.அது காசி போன்ற ஒரு புனித நகரமாக இருக்க வேண்டும். ஒரு வேளை அதுதான் கங்கை ஆற்றங்கரையோ? பல அந்தணர்கள் ஆங்காங்கே பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு அந்தண இளைஞன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். அவன் முன்னால் தர்ப்பைப் புல், நீர், சுள்ளிகள் போன்ற சாமக்கிரியைகள் இருந்தன.அன்று அவன் ஒரு புதிய பூணும் நுாலை அணிந்து கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நுால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது.அதைப் பிரித்து எடுக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக சிக்கல் அதிகமானதே தவிர குறையவில்லை. வானத்தைப் பார்த்தான். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து போன அவனுடைய பெற்றோருக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணத்திற்கான நேரம் போய்விடும். என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தான்.''அந்த இளைஞனின் பூணுாலைப் போல பலருடைய வாழ்க்கையும் சிக்கலாகி இருக்கிறது. இப்போது சொல் அந்தச் சிக்கலை உண்டாக்கியது யார்? இறைவனா? தேவர்களா? அசுரர்களா? கிரகங்களா? இல்லை அவனுடைய எதிரிகளா?''''என்ன தாயே இது கேலிக்கூத்தாக இருக்கிறது? அந்தச் சிக்கலை உண்டாக்கியது அவனே தான். அதை எடுக்கும்போது முடிச்சை சரியாக அவிழ்க்காமல் விட்டிருப்பான். இல்லை பொழுது போகாமல் அந்த நுாலை அப்படியும் இப்படியுமாக அலைக்கழித்தபோது அவனே அந்தச் சிக்கலை உருவாக்கியிருக்க வேண்டும்.''''சரி இப்போது சிக்கல் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி முக்கியமா இல்லை அதை எப்படிக் களைய வேண்டும் என்ற முயற்சி முக்கியமா?''''சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பது தான் முக்கியம்'' ''அங்கே நடப்பதை கவனி''அந்த அந்தண இளைஞனை நோக்கி ஒரு பெரியவர் நடந்து வந்தார்.''ஏண்டா இன்னும் தர்ப்பணம் தொடங்கலையா? அமாவாசை திதி இன்னும் ஒரு நாழிகைதானே இருக்கிறது?''''இந்த பூணுாலில் சிக்கல்...''இங்கே கொண்டா நான் எடுத்துத் தருகிறேன்.''''இங்க பாருடா அம்பி, இந்த முடிச்சுக்குப் பேர் பிரம்ம முடிச்சு. இதைப் பிடித்துக் கொண்டு இழுத்தால் எந்த மாதிரிச் சிக்கலும் தீர்ந்துவிடும்.''அவர் சொன்ன மாதிரியே ஒரே விநாடியில் அந்தச் சிக்கல் போய்விட்டது.''பூணுாலில் ஏற்பட்ட சிக்கலை போக்க பிரம்ம முடிச்சைப் பற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் வாழ்க்கையில் சிக்கல் உண்டானால் வாழ்க்கையின் பிரம்ம முடிச்சை அழுந்தப் பற்றிக்கொள்ள வேண்டும்.''''ஆஹா! அருமை தாயே''' ''வாழ்க்கையின் பிரம்ம முடிச்சு என்ன?''''இறைவன்.''''அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்குமே! சிலர் என்னை வணங்குகிறார்கள். சிலர் பரமசிவனை. சிலர் பெருமாளை.''''இது என்ன தாயே அடுத்த சிக்கல்..''''இது சிக்கல் இல்லை தெளிவு. இறைவன் என்றால் அன்பு என்பதை உணர்ந்து கொண்டு அந்த அன்பைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரின் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தால் அவர் காட்டும் அன்பில் எங்கோ ஒரு குறைபாடு இருக்கிறது என்று புரிந்து கொண்டு சுற்றியிருப்பவர்கள் மீது மேலும் அன்பைப் பொழிய வேண்டும். அன்பு அதிகமானால் சிக்கல்கள் துண்டைக் காணோம் என்று ஓடி ஒளிந்து கொண்டுவிடும்.''''என் நண்பனின் மகள் விவாகரத்து...''''அவள் சில நாட்கள் ஆசிரியப் பணியாற்றுவாள். அந்தச் சமயத்தில் தன் மாணவர்கள் மேல் அன்பை பொழிவாள். அந்த அன்பு அவளுடைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துவிடும். உரிய காலத்தில் நல்ல மனம் கொண்ட ஒருவரைச் சந்திப்பாள். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். பல ஆண்டுகள் நிறைவாக வாழ்வாள்.''அம்பிகையே சொல்லிவிட்டாள் பின் அதற்கு அப்பீல் ஏது? அவளை மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் குறி சொல்ல வந்தவளைக் காணவில்லை.இன்னும் வருவாள்அலைபேசி: 80568 24024- வரலொட்டி ரெங்கசாமி