உள்ளூர் செய்திகள்

இது ஒரு நதியின் கதை

முனிவர் ஒருவர் கங்கா நதிக்கரைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த சிலர், ''தாயே! என் பாவம் போக்கியருள வேண்டும்'' எனச் சொல்லியபடி நீராடினர். '' கங்கையில் நான் நீராடினால் இவர்களின் பாவம் என்னைச் சேருமே'' என தயங்கினார் முனிவர். ''சுவாமி...கங்கையில் நீராட ஏன் தயங்குகிறீர்கள்?'' எனக் கேட்டாள் அங்கிருந்த பெண். முனிவர் தன் எண்ணத்தை தெரிவித்தார். ''சுவாமி! இந்த கங்கை கடலில் கலக்கிறது, எனவே பாவம் எல்லாம் கடலைச் சென்றடையும். நீங்கள் தாராளமாக நீராடலாம்'' என்றாள். உடனே முனிவர் கடலரசனான வருண தேவனை நோக்கி ஜபிக்கவே அவரும் காட்சியளித்தார். ''வருண தேவா...கங்கையில் சேர்ந்த பாவம் எல்லாம் கடலாகிய உன்னை வந்தடைகிறது. அப்படியிருக்க கடலில் நீராடுதல் எப்படி புனிதமாகும்?'' எனக் கேட்டார்.''முனிவரே! கடலைச் சேர்ந்த பாவம் அங்கேயே தங்குவதில்லை. அவற்றை சூரியன் ஆவியாக்கி உறிஞ்சி விடும் என்பதால் கடல் நீராட ஏற்றது தான்'' என்றார் வருணன். அதன்பின் சூரியனை வரவழைத்த முனிவர், ''சூரிய தேவனே! கடலின் பாவத்தை கதிர்களால் ஈர்க்கும் போது உனக்கு பாதிப்பு ஏற்படாதா?' எனக் கேட்டார்.'' முனிவரே, ஆவியாக்கப்படும் பாவம் என்னை தீண்ட முடியாது. காரணம் அளவுக்கு மீறிய உஷ்ணம் கொண்டவன் நான். அவை மேகங்களாகி வானத்திலேயே தங்கி விடும்'' என்றார்உடனே முனிவர் மேகத்திடம் விளக்கம் கேட்டார். அது ''முனிவரே... சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட பாவம் எல்லாம் மேகமாகிய என்னில் தங்கினாலும், மழை பொழியும் போது மீண்டும் பூமியை வந்தடையும். எனவே பூமாதேவியிடம் கேளுங்கள்'' என்றது. முனிவர் பூமாதேவியை சந்தித்தார். '' முனிவரே! மேகம் அளித்த பாவத்தை நான் ஏற்க மாட்டேன். அவை மரம், செடிகளின் வேரால் உறிஞ்சிப்பட்டு காய், கனிகளாக மாறும். அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் உண்ணும் போது மீண்டும் அதற்கு உரியவர்களை மீண்டும் சேரும்'' என்றாள்.முனிவர் திடுக்கிட்டார்.'' முனிவரே! நீங்கள் கங்கையைச் சந்தித்தால் உண்மை விளங்கும்'' என்றாள் பூமாதேவி. மீண்டும் கங்கைக்கரையை அடைந்த முனிவர், ''தாயே! மனிதர்கள் தொடர்ந்து நீராடுவதால், தங்களுக்கு பாவச்சுமை அதிகம் ஏற்படாதா?'' எனக் கேட்டார். ''ஒருமுறை எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. சிவபெருமானிடம் தெரிவித்த போது, ''கங்கா! பாவிகள் மட்டும் உன்னிடம் நீராடுவதில்லை. ஞானிகள், துறவிகளும் பூமியில் வாழ்கிறார்கள். அவர்கள் நீராடும் போதெல்லாம் உன் பாவச்சுமை தீரும். அவர்களின் திருவடி பட்டால் கொடிய பாவமும் பறந்தோடும்' என்றார். ''உமது சந்தேகம் இப்போது தீர்ந்ததா?'' என முனிவரிடம் கேட்டாள் கங்கை. உண்மையை உணர்ந்த முனிவரும், ஆற்றுக்குள் இறங்கினார்.