பேசும் தெய்வம் (21)
சித்தர்கள் இரும்பைத் தங்கமாக்குவார்கள்; ஆகாயத்தையே வில்லாக வளைப்பார்கள்; அவர்களால் முடியாததே இல்லை. இப்படி சித்து வேலை செய்பவர்கள் சித்தர்கள் என்பர். எளிமையாகச் சொன்னால் மனதை தன் வசப்படுத்தியவர்கள் சித்தர்கள். மனதின் வசமானவர்கள் சாதாரண மனிதர்கள். வாருங்கள்! நம்மையே ஆட்டிப் படைக்கும் நவக்கிரகங் களை ஆட்டிப் படைத்த ஒரு சித்தரை தரிசிக்கலாம். ஆம்...! இடைக்காடர் தான் அவர்.ஆடு மேய்ப்பது அவர் தொழில். ஆனால் உலகப் பற்றில்லாமல் வாழ்ந்தார். தெய்வீக இயல்பு கொண்ட அவரைத் தேடி தெய்வம் வந்து அருள்புரியாதா என்ன? ஒருநாள் அருளில் சிறந்த நவநாத சித்தர், அவர் முன் எழுந்தருளினார். ஆனால் இடைக்காடருக்கு நவநாதர் குறித்து ஏதும் தெரியாது. நவநாதரை வரவேற்று தர்ப்பை புல் ஆசனமிட்டு அமரச் செய்தார் இடைக்காடர். ஆட்டுப்பாலைக் கறந்து நவநாதரின் முன் வைத்து, ''சுவாமி! மறுக்காமல் இதை ஏற்று அருள் புரியுங்கள்'' என வேண்டினார்.ஏழையாக இருந்தாலும், அடுத்தவரை உபசரிக்கும் இடைக்காடரின் பண்பும், பணிவும் நவநாதரைக் கவர்ந்தது. பாலைக் குடித்த பின் நவநாதர் உபதேசம் செய்தார். ''இடைக்காடா! அன்புக்கயிறால் என்னைக் கட்டி விட்டாய். நான் சொல்வதைக் கேள். கற்பதும், கேட்பதும் அனைவருக்கும் சுலபம். ஏதோ கொஞ்சம் படித்து விட்டு, அதைக் கொண்டு வாய்ப்பந்தல் இடுவது உலகின் வழக்கம். நீயாவது அதிலிருந்து விலகி அனைவருக்கும் நன்மை செய்'' என சொல்லி காற்றில் கலந்தார் நவநாதர். இடைக்காடரின் நாடி நரம்பெல்லாம் குரு உபதேசம் நிறைந்தது. அதன் பலனாக நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என மூன்று காலங்களும் இடைக்காடரின் கண் முன் காட்சிகளாக விரிந்தன. உயிர்களை வாழ வைக்கும் கிரகங்கள் எல்லாம், தாழ வைக்கும் நிலைக்கு தலைகீழாக மாறும் காலம் நெருங்கியது.ஆம்! மண்ணில் மழைவளம் நிற்கப் போவதை அறிந்து கொண்டார். 'மக்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுகிறார்கள். உள்ளத்தளவில் யாரிடமும் அன்பு இல்லை. இதனால் குற்றங்கள் பெருகின. உண்மையான பக்தி எண்ணம் ஒருவரிடமும் இல்லை. ஒருவருக்கொருவர் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். நவக்கிரகங்களின் நிலை மாற்றத்திற்கு இதுவே காரணம்' என்பதை எண்ணி இடைக்காடர் கலங்கினார்.''இந்நிலை நீடித்தால் பன்னிரண்டு ஆண்டு காலம் பஞ்சம் வருமே'' எனப் புலம்பியபடி ஊரைச் சுற்றி வந்தார். எங்கும் எருக்கஞ் செடிகள் முளைத்திருக்க கண்டார். ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, தம்மிடமிருந்த ஆடுகளை எருக்க இலைகளை தின்ன பழக்கப்படுத்தினார். குறுந்தானியமான 'குருவரகு' என்பதைச் சேற்றோடு கலந்து பிசைந்து, அந்த மண்ணைக் கொண்டு சுவர்கள் எழுப்பினார். அவர் இப்படி செய்யக் காரணம் என்ன தெரியுமா...எருக்க இலைகளைத் தின்றால் ஆடுகளுக்கு உடலில் அரிப்பு உண்டாகும். அதை போக்க, உடம்பை மண் சுவரில் தேய்க்கும். அப்போது அதில் இருக்கும் தானியம் கீழே உதிரும். அது பஞ்ச காலத்தில் உதவியாக இருக்கும் என்பதால் தான். குடிக்க நீரின்றி பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என உயிரிழப்பு அதிகரித்தது. எருக்க இலைகளைத் தின்னப் பழகிய இடைக்காடரின் ஆடுகள் மட்டும் பிழைத்தன. தினவெடுத்த போது சுவரில் தேய்த்ததால் குருவரகு உதிர்ந்தது. இடைக்காடருக்கும் உணவு கிடைத்தது. இடைக்காடரின் சாமர்த்தியத்தை அறிந்த நவக்கிரக நாயகர்கள் அவரைக் காண பூலோகம் வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், குருவரகு கஞ்சியும், ஆட்டுப்பாலும் வழங்கி மகிழ்ந்தார். 'உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்பது போல சாப்பிட்ட களைப்பு தீர நவக்கிரகங்கள் சற்று கண் அயர்ந்தனர். இது தான் சரியான நேரம் என எண்ணிய இடைக்காடர், மழை பெய்வதற்கான கிரக அமைப்பிற்கேற்ப, அவற்றை இடம் மாற்றச் செய்தார். உடனே ஆகாயத்தில் மேகங்கள் கூடின. இடி, மின்னலுடன் பெரும் மழை கொட்டியது. ஏரி, குளங்கள் நிரம்பின. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. கண் விழித்த நவக்கிரகங்கள் இடைக்காடரைத் தேடினர். ஒருபுறத்தில் இடைக்காடர் கண்மூடித் தவமிருக்கக் கண்டனர். 'கால மாறுபாட்டை உணர்ந்த உத்தமர். மழைக்காக நம்மை மாறுபடுத்தி வைத்த சித்தர். உணவிட்டு உபசரித்தவர்' என தீர்மானித்த நவக்கிரகங்கள் அவரின் தவத்திற்கு இடையூறு செய்யாமல் இருப்பிடம் திரும்பினர். இடைக்காடரின் சாமர்த்தியத்தால் மழை பெய்ததை அறிந்த அனைவரும் புகழ்ந்தனர். அவரை இகழ்ந்தவர் கூட, உபதேசம் பெற நெருங்கி வந்தனர். ''உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யாமல், வாழப் பழகுங்கள்! கார்மேக வண்ணனை ஒருபோதும் மறவாதீர்கள்! சிவ சிதம்பர நாதனை எப்போதும் சிந்தனை செய்யுங்கள்! ஏழை(ராமர்), இடையன் (கண்ணன்), இளிச்சவாயன் (நரசிம்மர்) இவர்களுக்குத் திருவிழா நடத்துங்கள்!'' என்று உபதேசித்தார்.சிலகாலம் கழித்து, மற்றவர் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக மறைந்தார். ஆனால் இன்றும் அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை வழிபட்டால் நாடு செழிக்கும். தொடரும்அலைபேசி: 97109 09069பி.என். பரசுராமன்