எழுதப்படாத விதி
தியானத்தில் இருந்த சிவபெருமான் முன் கோபத்துடன் வந்து நின்றது எருமை. அது ஏன் இங்கு வந்தது என தெரிந்திருந்தும் கயிலாயத்திலுள்ள பூத கணங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார் சிவபெருமான்.அதனிடம், வாரும்...எருமையாரே எப்படி இருக்கிறீர் எனக் கேட்டார் சுவாமி. அதற்கு மனிதர்கள் எங்களை மதிப்பதே இல்லை. சேற்றில் புரளும் எருமையே, சூடு சொரணையில்லாத எருமையே, எருமை போல அசையாத ஜென்மமே, மழையிலும் அசையாமல் நிற்கும் எருமையே என அவர்கள் சொல்லில் அகப்பட்டு காரணமில்லாமல் எங்கள் இனமே அவமானப்படுகிறது. இதை நினைத்து பார்த்தாலே மன உளைச்சல் அடைகிறோம் என்றது எருமை. வருத்தப்படாதீர் எருமையாரே! என்னை கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் தின்னும் பெருமாள், மண்டை ஓடு மாலை அணிந்தவன், சாம்பல் பூச்சுக்காரன் என பலவாறு அழைக்கின்றனர். அவர்கள் அவ்வாறு கூறும் சொற்களை காதில் வாங்கினால் தினசரி வேலைகளை என்னால் சரிவர பார்க்க முடியுமா என்றார் சிவபெருமான்.பசுக்களைப் போலத்தான் பால், தயிர் என நாங்களும் தருகிறோம். ஆனால் அதற்கு மட்டும் தான் மதிப்பும் மரியாதையும்; எங்களுக்கு எல்லாம் கிடையாதா என நேரடியாக கேட்டது எருமை. சிவபெருமான் அதனை ஆசிர்வதித்து, பிரம்மன் படைப்பில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் கிடையாது. உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன். அதற்கு முன் நீ ஒரு உறுதியளிக்க வேண்டும். இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தை கை விடு. பசுவைப்போல மதிக்கப்படுவாய் என்றார் சிவபெருமான். அதை கேட்ட எருமைக்கு தலையில் கல்லை போட்டது போல இருந்தது. பரம்பொருளே! நீங்கள் கேட்கும் உறுதியை என்னால் தர இயலாது. மனிதர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் இன்பத்தை சிறிதளவேனும் பலியாக்க முடியாது. சேற்றில் புரள்வது எங்கள் இனத்திற்கே உண்டான குணம். அதை விட்டுக் கொடுத்து நாங்கள் அந்த மரியாதையை பெற வேண்டியதில்லை. தங்கள் ஆசி ஒன்றே போதும் என சொல்லி சத்தமில்லாமல் நகர்ந்தது. இதையெல்லாம் கவனித்த அம்பிகை, எருமையார் 'கேட்டதில் என்ன தவறு இருக்கிறது நீங்கள் அவர் கேட்ட வரத்தை ஏன் கொடுக்கவில்லை' என சுவாமியிடம் கேட்டாள். வாழ்வில் சாதனை செய்ய வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்ய அதற்கு மனம் இல்லை. அதனால் அது வழக்கமான நிலையில் வாழ்கிறது என்றார் சிவபெருமான். அதை கேட்டு ரசித்துக்கொண்டு இருந்தாள் அம்பிகை.